வணக்கம் பூஞ்சிட்டுகளே..

பூஞ்சிட்டு செல்லங்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்..

எல்லாரும் வீட்டுல சந்தோஷமா சாமி கும்பிட்டு, நண்பர்கள் உறவினர்கள் எல்லார்கிட்டயும் மகிழ்ச்சியை பகிர்ந்து அதோட வயிறு நிறைய  கொழுக்கட்டையும் சுண்டலும் நல்லா சாப்பிட்டு உற்சாகமா இருக்கீங்கன்னு நம்புறோம்..

இந்த கொழுக்கட்டைக்கு நம்ம வாழ்க்கைக்கும் ஒரு தொடர்பு இருக்கு குட்டீஸ். கொஞ்சம் உத்து பார்த்தா நம்ம வாழ்க்கையே ஒரு கொழுக்கட்டை தான்னு புரியும். வெளியே இருக்கிற மிருதுவான ஆனா வலிமையான கொழுக்கட்டை மாதிரி நம்ம  உடலை ஆரோக்கியமா, எதையும் தாங்கும் வலிமையோடவும், உள்ளாற இருக்கற பூரணம் மாதிரி எப்போதும் இனிமையான எண்ணங்களோடு மனச ரம்மியமாவும் லேசாகவும் வெச்சுக்கிட்டா ஒவ்வொரு நாளும் உற்சாகம் தான்! ஏதேது கொழுக்கட்டை தத்துவமா இருக்கேன்னு  பாக்கறீங்களா? அது ஒண்ணுமில்ல, எங்க வீட்டு பிள்ளையார் டயட்டாம். அதனால அவருக்கு பதிலா நானே நிறைய கொழுக்கட்டை சாப்பிடவேண்டியதா போச்சு.. ஒன்னு ரெண்டு மூணுன்னு ரயில் பெட்டி எண்ணுறமாதிரி கொழுக்கட்டை உள்ள போன சமயத்துல உதித்த தத்துவம் தான் இது..

எப்படி நல்லா இருக்கா

சரி இப்போ இதே கொழுக்கட்டையோட .. சாரி.. இதே ஜோரோட நம்ம கதைக்கு போகலாமா…?

வழக்கமா நம்ம பகுதில ஊரு பேரை உக்காந்து அலசி ஆராய்ச்சி பண்ணுவோம். இந்த மாதம் கொஞ்சம் வித்தியாசமா ஒரு விஷயம் பண்ணலாம்ன்னு தோணுது..

அதுக்கு முன்னாடி உங்க கிட்ட ஒரு கேள்வி..

தமிழகத்தின் மூவேந்தர்கள் யார் ?

ஆஹ் ரொம்ப சரி! சேர சோழர் பாண்டியர். இந்த மூன்று குல மன்னர்கள் தான் மூவேந்தர்கள்ன்னு நாம இன்னைக்கும் போற்றி புகழுறோம்.

இதுல சோழர்களுக்கு எப்பவுமே ஒரு தனி சிறப்பும் பழமையும் உண்டு. அதற்குக் காரணம், சோழ மன்னர்கள் தங்களோட அரசாட்சியை அதுவரை தமிழகம் பார்க்காத எல்லைகளுக்கு மேலே எடுத்துட்டு போனதும், காலத்தால் அழிக்க முடியாத பல கட்டுமானங்களை உருவாக்கியதும் தான். உதாரணமா தஞ்சை பெரிய கோயில், கல்லணை, தாராசுரம் , கங்கை கொண்ட சோழபுரம் இதெல்லாம் 1000 ஆண்டுகளுக்கு மேல் இப்பவும் கம்பீரமா நின்னு சோழ மன்னர்களோடு வளத்தை நமக்கு கற்பிச்சிட்டு இருக்கு.

இவ்வளவு சிறப்பு மிக்க சோழ ஆட்சி எப்படி உருவானது.. எங்கெல்லாம் அவங்க ஆட்சி பண்ணினாங்கன்னு ஒரு குட்டி கால பயணம் செய்யலாமா?

chola kingdom

முதல்ல சோழ அப்படின்னா என்னன்னு தெரியணுமே!

சோழ என்ற சொல் சோறு என்பதிலிருந்து மருவி வந்திருக்கும் அப்படின்னு ஆராய்ச்சியாளர்கள் கருதுறாங்க. சோறு — சோள என மருவி சோழ என்று பேர் வந்திருக்க வேண்டும்ன்னு நிறைய மேற்கோள்களை ஆராய்ச்சியாளர்கள் காட்டுறங்க. அதற்குத் துணையா சோழ நாடு சோறுடைத்து என்ற வரியிலிருந்து சோறு அதாவது நெல்மணிகளால் நிரம்பி வளம் நிறைந்த பகுதியாக சோழ நாடு இருந்திருப்பதை நாம தெரிஞ்சிக்கலாம். இன்னும் சொல்லப்போனால் நெல் என்ற சொல்லுக்கு இன்னொரு பெயர் சொல். சொல் மருவி சோள என்றாகி ழகரம் மருவி சோழ என்றானதாம். இதுக்கு சான்றாக முற்கால சோழ மன்னர்களோட பெயர்களும் இருக்கிறதாம்.

உதாரணமா கிள்ளிவளவன் நெடுங்கிள்ளி, நலங்கிள்ளி, சில முற்கால சோழ மன்னர்களின் பெயர்கள்  இருக்கிற கிள்ளி மற்றும் வளவன் என்ற வார்த்தையிலுருந்து வளமான நிலத்தை உடையவன் அப்டிங்கிறதும் கிள் என்ற வார்த்தையிலிருந்து நிலத்திலிருந்து வேலை செய்பவன் அப்படிங்கற நேரடி அர்த்தத்திலிருந்து சோழ நாடு மிகவும் வளம் வாய்ந்த நாடு என்பது தெரிய வருவது மட்டுமில்லாம, அந்த வளமே அதற்கு பேரானதும் தெரிய வருகிறது.

இவ்வளவு வளமும் சோழ நாட்டிற்கு வருவதற்கு மிக முக்கிய காரணம், காவேரி ஆறு. காவேரி ஆறு சீறிப் பாய்ந்த இடமெங்கும் வயலும் வாழ்வும் வளமும் நிறைஞ்சு சோழ தேசமே சொர்க்கமாக இருந்ததைப் பல இடங்களில் நம்ம சங்க இலக்கிய பாடல்களில் இருந்து நாம தெரிஞ்சுக்க  முடியாது.

இப்படி காவேரி ஆறு கரைபுரண்டு ஓடின பகுதிகளை மையமா வெச்சு ஆட்சி செலுத்தின சோழர்கள் சில ஊர்களை தங்களோட தலைநகரமா ரொம்ப காலம் வெச்சிருந்தாங்க.. அதுல முக்கியமான ஊர்கள் உறையூர்,  பழையாறை, தஞ்சாவூர் என்ற ஊர்கள்.

இதுல தஞ்சாவூர் பத்தி நாம ஏற்கனவே நம்ம கதைகதையாம் காரணமாம் பகுதில பார்த்தது சுட்டிகளுக்கு நினைவு இருக்கும்ன்னு நம்பறேன்..

அதற்கு அடுத்தபடியா நாம உறையூர் பத்தி தெரிஞ்சுக்கலாம்,

uraiyur

உறையூர் என்றால் உறைவிடம் இருந்த ஊர் என்று அர்த்தம். உறைவிடம் என்ற வார்த்தையை இன்னும் தெளிவா சொல்லணும் என்றால் வீடு என்று சொல்லலாம். சோழ மன்னர்கள் தங்கள் உறைவிடமாகக் கருதி, தலைநகரமாக கொண்ட ஊர் என்பதால் உறையூர் என்ற பேர்ல வழங்கப்பட்ட ஊர்ன்னு அர்த்தம்.

உறையூருக்கு கோழியூர், உறந்தை, திருக்கோழியூர் என்ற பெயர்களும் உண்டாம். உறையூர் பற்றி நிறைய கல்வெட்டுகளும் வரலாற்று குறிப்புகளும் நம்ம கிட்ட கிடைச்சிருக்கு. இந்தக் குறிப்புகளில் இருந்து உறையூர் அந்த காலத்துலயே எவ்வளவு செல்வ செழிப்போடவும், கட்டுமான அழகோடவும், விஸ்தாரமாகவும், பிரம்மாண்டகவும் இருந்ததை பாக்க முடியுது. உதாரணமா உறையூர் மாட வீதிகளைப் பத்தி நிறைய பாடல்கள் வரலாற்றுப் புதினங்களில் இருந்து கிடைக்கும் சேதிகளால் உறையூரோட ஆளுமையை நாம தெரிஞ்சுக்க உதவுது.

pazhayarai

முற்கால சோழ தேச தலைநகரமான உறையூரை போலவே புகழ் பெற்று விளங்கியது பழையாறை. இது இடைக்கால சோழ தேசத்தின் தலைநகரமாக இருந்துச்சு. தென்காவேரி கரையில் அமைந்த உறையூரைப் போலவே, காவேரி ஆற்றின் பல கிளையாறுகளோடு வளத்தால் உருவான சிறு சிறு ஊர்களோட தொகுப்பே பழையாறை அப்படின்னு சொல்றாங்க. பழைய ஆறு – பழைய ஆறை என்றாகியிருக்கலாம் என நம்ம வரலாற்று ஆய்வாளர்கள் சொல்றாங்க. பழையறையோட இன்னொரு பெயர் ஆயிரத்தள்ளி என்பது தான். ஆயிரத்தள்ளி அப்படின்னா ஆயிரம் கோயில்கள் கொண்ட ஊர் என்று அர்த்தம். பழையாறை பற்றி சைவ நூல்கள்ல பாடி இருக்கிறது வெச்சு பார்க்கும் போது பழையாறை அந்த காலத்துல மிகவும் புகழ் பெற்ற ஊராக இருந்திருக்கும்னு நமக்குத் தெரிய வருது.

கால மாற்றத்தால இன்னைக்கு சிறிய ஊர்களா மாறிப்போயிருக்கிற உறையூரும் பழையாறையும் ஒரு காலத்துல சோழ மன்னர்கள் வலம் வந்த வரலாற்று சுவடுகள் தாங்கின ஊர்கள் என்பதை நினைச்சு பாக்கவே பிரமிப்பா இருக்கு. வரலாறோட சுவாரஸ்யமே இது தான். இன்றைய மணல்மேடுகள் பழங்காலத்து மாட மாளிகைகள். இன்றைய மாட மாளிகைகள், வருங்காலத்துக்கு வரலாற்று பிரதிகள்!

என்ன குழந்தைகளே, சோழர் காலப் பயணம் நல்லா இருந்ததா.. அதோட சோழர் ஊர்களை பத்தியும் அதோட ஆரம்ப வரலாறு பத்தியும் நல்லா தெரிஞ்சுக்கிட்டிங்களா…

இதே மாதிரி அடுத்த மாதமும் ஒரு நல்ல செய்தியோட உங்கள சந்திக்கிறேன்.. அதுவரை எல்லா பூஞ்சிட்டுகளும் சந்தோஷமா உற்சாகமா ஒவ்வொரு நாளும் பொன்னாளாக ஆரோக்கியமாக அமைந்திட வாழ்த்துக்கள்.. வரட்டுமா செல்லங்களே..

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments