வணக்கம் பூஞ்சிட்டுகளே!

புது வருஷம் பிறந்தாச்சு.. பொங்கலும் கம கமன்னு பொங்கியாச்சு..

இன்பமும் உற்சாகமும் ஆரோக்கியமும் பெருக பூஞ்சிட்டுகள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

நாம எல்லோரும் வாழ பழகிய நம்ம ஊரு அழைக்கா விருந்தாளிகளான பழைய கொரோனவும் புது ஓமிக்ரானும் சேர்ந்து நம்மை வெளியே எங்கேயும் போகாம பத்திரமா வீட்டுக்குள்ளயே வெச்ருக்காங்கன்னு ஒரு பக்கம் கவலையா இருக்கு. வெளியே போகலைன்னா என்ன..! வெளியே போனது மாதிரி நினைச்சுக்கலாமே!

இது போங்காட்டம் அப்படின்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது.. இருந்தாலும் இன்னைக்கு நாம கதை கேக்கப் போற ஊர் பேரக் கேட்டதுமே உங்களுக்கும் ஒரு உற்சாகம் ஒட்டிக்கொள்ளும்..

அப்படி என்ன ஊர்ன்னு யோசிக்கும் குட்டி வாண்டுகளுக்கு ஒரு குட்டிப் புதிர்.

இந்த ஊரோட பேர்ல நம்ம எல்லாருக்கும் பிடிச்ச பருவத்தின் பேர் இருக்கு…

எங்க?! கண்டுபிடிச்சிடீங்களா?!

அடி தூள்! அதே தான்.. இன்னைக்கு நாம கதை கதையாம் காரணமாம் பகுதில கதை கேக்க போற ஊர் – கொடைக்கானல் என்று அழைக்கப்படுகிற கோடைக்கானல்!

kodai1

வாங்க! வீட்டுக்குள்ள குளுகுளுன்னு உட்கார்ந்தபடி கொடைக்கானல் கதை கேக்கலாம்!

‘மலைவாழ் இடங்களின் இளவரசி’, ‘கிழக்கின் சுவிட்சர்லாந்து’ என்றெல்லாம் சுற்றுலா பயணிகளால் அழைக்கப்படுகிற கொடைக்கானலோட வரலாறு மிகவும் தொன்மையானதாம். தொன்மைன்னா தமிழ் மொழில மிகவும் பழமை வாய்ந்ததுன்னு அர்த்தம்.

கிட்டத்தட்ட கிறிஸ்து பிறப்பதற்கு முன்னதாகவே கொடைக்கானல் பகுதியில் மனிதர்கள் குடியிருந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் நிறைய கிடைச்சிருக்காம்.

இதற்கு முக்கியமான சான்றாக நம்ம ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டுவது சங்க இலக்கியப் பாடல்களை. பல புலவர்களால் வெவ்வேறு காலகட்டங்களில் அந்த காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களோட வீட்டு வாழ்க்கையையும், ஊர், திருவிழா, பழக்க வழக்கங்கள் போன்ற வெளிப்புற வாழ்வியலையும் மையப்படுத்திப் பாடப்பட்ட பாடல்கள் தான் எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு நூல்கள்.

இந்த நூல்களில் இருந்து அந்த காலத்தில் பேசப்பட்ட மன்னர்கள், வழக்கில் இருந்த விஷயங்கள், பொதுவான பண்டிகைகள், வணங்கப்பட்ட கடவுள்கள், ஊர் திருவிழாக்கள் இப்படி நிறைய தகவல்கள் பாடல் வடிவுல பதியப்பட்டிருக்கு. இந்த பதிவுகளில் இருந்து குறிப்பா குறுந்தொகை என்ற நூலில் இருந்து கொடைக்கானல் பற்றிய தகவல்களும் அங்கே இருந்த மனிதர்கள், வாழ்வு முறை பற்றிய தகவல்களும் தெரிய வருவதால் கொடைக்கானல் மிகப் பழமையான ஊர் என்று கருதப்படுகிறது. 

kodai2

சரி, முதல்ல கொடைக்கானல் என்றால் என்ன அர்த்தம்ன்னு பாப்போம்.

இந்த வார்த்தையை இரண்டாகப் பிரிக்கும் போது கொடை, கானல் என்று பிரிக்கலாம்.

இதுல கொடை என்ற சொல் கோடை என்ற சொல்லின் கால மாற்றத்தின் மருவூ.

கானல் என்ற சொல் காணல் என்ற சொல்லின் மாறுபாடு.

அதாவது கோடை காலத்தில் காண பகுதி என்பது கோடைகாணல் என்றாகி கொடைக்கானல் என்றாகி இருக்கலாம் அப்படின்னு வரலாற்று ஆய்வாளர்கள் கருதுறாங்க.

இன்னும் சிலர், காடு என்பதற்கு இன்னொரு சொல்லான கானகம் என்ற வார்த்தையை வைத்து காடுகளின் கொடை என்ற அர்த்தத்தில் கொடைக்கானல் என்றாகி இருக்கலாம் அப்படின்னு கருதுறாங்க.

எது எப்படியோ கொடைக்கானல் நம்ம ஊருக்கு மட்டுமில்ல இயற்கையை விரும்புற அத்தனை பேருக்குமே ஒரு வரப்பிரசாதம்.

kodai3

எப்போதும் பனி மூட்டம், ஏரி, அழகான இயற்கை சூழல், அமைதி, பச்சைப் பசேல் தோட்டங்கள், வயல்பரப்புகள்ன்னு ஒவ்வொரு இடமும் கண்ணுக்கும், மனதிற்கும் குளிர்ச்சியாக நூற்றாண்டுகளாக நம்மை எல்லாம் உற்சாகப்படுத்தும் இயற்கையின் கொடையான கொடைக்கானல் பகுதிக்கு நாம செய்யற ஒரே உதவி, கொடைக்கானல் பகுதியை சுற்று சூழல் மாசுபடாமப் பாத்துக்கிறது தான்.

அது தான் இயற்க்கைக்கு நாம செய்யுற பெரிய உதவி!

சரியா குழந்தைகளே!

மீண்டும் அடுத்த மாதம் ஒரு சுவாரசியமான ஊர் கதையோட உங்கள சந்திக்கறேன். அது வரைக்கும் பத்திரமா, ஆரோக்கியமா, உற்சாகமா இருங்க பூஞ்சிட்டுகளே!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments