ஹாய் சுட்டீஸ்!
எல்லாரும் எப்டி இருக்கீங்க? ஸ்கூல் போகறதுக்கு ரெடியாகிட்டீங்களா?
உங்க டீச்சர்ஸ், ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் பார்க்கப் போற குஷில இருக்கீங்கதானே?! எனக்கு தெரியும்! எல்லாம் இதே மாதி எப்பவும் குஷியா ஜாலியா இருங்க.
இவ்ளோ நாளா ஆன்லைன் க்ளாஸ் அட்டன்ட் பண்ணி போர் அடிச்சிருக்கும்.. இனிமே ரெகுலர் க்ளாஸ்தான்.. எல்லாரும் ஜாலியா ஸ்கூலுக்கு போய்ட்டு வாங்க. நல்லா படிங்க! சமத்தா இருங்க!
சரி! நாம நம்ம கதைக்கு போகலாமா?
***********
ஸ்கூல்ல நடந்த நோட்புக்ஸ் மற்றும் சாப்பாட்டு திருட்டை எப்டி நம்ம குட்டி பசங்களான – விக்கி, கரண், யாஷிகா, பத்மினி, ஜீவன் – இவங்களால தடுக்க முடிஞ்சது? இந்த திருட்டை எல்லாம் யார் செய்ததுன்னு உங்களால கண்டுபிடிக்க முடிஞ்சதா சுட்டீஸ்!?
காவல்துறையாலேயே தடுத்து நிறுத்த முடியாத இந்தத் திருட்டை பள்ளி மாணவர்கள் எப்படி தடுத்து நிறுத்தினார்கள் என்று மாணவர்களிடமே கேட்டனர்.
மாணவர்களின் தலைவனான பதினொன்றாவது படிக்கும் கோகுல்நாத்,
“இப்ப வரை இந்த திருட்டு எப்டி நடந்தது? யார் திருடினாங்கன்னு எங்களுக்கும் தெரியலதான். ஆனா இப்ப திருட்டு நடக்கறதில்ல! அது மட்டும் உறுதி! இத சாதிச்சது நாங்க இல்ல! ஆரம்பத்தில தங்களோட நோட்புக்ஸ் காணம்னு புகார் குடுத்த விக்கி, கரண், யாஷிகா, பத்மினி, ஜீவன் இவங்க குடுத்த ஐடியானாலதான் இந்த திருட்டை தடுக்க முடிஞ்சது.” என்றான்.
“என்ன? அந்த குட்டி பசங்களா? அவங்க என்ன பண்ணினாங்க?” என்று தலைமை ஆசிரியை ஜெயலக்ஷ்மி கேட்டார்.
“பசங்ககிட்ட நீங்களே கேளுங்க மேடம்?” என்று கோகுல்நாத் கூறினான்.
தலைமை ஆசிரியை அவர்களை அழைத்து வரச் சொன்னார்.
விக்கி, கரண், யாஷிகா, பத்மினி, ஜீவன் இவர்கள் ஐவரும் பயந்து நடுங்கிக் கொண்டே அவர் முன்னால் வந்து நின்றனர்.
“வெரி குட் பசங்களா! நீங்க குடுத்த ஐடியானாலதான் நம்ம ஸ்கூல்ல நடந்த சாப்பாட்டு திருட்டை தடுக்க முடிஞ்சதாமே? அப்டி என்ன பண்ணீங்க?” என்று அவர் கேட்டதும் ஐவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
ஐவருக்கும் இன்னும் பயமும் நடுக்கமும் குறையவில்லை. இருப்பினும் அதைவிட மகிழ்ச்சியின் அளவு அதிகமாகியது.
“மிஸ்! ஒருத்தங்க, தனக்குத் தேவையான ஒரு பொருள் இல்லன்னா அது வேணும்னு தேடுவாங்க.. அது எங்க கிடைக்கும்னு பார்ப்பாங்க! அது கிடைக்கற இடத்தில போய் விலை விசாரிப்பாங்க! விக்கறவங்க சொல்ற விலை தனக்கு கட்டுப்படியாகலன்னா பேரம் பேசுவாங்க.. அப்பவும் சரி வரலன்னா அத வாங்காம விடுவாங்க.. ஆனா தேவைப்படற பொருள் ரொம்ப ரொம்ப தேவையான அத்தியாவசியமான பொருளா இருந்தா அதுக்காக போராடுவாங்க; இல்லன்னா திருடுவாங்க! அப்டிதானே?” என்று விக்கி கேட்டு அங்கிருந்த எல்லா ஆசிரிய ஆசிரியைகளின் முகத்தையும் பார்த்தான்.
