எலேய் மக்கா! 

யல்லாரும் சவுக்கியமா இருக்கீகளா..!

என்ன அப்படி பாக்குதீக..?

ஊருக்கு  பேரு வந்த கத மட்டும் தெரிஞ்சிக்கிட்டா போதுமா.. ஊரு பாஷ பேசணும்ல.. அதேன்..

என்ன இன்னுமா எந்த ஊருன்னு தவிக்கீக? அட..! கிடந்து சலம்பாதீக புள்ளைகளா!! இன்னிக்கு நாம கத கதயாம் காரணமாம்’ல கத கேக்கப் போற ஊரு..

ஊரு..

ஆ.. அவ்வளவு லேசுல ஊருப்பேரை சொல்லிடுவேனா..!

இந்தா ஒரு விடுகத போடுதேன்.. விடெ கண்டுப்பிடிக்கீகளான்னு பாப்போம்!

மருவாதைக்கு ரெண்டெழுத்து

பசியாத்தும் மணிக்கு ரெண்டெழுத்து

உசுர் காக்கும் இடத்துக்கும் ரெண்டெழுத்து

என்ன கண்டுபிடிச்சுட்டீகளா?! அதே தான்! ‘திரு-நெல்-வேலி!’

என்ன சுட்டீஸ்… திருநெல்வேலி  ஊர் கதை கேப்போமா?

ரொம்ப காலத்துக்கு முன்னாடி இந்த ஊரு இருந்த முழுக்க மூங்கில் காடா இருந்துச்சாம். மூங்கிலுக்கு தமிழ்ல வேணுன்னு இன்னொரு பேர் உண்டு. அதனால இந்த ஊருக்கு  வேணு வனம்ன்னு முதல்ல பேர் வந்துச்சாம்.. அந்த வேணுவனத்துக்கு புதுசா ஒரு சிவபக்தர் குடிவந்தாராம். அவர்  பேர்  வேதபட்டர். வேதபட்டர் தினமும் சிவனுக்கு பூஜைகள் செஞ்சு முடிச்சிட்டு ஊரில்உள்ள ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் பண்ணுவாராம். 

நமக்குப் படிச்சதெல்லாம் நினைவுல இருக்கா அப்படின்னு தெரிஞ்சுக்க நம்ம பள்ளில, ட்யூஷன்’ல எல்லாம் தேர்வு வைக்கறாங்கள்ல, அதே மாதிரி, வேத பட்டர் அவர் மனதார ஏழைகளுக்கு உணவு வழங்கணும்ன்னு அன்னதானம் பன்றாரா இல்ல சும்மா காசு இருக்குன்னு உணவு தானம் செய்றாரான்னு கடவுள் சோதிக்க நினைச்சாராம். அதனால வேதபட்டருக்கு முதல் சோதனையா அவர்கிட்ட இருந்த காசெல்லாம் தீர்ந்து போக வெச்சாராம் கடவுள். அப்பவும் வேதபட்டர் தன்னால என்னவெல்லாம் முடியுமோ அவ்வளவு வேலைகள் செஞ்சு, சிவபூஜையும் செஞ்சு தொடர்ந்து அன்னதானமும் கொடுத்துட்டு  வந்தாராம். ஒரு கட்டத்துல ரொம்ப வறுமை நிலைக்குப் போயிட்டாராம் வேதபட்டர். கையில காசே இல்லாத நிலையில, ஏழை எளிய மக்களுக்கு உணவு கொடுக்கிறதுக்காக ஊருல இருக்க ஒவ்வொரு வீட்டுக்கும் போய் யாசகமா நெல் மணிகள் கேக்க ஆரம்பிச்சாராம் பட்டர்!

அப்படி ஒரு நாள் அவர் யாசகமாக் கேட்டு  வாங்கிட்டு வந்த நெல்மணிகள வீட்டுக்கு வெளியில  வெயில்ல காய வெச்சுட்டு பூஜைக்காக குளிக்கிறதுக்கு ஆத்துப்பக்கம் போயிருந்தாராம். அப்போ திடீர்ன்னு பயங்கர மழை வந்துருச்சாம்!  அச்சச்சோ… இந்த பேய் மழைல நெல் மணியெல்லாம் நனைஞ்சு போயிருக்குமே! எப்படி இன்னைக்கு அன்னதானம் செய்றதுன்னு  புலம்பிக்கிட்டே வீடு நோக்கி  மூச்சிரைக்க ஓடிவந்தாராம்! அப்படி ஓடி வந்தவர் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும்  ஒரே ஆச்சரியம்! அவர் வெளியில காய வெச்சிருந்த நெல் மணிகள் எல்லாம் வேலிபோட்டு துளி மழைக்கூட நனையாம பாதுகாப்பா இருந்துச்சாம்! 

 தனக்கே காசில்லாத நிலைல கூட, பிச்சை கேட்டாவது ஏழைகளுக்கு உணவு கொடுக்கணும்ன்னு தினசரி கஷ்டப்பட வேதபட்டரோட நல்ல மனச பாத்து அந்த நெல்மணிகள் மழைல நனையாத மாதிரி  கடவுளே வேலி அமைச்சு பாதுகாத்ததனால , வேணுவனத்துக்கு

திரு நெல் வேலின்னு பேர் வந்துச்சாம்.  திரு என்றால் கடவுள்/ இறைவன்னு அர்த்தம்.

என்ன  பூஞ்சிட்டூஸ்.. கதை  பிடிச்சிருந்துச்சா…!

திருநெல்வேலி பெயர்  வந்த  கதை  மட்டுமில்ல.. அதை ஆண்ட  மன்னர்கள்  அவங்க  ஆட்சி  செய்த  வரலாறுகளும்  ரொம்ப  சுவாரஸ்யமா  இருக்கும்.

tirunelveli1
Panaromic View of Tirunelvi with its twin city Palayamkottai (Image Courtesy: Wikipedia)

சுருக்கமா  சொல்லணும்ன்னா 

  • திருநெல்வேலி ஆரம்பக்கட்டத்துல  அதாவது முதல்-ஐந்தாம் நூற்றாண்டு வரைக்கும் நம்ம  பாண்டியர்கள்  ஆட்சி செய்றாங்க. அப்போ அவங்களோட இரண்டாவது தலைநகரமா இருந்துச்சாம். அசோகப் பேரரசரோட தகவல் களஞ்சியத்துலக் கூட திருநெல்வேலி பற்றி நிறைய குறிப்புகள் இருக்காம். 
  • அப்புறமா  பத்தாம்  நூற்றாண்டு  வாக்குல  நம்ம ராஜேந்திர சோழன்  ஆட்சியில  திருநெல்வேலி  சோழர்கள் கைக்கு  மாறுச்சாம்.
  • மறுபடி  பதிமூனாம் நூற்றாண்டுல  பாண்டிய  ராஜ்ஜியத்துக்கு  வந்துச்சாம்
  • அப்புறம் பதினாறாம் நூற்றாண்டுல விஜய நகர மன்னர்கள் மற்றும் பாளையக்காரர்கள், அவர்களைத் தொடர்ந்து  பதினெட்டாம்  நூற்றாண்டுல ஆற்காடு நவாப் ஆட்சி, இப்படி  திருநெல்வேலி பல  ஆட்சியாளர்களின் கோட்டையா  இருந்திருக்கு. 
tirunelveli2
தாமிரபரணி ஆறு (Image Courtesy: Change.org)

அது மட்டுமில்ல திருநெல்வேலியோட இன்னொரு தனி சிறப்பு,  தாமிரபரணி ஆறு! எத்தனையோ  கிராமங்களுக்கு வாழ்வாதாரமா இருக்கிற தாமிரபரணி ஆறு உற்பத்தி  ஆகுறது அகத்தியர் மலை. ஆற்றுக்கு  குறுக்கே இருக்கும்   பாபநாசம் அணை! அகத்தியர் அருவி.. தென்காசி காத்து.. குற்றால அருவி..ன்னு அப்படியே நம்ம கூடவே தொடர்ந்து வரும் மேற்கு தொடர்ச்சி மலையை நூல் பிடிச்சி போனோம்னா. தெக்கத்தி காத்தும்… தென்மேற்கு மழையும் சும்மா மனசுக்கு ஜில்லுன்னு இருக்கும்!

சொல்லும் போதே.. இதமா ஒரு காத்து .அடிக்குதுல்ல..!

சரி.  நம்ம  திருநெல்வேலி  ஒரு விஷயம்  மிக மிக பேர் பெற்றது.

நான் சொல்லாமலே  உங்களுக்கு  தெரிஞ்சிருக்குமே! எஸ்.. நம்ம திருநெல்வேலி அல்வா! திருநெல்வேலி  இருட்டுக்கடை  அல்வா

tirunelveli3
(Image Courtesy: iruttukadai.com)

திருநெல்வேலி  இருட்டுக்கடை  அல்வா ருசிக்கு ஈடு இணையே இல்ல. எழுதும் போதே நாவூறுதே! ஹ்ம்ம்.. திருநெல்வேலி மக்க  எல்லாம் கொடுத்து  வெச்சவக!

 மீண்டும் அடுத்த மாதம்  ஒரு புது  ஊர்க் கதையோட உங்கள  சந்திக்கறேன் பூஞ்சிட்டுகளே!

இந்த  பகுதி பத்தின  கருத்துக்களை பகிர்ந்துக்க  ஒரு மின்னஞ்சல மறக்காம  தட்டி விடுங்க. மேலும் உங்க ஊர் கதையை நாங்க  தெரிஞ்சுக்கனும்னா எங்களுக்கு எழுதி அனுப்புங்க.Email Address: feedback@poonchittu.com

வரட்டுமா சிட்டூஸ்!  

What’s your Reaction?
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments