வணக்கம் குழந்தைகளை எல்லாரும் எப்படி இருக்கீங்க??
இப்போதான் ஆரம்பிச்ச மாதிரி இருக்கு இந்த வருஷம்! அதுக்குள்ள இன்னொரு புது வருஷம் பிறக்கப்போவது! இல்ல?!
பூஞ்சிட்டுகள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட நல்வாழ்த்துக்கள்!
என்ன இப்பவே சொல்றேன் என பாக்குறீங்களா ?!
அடுத்து நாம சந்திக்க வரு ம்போது கிறிஸ்மஸ் முடிஞ்சு புது வருஷம் முடிஞ்சு பொங்கல் வந்துருமே!
அதனால உங்க எல்லாருக்கும் இப்போவே அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சொல்லியாச்சு!
சரி, இப்போ நம்ம பக்கத்தில் வழக்கமா கதைக்கு போகலாமா?!
இன்னைக்கு கதை கதையாம் காரணமாம் பகுதில கதை கேட்டு தெரிஞ்சுக்க போற ஊரு,
செய்யூர்.
கடலோர பகுதியான செய்யூர் எங்க இருக்கு தெரியுமா?
பட்டுக்கு பெயர் போன காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு பக்கத்துல இருக்கிற மதுராந்தகம் பக்கத்தில் இருக்கிற ஒரு சின்ன கிராமம்தான் செய்யூர்! அந்த காலத்துல வேட்டைக்கு போன சோழ மன்னர்கள் வேட்டையாட தகுந்த அடர்ந்த காடுகளை தேடி இந்த நிலப்பரப்பை தாண்டி வருவார்களாம். அப்படி வரும் வழியில் கோயில்கள் மற்றும் தங்குமிடங்கள் கட்டுறது சோழர்களோட வழக்கம். அப்படி அவர்கள் இப்போ செய்யூர் இருக்கிற நிலப்பரப்பு பக்கத்துல சிவன் கோவிலும் அதன் அருகிலேயே முருகர் கோயிலும் அமைச்சிருக்காங்க. இதில் முருகர் கோயில் இருந்த இடம் தான் பிற்காலத்தில் செய்யூர் என்ற பெயர் பெற்றிருக்கு.
எப்படின்னு தானே கேக்கறீங்க! அதுக்கு தான் வரேன்!
செய்யூர் என்ற வார்த்தையை பகுத்தா சேய் + ஊர் என்று பொருள் கொள்ளலாம். அதாவது . சேய் இருந்த ஊர் சேயூர் என்று இருந்து பின்னாளில் செய்யூர் ஆனதாம். சேய் என்றால் முருகன் / குழந்தை / சிறு அப்படின்னு பல அர்த்தங்கள் இருக்கு.
இதே ஊர முன்னொரு காலத்துல ஜெயம் கொண்ட சோழபுரம் அப்படின்னும் பேலபுரி அப்படின்னு பெயர் சொல்லி வந்து இருக்காங்க. இந்த ஊரோட முருகர் கோயில் மையப்படுத்தி சில பக்தி இலக்கியங்களும் இங்கே பாடப்பட்டிருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்லணும்ன்னா சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் சேயூர் முருகன் உலா போன்ற நூல்களை சொல்லலாம்.செய்யூர்ல இருக்கிற முருகன் கோயில் கட்டிய காலம், இராஜேந்திர சோழன் காலத்தையும் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தையும் ஒப்பிட்டு வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். பொதுவாகவே காரணப்பெயர்கள் நிரம்பி இருக்கிற நம்ம தமிழ்நாட்டுல இப்படி கோயிலும் கோயில் சார்ந்த இடங்களும் அதுக்கு பின்னாடி இருக்கிற சின்ன சின்ன கதைகளும், அதுவே பின்னாளில் ஊருக்கு பெயரான நிறைய ஊர்களும் இருக்கு. அப்படி நாம தெரிஞ்சுக்க போற இன்னொரு ஊரு கயத்தாறு!
கயத்தாறு தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரம். இந்த ஊர பத்தி நம்ம நிறையவே நம்ம தமிழ் புத்தகங்களையும் வரலாற்றுப் புத்தகங்களிலும் படித்திருப்போம். ஆமா! நீங்க யூகிச்சிது சரிதான்!
கயத்தாறு அப்படிங்கற இந்த ஊரில்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டாங்க. இந்த வரலாற்று சம்பவத்திற்கு கொஞ்சம் முன்னாடி அதாவது சில நூறு ஆண்டுகளுக்கு முன்னாடி இந்த இடத்தில்தான் கடைசி பாண்டிய மன்னனான மாறவர்மன் நாயக்கர்களை எதிர்த்து போர் புரிஞ்சதா ஆய்வுகள் சொல்லுது. இது மட்டுமில்லாம கயத்தாறு பக்கத்துல இருக்குற எட்டயபுரம் அப்படின்னு உங்க ஊர்ல தான் நம்ம எல்லாருக்கும் பிடிச்ச முண்டாசுக் கவிஞர் பாரதியார் பிறந்த ஒருவருக்கு இவ்வளவு சிறப்பு வாய்ந்த கயத்தாறு பேர் எப்படி உண்டானது நம்ம தெரிஞ்சுக்கணும் இல்லையா?!
கயத்தாறு ஒரு கூட்டுப் பெயர் ! இந்த கூட்டுப் பெயரை இரு சொல்லா பிரிக்கும்போது கார்ப்பு + ஆறு. கார்ப்பு / கயர்ப்பு என்றால் தமிழில் கசப்பு என்று அர்த்தமாம்.
இரண்டு சொல்லையும் சேர்த்து படிக்கும் போது கசப்பு + ஆறு , அதாவது கசப்பு ஆறு என்ற பொருள் வரும். கசப்பா ஒரு ஆறா ! ஆறு எப்படி கசப்பா இருக்கும் அப்படிங்கற சந்தேகம் வருதுல்ல.. ?! எனக்கு வந்தது. அதனால இதை பத்தி இன்னும் தெரிஞ்சுக்கணும்ன்னும் அலசும் போது ஒரு அழகான குட்டிக்கதை இதுக்கு பின்னாடி இருக்கிற தெரிய வந்தது
கயத்தாறு பகுதியே ஊரு.. அதுக்கு பின்னாடி அழகான ஆறு என இயற்கை அழகோடு அமைந்த பகுதி. இந்த ஊரு ஆற்றங்கரையில் கோதண்டராமர் பெருமாள் கோவில் அழகா அமைஞ்சிருக்கு. இந்த கோதண்டராம பெருமாள் கோயில் மூலவர் கோதண்டராமர் பெருமாள் எந்நேரமும் எப்போதும் சர்வகாலமும் துளசி மாலை போட்டிருப்பாராம். அவர் போட்டிருக்கும் துளசி மாலைகளை கரைக்கும் ஆத்து தண்ணீரிலும் துளசியை போலவே கசப்பு கலந்ததுனால கசப்பு ஆறு என்று நாள்போக்கில் பெயர்பட்டு கயத்தாறு அப்படின்னு பேர் வந்துச்சாம்.
என்ன குழந்தைகளே.. சுவாரஸ்யமா இருக்குல்ல… இதே மாதிரி இன்னொரு ஊரோடையும் கதையோடையும் அடுத்த முறை உங்களை சந்திக்கிறேன்.. அதுவரை பூஞ்சிட்டுகள் அனைவரும் பத்திரமா இருங்க.. மகிழ்ச்சியா இருங்க.. ஆரோக்கியமாக இருங்க.. 🙂
மீண்டும் ஒரு முறை , பூஞ்சிட்டுகள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புது வருட நல்வாழ்த்துக்கள்!