தலைமை ஆசிரியை ஜெயலக்ஷ்மி ஆமாம் என்பது போல தலையாட்டினார்.
“நம்ம கிட்டயிருந்து பணம் காசெல்லாம் திருடு போகல.. ஆனா நோட்புக்ஸ் மற்றும் சாப்பாடுதான் காணாம போயிருக்கு! கரெக்ட்டா?” என்று கேட்டாள் பத்மினி.
“ஆமா.. ஆனா..” என்று ஆசிரியை வசந்தி ஆரம்பிக்க,
“இருங்க வசந்தி! பசங்க என்ன சொல்றாங்கன்னு முதல்ல கேப்போம்!” என்றார் ஜெயலக்ஷ்மி.
“அவங்களுக்கு பணம் காசு தேவைப்படல.. நோட்புக்ஸ் மற்றும் சாப்பாடுதான் தேவைப்பட்டிருக்கு..” என்றான் விக்கி.
“நோட்புக்ஸ்ல நாம என்ன செய்வோம்? எழுதுவோம்! அப்ப யாரோ எழுதறதுக்காக நம்ம நோட்புக்ஸை எடுத்திருக்காங்க. அதே மாதிரி யாரோ சாப்பிட நம்ம சாப்பாட்டை எடுத்திருக்காங்க!” என்றாள் பத்மினி.
“அதனால நாங்க பெரிய கிளாஸ் அண்ணா அக்காகிட்டல்லாம் சொல்லி எங்க பேக்ல எக்ஸ்ட்ராவா புது நோட் பென்சில் பேனா எல்லாம் வாங்கி வெச்சிக்க ஆரம்பிச்சோம்! தினமும் எங்க வீட்ல இருந்து எக்ஸ்ட்ராவா சாப்பாடு எடுத்துகிட்டு வர ஆரம்பிச்சோம்.. அதாவது, திருடறவங்களுக்கு நாங்களே எங்க பொருட்களை கிஃப்டா குடுத்துட்டோம்!” என்றான் ஜீவன்.
“அதனாலதான் எங்களால இந்த திருட்டை தடுக்க முடிஞ்சது.” என்றாள் யாஷிகா.
“வெரி குட்!” என்று தலைமை ஆசிரியை ஜெயலக்ஷ்மியும்,
“ப்ரில்லியன்ட்!”
“க்ரேட் ஐடியா!” என்று மற்ற ஆசிரிய ஆசிரியைகளுகம் அவர்களைப் பாராட்டினார்கள்.
“ஆனா இந்த திருட்டை செய்யறது யாருன்னு இன்னும் தெரியலயே?” என்று வகுப்பாசிரியை வசந்தி சொல்ல, ஆமாம் என்பது போல மற்ற ஆசிரிய ஆசிரியைகள் தலையாட்டினார்கள்.
“அது எங்களுக்கும் தெரியல மேடம்!” என்றாள் பத்மினி. அவள் சொல்வது உண்மைதான் என்பது போல மற்ற குழந்தைகளும் தலையாட்டினார்கள்.
ஜெயலக்ஷ்மி மாணவர்கள் அனைவரையும் தத்தம் வகுப்புகளுக்கு திரும்பிச் செல்லுமாறு சொல்லிவிட்டு ஆசிரியர்கள் புறம் திரும்பினார்.
“வெல்! திருடங்கள பிடிக்க முடியலன்னாலும் திருட்டு எப்படியோ தடுத்து நிறுத்தப்பட்டிருக்கு! நம்ம குழந்தைங்க மனசில மற்றவங்களுக்கு உதவி செய்யணும்ங்கற நல்ல எண்ணம் விதைக்கப்பட்டிருக்கு! கூடிய சீக்கிரம் இந்த திருட்டை செய்தது யார்ன்னு தெரியவரும்னு நம்புவோம்! எல்லாரும் உங்க வேலைய பாருங்க!” என்று கூறி அவர்களையும் அனுப்பினார்.
எல்லா ஆசிரிய ஆசிரியைகளும் தத்தம் பணிக்குத் திரும்பினார்கள்.
ஜெயலக்ஷ்மி,
‘அப்டி யார் இந் திருட்டை எல்லாம் இவ்ளோ செக்யூரிட்டியையும் மீறி இத்தன சாதுர்யமா செய்திருப்பாங்க! ம்.. ஒண்ணும் புரீலயே!’ என்று யோசித்து யோசித்து குழம்பிப் போனார்.
அன்றைய வகுப்புகள் முடிந்து மாணவ மாணவிகளும் ஆசிரியப் பெருமக்களும் சென்று விட்ட பின் பள்ளியை சுத்தம் செய்யும் ஆயாக்கள் மற்றும் வேலையாட்கள் எல்லாம் பேசியபடியே வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
“விசயம் தெரியுமா? நம்ம பள்ளிகூடத்தில படிக்கற பசங்களோட நோட்டு புக் எல்லாத்தியும் ஆரோ திருடினாங்களே.. அவங்கள புடிக்கவே முடீலயாமே?!” என்று ஒரு ஆயா கேட்க,
“ஆமா! ஆனா இப்ப ஒரு பொருளும் திருட்டு போகறதில்ல! அது மட்டும் உறுதியா சொல்லிக்கறாங்க!” என்று மற்றொரு ஆயா சொன்னாள்.
“ஆமா! அப்டி யார் தான் இத செய்தாங்க?” என்று வேறு ஒரு ஆயா கேட்க,
“தெர்லயே! ஆனா யாரோ ரொம்ப வேண்டப்பட்டவங்கதான் இத செய்திருக்காங்கன்னு மட்டும் நல்லா புரியுது!” என்று முதலாவது ஆயா சொல்லிக் கொண்டாள்.
“ம்.. ம்.. சீக்கிரம் வேலைய முடிங்கம்மா! நா ஸ்கூல பூட்டணும்!” என்று வாச்மேன் அவர்களை விரட்டினார்.
அவர்களும் பேச்சைக் குறைத்துவிட்டு வேகமாக வேலையை கவனித்தனர்.
எது எப்படியோ?! ரொம்பச் சின்ன விஷயம்தான் என்றாலும் இப்போது திருட்டு நடைபெறவில்லை என்பதே அவர்கள் அனைவருக்கும் மிகவும் நல்ல விஷயமாகத் தோன்றியது.
♦♦♦♦
என்ன சுட்டீஸ்? கதை உங்களுக்கெல்லாம் பிடிச்சுதா?
ஒரு வேளை உங்களால இந்த திருட்டையெல்லாம் செய்தது யார்ன்னு கண்டு பிடிக்க முடிஞ்சதுன்னா கமென்ட்ல சொல்லுங்க சுட்டீஸ்!
நான் அடுத்த இதழ்ல வேற ஒரு சுவாரசியமான கதையோட உங்கள சந்திக்கறேன்! அது வரைக்கும்,
டாட்டா! பை! பை!
👋👋👋👋👋👋👋👋
நான் ஒரு இல்லத்தரசி. என் மனவுளைச்சலையும் இறுக்கத்தையும் விரட்டும் முயற்சியாக என் எழுத்தார்வத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் சராசரிப் பெண். இணையத்தில் சிறுகதைகளும் தொடர்கதைகளும் எழுதி வருகிறேன். இரண்டு தொடர்கதைகள் புத்தகமாக வெளி வந்துள்ளன. தினமலர் வாரமலரில் என் சிறுகதைகள் வெளி வந்துள்ளன. பல இணையதளங்கள் நடத்திய பல சிறுகதைப் போட்டி, கவிதை, கட்டுரை, செய்யுள் எழுதும் போட்டிகளில் பங்கு கொண்டு முதல் பரிசினை வென்றிருக்கிறேன்.