வணக்கம் பூஞ்சிட்டுகளே!
இந்த மாத கதை கதையாம் காரணமாம் பகுதிக்கு உங்களை வரவேற்கிறேன்.
எல்லாரும் எப்படி இருக்கீங்க..?! பள்ளிக்கூடம் திறந்தாச்சு.. உங்க நண்பர்களை, ஆசிரியர்களை எல்லாம் சந்திச்சது மகிழ்வா இருந்திருக்கும்ல.. ஒரு பக்கம் திரு. சூரியன் அவர்கள் நம்மள எல்லாரையும் சுள்ளுன்னு கண் கொட்டாம பார்க்க ஆரம்பிச்சுட்டார்.. இன்னொரு பக்கம் தூங்குற மாதிரியே திரு. கொரோனா அவர்கள் வேற சைலென்ட்டா நடிச்சிக்கிட்டு இருக்காரு.. இதுக்கு நடுவுல கர்ணனோட கவச குண்டலம் மாதிரி முகத்துல எல்லாருக்கும் ஒரு கவசம்! ஸ்ப்பா எவ்வளவு இடைஞ்சல்கள்.. இப்போவே தலை சுத்துதே.. ஒரு சர்பத் குடிச்சா செம ஜில்லுன்னு இருக்குமேன்னு தோணுதுல.. எனக்கும் அதே தான் தோணுது.. இப்போதைக்கு சர்பத்தை குடிக்கறாப்புல வேணும்னா நினைச்சுப் பாத்துக்குவோமா?..
இந்தக் குசும்பு தான வேண்டாம்ங்கிறது அப்படிங்கிறீங்களா?!
என்ன பண்றது.. நான் பாட்டுக்கு சிவனேன்னு இன்னிக்கு எந்த ஊரைப்பத்தி பூஞ்சிட்டுகள் கிட்ட சொல்லலாம்ன்னு தான் யோசிச்சிக்கிட்டு இருந்தேன்! அப்போன்னு பார்த்து ஒரு ஊரு காத்து வீசுச்சு.. காத்தோட சேர்த்து அந்த ஊர் குசும்பும் ஒட்டுக்கிச்சு…!
என்ன குட்டீஸ் இன்னைக்கு எந்த ஊரைப்பத்தி தெரிஞ்சுக்கப்போறோம்ன்னு கண்டு பிடிச்சிடீங்களா?!
அதே தான்! குசும்புக்குப் பேர் போன கோயம்புத்தூர் தான் இன்னைக்கு நாம கதை கேக்கப் போற ஊர்..!!
கதைப்போமா கண்ணுங்களா?!
மேற்குத் தொடர்ச்சி மலை ஒரு பக்கம்.. இன்னொரு பக்கம் நீலகிரியின் காட்டுப் பகுதி.. கிழக்குல நிலப்பகுதி.. ஜிலுஜிலுன்னு காத்துன்னு கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்கிற கோயம்புத்தூரோட பேர்க் காரணத்தை முதல்ல தெரிஞ்சுக்கலாமுங்களா!
நம்ம பகுதியைத் தொடர்ந்து படிக்குற பூஞ்சிட்டுகளுக்கு புத்தூர்ன்னு முடியற ஊர்ப் பெயர்களை எப்படி வந்ததுன்னு நல்லாவே தெரிஞ்சுருக்கும்.. அதை இன்னொரு முறை இப்போ படிக்கிற குட்டீஸ்களுக்காக ஞாபகப்படுத்திக்குவோம்.
புதிய ஊர் என்பதே இலக்கணப்படி மாறி புத்தூர் என்று குறிக்கப்படுது.
அப்படிப் பார்த்தோம்ன்னா கோயம்புத்தூர் என்பதை ரெண்டு ரெண்டு சொற்களா பிரிக்கலாம்.
கோயன் + புத்தூர்.
கோவன் அல்லது கோசன் என்கிற குறுநிலத் தலைவன் அமைத்த புதிய ஊர் என்பதே மருவி கோயன்புத்தூர் → கோயம்புத்தூர் ஆகி இருக்கு.
சரி, இந்தக் கோவன் என்கிறவர் யாரு? அவர் என்ன பண்ணினார் அப்படின்னு நீங்க கேக்கறது எனக்கும் கேக்குது.. சொல்றேன் சொல்றேன்..
ரொம்ப காலத்துக்கு முன்னாடி, அதாவது தமிழின் சங்க காலத்துல (கிட்டத்தட்ட 1500 வருடங்களுக்கு முன்) கோசர் குலத்தை சார்ந்த குறுநில மன்னர்கள் இருந்தார்களாம். இந்தியாவின் தென்பகுதியில் பரவலா அங்கங்கே குடியமர்ந்த ஆட்சி செஞ்சுக்கிட்டு வந்த ஆதிக்குடிகள் தான் இந்த கோசர்களாம்.
பூர்வக்குடிகளா இருந்த இந்த நிலத்து மக்களின் தலைவனாக இருந்தவர் கோணி’ன்னும், அவர்களது நிலக்கடவுள் கோணியம்மன் என்றும் சொல்லப்படுது.. பிற்காலத்துல அதாவது 9வது நூற்றாண்டுக்கு மேல இங்கே ஆட்சி செய்த சோழர்கள் தங்களோட ஆட்சிப்பகுதியில இந்த நிலப்பகுதியையும் இணைத்து அப்போ அங்க தலைமையில் இருந்த கோணியின் பிள்ளையான கோவன் என்ற குறுநில மன்னனை சார்ந்து ஒரு ஊரை அமைக்கிறாங்க.. அது தான் இப்போ நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச கோயம்புத்தூராக மாறி இருக்கு.
சோழர் காலத்துல இருந்து ரோம வணிகத்துல முக்கியப் பங்காற்றிய கோயம்புத்தூர் கிட்டத்தட்ட 6 நூற்றாண்டுகளுக்கு பிறகு அதாவது 14வது நூற்றாண்டு வாக்குல மூவேந்தர்கள் ஆட்சி வெவ்வேறாக உடைந்து பரவிய காலகட்டத்துல மதுரை சுல்தானியர் ஆட்சிக்குக் கீழ வந்து, பிறகு 15வது நூற்றாண்டுல விஜய நகரப் பேரரசுக்கு மாறி, பிறகு 17வது நூற்றாண்டின் தொடக்கத்துல மதுரை நாயகர்கள், மைசூர் திப்பு சுல்தான் மற்றும் ஆற்காடு நவாப் ஆகியோரின் கட்டுக்குள் இருந்து, 17வது நூற்றாண்டின் முடிவுல மெல்ல மெல்ல கிழக்கிந்திய கம்பெனி கைப்பற்றுது.. அதன் பிறகு 18ம் நூற்றாண்டின் தொடக்கத்துல மெட்ராஸ் ப்ரெசிடென்ஸியோட இணைக்கப்பட்ட கோயம்புத்தூர் ஒரு வழியா ஆங்கிலேயர் ஆட்சி முடிவுற்றதும் மாவட்டத்தின் தலைநகராக உருவெடுத்து, இன்னைக்கு மாநகராட்சியா சிறப்பாக இயங்கி வருது..
ஹப்பா இவ்ளோ மாறுதல்களா அப்படின்னு யோசிக்கிற அளவுக்கு, கோயம்புத்தூர் நிலப்பகுதி ஊராக, ஒரு நகராக அமைக்கப்பட்ட காலத்துல இருந்து இன்னைக்கு வரைக்கும் பலதரப்பட்ட ஆட்சியாளர்கள், கலாச்சார, மொழி, பழக்க வழக்கங்கள், சமூகவியல் மாற்றங்களைப் பன்முகமாகத் தாங்கி வருது.. இங்க பேசப்படும் தமிழ் ‘கொங்கு தமிழ்’ என்று சிறப்பாக வர்ணிக்கப்படும் கொஞ்சு தமிழ். இப்படி ஊருக்கே உரிய சிறப்பு உணவுப்பழக்கம் தொடங்கி, கோயம்புத்தூர் குசும்பு வரைக்கும் மக்களின் பேச்சு, உணவு, பழக்கவழக்கங்கள், என பல நூற்றாண்டுகளாக வேறுபடும் பண்பாட்டின் ஒற்றுமையாகத் தனி அடையாளத்தோடு திகழும் ஊருக்கு இன்னோர் பெரிய சிறப்பு, தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற அடைமொழி. அதற்கு காரணம், கோயம்புத்தூரின் பன்முகத்தன்மை தான்!
சரி இவ்வளவு தூரம் தெரிஞ்சிக்கிட்டோம்.. கோயம்புத்தூர் சொலவடைகளை கேக்காம போனா சாமி குத்தம் ஆகிடும்..
சொலவடையா அப்படின்னா என்னன்னு கேக்கறீங்களா?
‘சொலவடை’ன்னா தமிழ் மொழில, ஒவ்வொரு ஊருலயும் பேச்சுத் தமிழ்ல அடிக்கடி சொல்லும் பழமொழிகள். ஒவ்வொரு சொலவடைக்கும் ஒரு உட்கருத்து உண்டு.
தமிழகத்துல மற்ற மாவட்டங்கள் மாதிரி கோயம்புத்தூர் சொலவடைகளுக்கும் தனி இடம் உண்டு..
எங்க.. கீழ இல்ல கொங்கு வட்டார பழமொழிகள் உங்களுக்குப் புலப்படுத்தான்னு பாருங்க கண்ணுங்களா.. நான் அந்தாள போயிட்டு வாரேன்.
*அறுக்கமாட்டாதவன் இடுப்பைச் சுத்தி அம்பதெட்டு அருவாளு*
*எங்கயோ போற மாரியாத்தா எம் மேல வந்து ஏறாத்தாங்குற கதையா..!*
*கிடக்கிறது கிடக்கட்டும் கிழவனைத் தூக்கி மனையில வை’ன்னானாம்!*
*நட்டாத்துக்கு போனாலும் நாய்க்குச் சலக்குத் தண்ணி தான்*
*மொளச்சு மூணு எலை உடுல!*
*மொசப் புடிக்கிற நாய மூஞ்சியப் பார்த்தா தெரியாதா?*