வணக்கம் பூஞ்சிட்டுகளே..

எல்லாரும் எப்படி இருக்கீங்க..

எங்க பாத்தாலும் ஒரே மழை.. வெள்ளம்! எல்லாரும் வீட்டுக்குள்ள பத்திரமா இருக்கீங்க தானே.. ஒரு முக்கியமான விஷயம், மழை தண்ணீர் தேங்கி இருக்கிற பகுதிகளிலோ, தெருக்களிலோ, வீட்டு அருகில் இருக்கும் பகுதிகளிலோ நடக்க நேரும் போது, பெரியவர்களோட துணையோடையும் அவர்களோட அறிவுறுத்தலோடவும் கவனமாகவும் நிதானமாகவும் நடக்கணும். ஏன்னா இந்த மாதிரி இடங்களில் உடைந்த மின் கம்பிகள், மூடப்படாத சாக்கடை குழிகள் இருக்கும்.. அதனால எப்பவும் கவனமும் எச்சரிக்கையும் எப்போதும் நிதானமும் மிக மிக அவசியம். சரியா குட்டீஸ்?!

இந்த மாதிரி கன மழை, வெள்ளம், புயல்  போன்ற இயற்கை நிகழ்வுகள் நம் அன்றாட வாழ்வை பெரிதும் பாதித்தாலும் நம் குடும்பங்களுக்கு உள்ளேயும் சமூகத்துக்கு உள்ளயேயும் ஒருத்தருக்கு ஒருத்தர் இருக்கிற அன்பையும் வேற்றுமையின்றி மனித நேயத்தையோட ஒருத்தருக்கு ஒருத்தர் உதவுகிற பண்பையும் வெகுவா வெளிப்படுத்தும். இந்த நெருக்கடியான நேரத்துல,  சென்னை மற்றும் கடலோர மாவட்டங்கள்ல பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கால நேரம் பாக்காம உதவி புரிஞ்சிட்டு இருக்கிற தன்னார்வலர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு மனதார நன்றி சொல்லிட்டு நம்ம கதை கேட்க போகலாமா…

முன்னொரு காலத்துல அப்படின்னு கதைய சொல்ல ஆரம்பிச்ச அது மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏன்னா இப்போ நாம தெரிஞ்சுக்க போகிற ஊர்களோட பழமை மிக மிக தொன்மையானது. நாம கதை கதையாம் பகுதில முன்னரே சொன்னது போல, நம் ஊர்களின் முன் பின் பெயர்களை வெச்சே ஊரோட கதையையும் ஊர் உருவாவதற்கான காரணத்தையும் ஓரளவு நம்மள யூகித்து அறிந்து கொள்ள முடியும். அந்த வகைல ‘திரு’ ன்னு ஆரம்பிக்கிற ஊர்களின் கதைகளுக்கு பின்னாடி பொதுவாகவே  கடவுள் மீதான பாடல்கள் பாடப்பட்ட தொன்மையான தளங்களை கொண்ட கதை பின்னணி இருக்கும். திரு என்றாலே நம் தமிழ் மொழில கடவுள் என்றொரு அர்த்தமும்  உண்டு. அப்படி திரு என்று ஆரம்பிக்கும் சில ஊர்களோட கதைகளை இன்னைக்கு பாப்போம்.

முதலில் நாம தெரிஞ்சிக்க போகிற ஊர், திருவாரூர்.

இதனை திரு + ஆர்+ஊர்  என்று பிரிக்கலாம்.

இதில் ஆர் என்பதற்கு அத்தி மரங்கள் சூழ்ந்த ஊர் என்று பொருள். திருவார் என்றாலே தேர் .

thiruvarur 1

தமிழகத்துலயே மிக பிரம்மாண்டமான அழகான தேர் உலா, திருவாரூர் தேர் உலா தான்.  திருவாரோட தொன்மை சோழர் காலத்திலிருந்தே வரலாற்றில் தொடர்ந்து  பதிய பட்டிருக்க்கிறது . இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த திருவாரூர் சோழர் காலத்தில் இருந்த ஐஞ்சு தலைநகரங்களில் ஒன்றாகவும் இருந்துச்சாம். அதோட நம்ம எல்லாருக்கும் தெரிந்த ‘மனு நீதி சோழ’ மன்னரோட கதை நடந்தது திருவாரூரில் தானாம்.

thiruvarur 2

இதனை சிறப்பிக்கும் அடிப்படையில பசுவிற்கு நீதி கிடைக்க தன்னுடைய மகனையே தண்டிக்க துணிஞ்ச  நீதி வழுவாத மனு நீதி சோழரோட பேராண்மைக்கு எடுத்துக்காட்டா அதே இடத்தில் அந்த காட்சியை படமாக்கிய ஒரு அழகான கல் சிற்பம் வடிவமைக்கப்பட்டு அங்கே ஒரு பூங்காவும் நிறுவப்பட்டிருக்கு. ஆனா அந்த பூங்கா இன்னைக்கு கேட்பாரற்று கிடப்பது வேதனையே.

திருவாரூரோட இன்னொமொரு சிறப்பு தியாகேசர் கோவில்.

thiruvarur 3

 கண்ணை கவரும் சிற்பங்களோட பழமையும் நீங்காத வளமையும் கொண்டது தியாகேசர் கோவில். இந்த கோவிலை கட்டுவதற்கு முதல்ல அடித்தளம் போட்டது, நம்ம ராஜராஜ சோழரோட அண்ணாவான ஆதித்ய சோழராம். அதனை தொடர்ந்து ராஜா ராஜா சோழர் இதனை கட்டி எழுப்பிருக்கார். அவரை தொடர்ந்து அவரது மகனான ராஜேந்திர சோழர் கோவிலை மென்மேலும் மெருகேற்றிருக்கிறார். சோழர் காலத்துல சம்பந்தர் , நாவுக்கரசர், சுந்தரர் என மூவராலும் பாடல் பெற்ற தளம் திருவாரூர். இது மட்டுமில்லாம ராஜராஜ சோழருக்கு, தஞ்சை ப்ரஹதீஸ்வரர் கோவில் கட்டுவதற்கு, மிக பெரிய ஊக்கமா இருந்தது தியாகேசர் கோவில் தானாம்.

தியாகேசர் கோவிலோட மிகப்பெரிய சிறப்பு, கமலாலயம் குளம். மிகப்பெரிய கமலாலய குளத்தின் அழகை காண இரு கண்கள் போதாதாம்..

thiruvarur 4

சோழர் காலத்துக்கு பிறகு பாண்டிய ஆட்சிக்குள் வந்து பிறகு ஹோசலையர்கள், நாயக்கர்கள்,  விஜய நகர மன்னர்கள்ன்னு ஒவ்வொரு ஆட்சி காலத்துலயும் உட்பட்டு ஒருவழியா பிரிட்டிஷ் ஆட்சிக்கு பிறகு தஞ்சையோட இணைந்து கொண்டது திருவாரூர்.

திருவாரூரோட மற்றுமொரு சிறப்பு, கர்னாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகள்ன்னு சொல்லப்படுகிற தியாகராஜ பாகவதர், முத்துஸ்வாமி தீட்ஷிதர் சியாமா சாஸ்திரிகள் பிறந்த இடமாக கொண்டாடப்படுவது.  தியாகராஜர் பாகவதர் வாழ்ந்த இடத்தை நினைவு இல்லமாக புதுப்பிக்கும் முயற்சிகளும் நடந்துகொண்டு வருவதும் ஒரு சுவையான செய்தி.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த திருவாரூர் பத்தி நம்ம கதை கதையாம் காரணமாம் பகுதியில சொன்னதை போல, நம்ம தமிழகத்துல திரு என்று ஆரம்பிக்கும் நிறைய ஊர் கதைகளும் இருக்கு. மீண்டும் அடுத்த மாதம் இதையே போன்றதொரு கதையோட உங்களை சந்திக்கறேன்.. அதுவரை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருங்க குட்டீஸ்..

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments