White browed wagtail

குழந்தைங்க சேட்டை பண்ணா, ரொம்ப வாலாட்டாதீர்கள் அப்படின்னு பெரியவங்க சொல்றது வழக்கம். ஆனா வால் ஆட்டுவதையே பழக்கமாக வச்சிருக்கிற ஒரு பறவை பற்றித் தெரியுமா?. இந்த முறை அப்படி ஒரு வகையான வாலாட்டிக்குருவி பற்றிப் பார்க்கலாம். இந்தப் பறவை நிற்கும் போதும் நடக்கும் போதும் வாலை ஆட்டிக் கொண்டே இருப்பதால் இதற்கு இந்தப் பெயர்.

wagtail 1

உலக அளவில் பல வகையான வாலாட்டிக் குருவிகள் காணப்பட்டாலும் நம் நாட்டைப் பொறுத்தவரையில் ஐந்து முதல் ஆறு வகையான வாலாட்டிக் குருவிகளை பார்க்க முடியும்.
அப்படிப்பட்ட வகையில் சில இருப்பிட பறவைகள் ம‌ற்று‌ம் சில வலசை வந்து செல்பவை. அனைத்து வாலாட்டிக் குருவிகளும் தமது வாலை மேலும் கீழுமாக ஆட்டும். ஆனால் இதற்கு விதிவிலக்காக ஃபாரஸ்ட் வேக்டெயில் (Forest wagtail) மட்டும் தனது வாலை இடது வலமாக அசைக்கும்.

இந்த முறை நாம் பார்க்கப் போகும் பறவை கருப்பு வெள்ளை வாலாட்டிக்குருவி. இதை ஆங்கிலத்தில் ” White browed wagtail ” அ‌ல்லது ” Great Pied wagtail ” என்று அழைப்பர். இந்திய துணைக் கண்டத்தைப் பொருத்தவரை இப்பறவை ஒரு வசிப்பிடப் பறவையாகும். நம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இதைக் காண முடியும். இது வாலாட்டிக் குருவிகளில் சற்றே பெரிய உருவம் படைத்தது (கிட்டத்தட்ட 20 சென்டிமீட்டர் நீளம் இருக்கும்). இதன் நிறம் கருப்பும் வெளுப்பும் கலந்ததாக இருக்கும். தலை, பின் கழுத்து மற்றும் முதுகுப் பகுதி கருமை நிறத்தில் காணப்படும். முன் கழுத்து, மார்பு மற்றும் அடிவயிறு வெள்ளை நிறத்தில் இருக்கும். அலகுகள் மற்றும் கால்கள் கருப்பாக இருக்கும். கண்களுக்கு மேல் காணப்படும் வெண்ணிற புருவம் இதற்கு சிறப்பு அடையாளம். ஆண் பெண் பறவைகளுக்கு இடையே பெரிய வேறுபாடு இருக்காது.

wagtail 2

பெரும்பாலான வாலாட்டிகள் நீர் நிலை சார்ந்த பறவைகள் ஆகும். நீர் நிலைகளின் ஓரங்களிலும், உள்ளே இருக்கும் திட்டுகளிலும் அலைந்து திரிந்து அங்கு உள்ள சிறிய பூச்சிகளை உணவாகக் கொள்ளும். ஆனால் இந்தக் கருப்பு வெள்ளை வாலாட்டிக் குருவிகளை நகர்ப்புறங்களில் வீடுகளின் அருகிலும் பரவலாகக் காணலாம். வீடுகளிலும், சாலைகளின் ஓரங்களிலும் உள்ள வடிகால் ஓடைகளில் உள்ள பூச்சிகளைத் தேடி உண்ணும். பறக்கும்போது சிறகுகளை அடித்து மேலெழும்பி பிறகு கீழே இறங்கி மீண்டும் சிறகுகளை அடித்து மேலெழும்பி ஒரு படுக்க வைத்த எஸ் (S) வடிவப் பாதையில் பறக்கும். இதனால் பறக்கும் போது தூரத்திலிருந்தே இந்தப் பறவையை நாம் அடையாளம் கண்டு கொள்ளலாம். இதன் பாடல் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். சில சமயங்களில் நீண்ட இசைக்கோர்வையைக் கொண்டதாக இதன் பாடல் இருக்கும். பெரும்பாலும் தனியாகவோ அல்லது ஆண் பெண் ஜோடியாகவோ இந்தப் பறவையைப் பார்க்க முடியும்.
மார்ச் முதல் அக்டோபர் வரை கூடு கட்டி முட்டை இடும். நீர் நிலைகள் ஓரங்களில், தரையிலோ, பாறை இடுக்கிலோ புற்களைக் கொண்டு கூடு கட்டும்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments