அன்று மாலை வழக்கம் போல் சிறுவர்களும், சிட்டுவும் பூங்காவுக்கு வர சிட்டுவின் டைனோசர் கதை நேரம் துவங்கியது.

dinosaur

“இதுவரைக்கும் முக்கியமான டைனோசர் வகைகளைப் பத்திப் பார்த்தாச்சு. ஒலகம் பூராவும் கொடி கட்டிப் பறந்த டைனோசர் இனம், ஏன் அழிஞ்சுதுன்னு இன்னிக்குப் பார்க்கலாம். இது பத்தி உங்களுக்குத் தெரிஞ்ச காரணங்களைச் சொல்லுங்க பார்ப்போம்” என்றது சிட்டு.

“நான் சொல்றேன், நான் சொல்றேன்” என்று அவசரமாகக் கையைத் தூக்கினான் கதிர்.

“ம். சொல்லு, கதிர்!”

“எரிமலை வெடிச்சதினால எல்லா டைனோசரும், செத்துப் போயிடுச்சாம்” என்றான் கதிர்

“ஆமாம் கதிர். எரிமலை பெரிய அளவுல வெடிச்சி, அதனால வெப்பம் அதிகமாகி பூமியோட தட்பவெப்ப நிலை (Climate) மாறியிருக்கலாம்; அதனால டைனோசர் செத்திருக்கலாம்னு ஆராய்ச்சியாளர் சிலர் சொல்றாங்க. அப்புறம்? வேற காரணம் ஏதாவது இருக்கா?” என்றது சிட்டு.

“எங்களுக்குத் தெரியலே; நீயே சொல்லு” என்றான் முத்து.

“66 மில்லியன் ஆண்டுக்கு முன்னாடி, விண்வெளியிலேர்ந்து ஒரு பெரிய மலை அளவுக்கு இருந்த விண்கல் (Asteroid) வந்து, பூமி மேல மோதியிருக்கலாம்னு சில ஆராய்ச்சியாளர் நினைக்கிறாங்க.  அதனால அதிகளவு வாயுவும், தூசியும் கிளம்பி, பூமியோட தட்பவெப்பத்தை (Climate) மாத்தியிருக்கலாங்கிறது, அவங்களோட கருத்து” என்றது சிட்டு.

“எதை ஆதாரமா வச்சு, இப்படிச் சொல்றாங்க?” என்றாள் கயல்.

“நல்ல கேள்வி கயல். நம்ம பூமியோட பாறைகள்ல படிஞ்சிருக்குற இரிடியத்தோட அளவு, ரொம்பக் குறைவு.  ஆனா விண்கல்லுல இந்த இரிடியம் (Iridium) அதிகமா இருக்குதாம். நம்ம பூமியில 66 மில்லியன் ஆண்டுக்கு முன்னாடி இருந்த கிரிட்டேஷியஸ் காலத்துப் (Cretaceous period) பாறை படிவங்கள்ல, அதிகளவு இரிடியம் இருந்ததாக் கண்டுபிடிச்சிருக்காங்க.  அதனால விண்வெளியிலேர்ந்து விண்கல் வந்து, பூமி மேல மோதியிருந்தாத் தான், அதுல இருந்த இரிடியம், நம்ம பாறை மேல படிஞ்சிருக்க வாய்ப்பிருக்குதுன்னு, ஆராய்ச்சியாளர் நினைக்கிறாங்க. எல்லாமே யூகம் தான். இன்னும் இது தான் சரியான காரணம்னு உறுதிப்படுத்தப்படலே” 

“இரிடியமா? அப்படீன்னா என்ன?” என்றான் பாபு.

“அது பிளாட்டினம் வகையைச் சேர்ந்த ஒரு உலோகம். வெள்ளி மாதிரி வெள்ளையா இருக்கும். அதோட விலை ரொம்ப அதிகம்” என்றது சிட்டு.

“தங்கம் மாதிரி, விலை அதிகமோ?” என்றாள் மலர்.

“தங்கத்தை விட, மூணு மடங்கு விலை அதிகம்”

“அடேங்கப்பா!  சரி சிட்டு. விண்கல்லு வந்து, மோதிச்சுன்னே வச்சுக்குவோம்.  அதனால பூமியோட தட்பவெப்ப நிலை எப்படி மாறும்? அது எப்படி டைனோசரை அழிச்சிருக்கும்?” என்றான் வினோத்.

“சரியான கேள்வி வினோத். பெரிய மலை மாதிரியான விண்கல்லு மோதி, பூமிமேல இருந்த பாறையெல்லாம் ஒடைஞ்சிருந்தா, எவ்வளவு தூரத்துக்குத் தூசியும், புகையும் கிளம்பியிருக்கும்? பூமியோட மேல்பரப்பு முழுக்கப் புகை மண்டலமா ஆகியிருக்கும் இல்லியா?  அந்தப் புகையெல்லாம் அடங்கி, தூசியெல்லாம் மறுபடியும் கீழே வந்து படிஞ்சு, நம்ம காத்து மண்டலம் பழைய மாதிரி சரியாகிறதுக்குப் பல வருஷம் ஆகியிருக்கும்னு, ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறாங்க. 

அந்த மாதிரி புகை மண்டலம் நம்ம பூமிக்கு மேல பரவி, வெயில் சுத்தமாக் கீழ வராம தடுத்திருக்கும். பல வருஷம் சூரியன்கிட்டேர்ந்து வெப்பம் வரலேன்னா பூமி என்னாகும்? குளிர் அதிகமாகி, தண்ணியெல்லாம் பனியா உறைஞ்சிருக்கும். குடிக்கத் தண்ணியிருக்காது. குளிர் அதிகமானதால உடம்புக்குத் தேவையான சூடு கிடைக்காம, டைனோசர் விறைச்சிப் போயி செத்திருக்கலாம்.  வெயிலே சுத்தமா வரலேன்னா, செடி,கொடி என்னாகும்னு யாராவது சொல்லுங்க பார்ப்போம்?” என்றது சிட்டு.

“தாவரங்களுக்கு உணவு தயாரிக்க, சூரிய ஒளி வேணுமே!  அது இல்லேன்னா, உணவு தயாரிக்க (photosynthesis) முடியாம, செடி கொடியெல்லாம் அழிஞ்சிடும்” என்றாள் கயல்.

“ரொம்பச் சரி. பூமியில இருக்குற செடி, கொடி, மரம் எல்லாம் செத்துடுச்சின்னு வைச்சிக்குவோம். அதுக்கப்புறம் என்ன ஆகும்?”என்றது சிட்டு

“தாவரங்கள் இல்லேன்னா, இலை தழை திங்கிற தாவரவுண்ணி (Herbivorous) விலங்கெல்லாம், தீனி கிடைக்காம செத்துடும்”. என்றான் முத்து.

“ஆமாம் முத்து. தாவரவுண்ணி விலங்கு இல்லேன்னா, அதைத் திங்கிற ஊனுண்ணிக்கு (Carnivorous) உணவு கிடைக்காது  இதைத்தான் உணவுச் சங்கிலின்னு சொல்றோம். இயற்கையில எல்லாம் ஒன்னையொன்னு நம்பி, பின்னிப் பிணைஞ்சு இருக்குது. ஒன்னுக்குப் பாதிப்பு ஏற்பட்டா, அது மொத்த பூமியையுமே பாதிக்கும்” என்றது சிட்டு.

“ரொம்ப அழகா விளக்கினே சிட்டு! நல்லாப் புரியுது” என்று பாராட்டினான் பாபு.

“ஜூராசிக் படம் மாதிரி, மறுபடியும் உயிருள்ள டைனோசரை உண்டாக்க முடியுமா சிட்டு?” என்றாள் மலர்.

“அது கற்பனை தான் மலர்.  இப்ப வரைக்கும், அந்த மாதிரி செய்யறதுக்கு வாய்ப்பு இல்ல. ஆனா அறிவியலில் முடியாதுன்னு எதுவும் கிடையாது.  நாளைக்கே டைனோசரோட டிஎன்ஏ கிடைச்சி, அதை வைச்சி உயிருள்ள டைனோசரை உண்டாக்கினாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல.

ஆனா நான் ஒன்னு சொல்வேன்.  செத்துப்போன டைனோசரை மறுபடியும் உயிரோட கொண்டு வர்றதுக்குப் பதிலா, இப்ப இருக்கிற உயிர்களை அழியாமக் காப்பாத்தணும். அது தான் நாம செய்ய வேண்டிய முதல் வேலை.  டைனோசர்லேர்ந்து தோன்றுனது தான், இப்ப இருக்கிற பறவையினம். காட்டெல்லாம் அழிச்சி  இயற்கையை ரொம்ப பாழ்படுத்திட்டதால, ஏராளமான பறவையினம் அழிஞ்சிக்கிட்டே வருது.  அதெல்லாம் மேற்கொண்டு அழியாம, நாம காப்பாத்தணும்” என்றது சிட்டு வேதனையுடன்.

“ஆமாம் சிட்டு.  நீ சொல்றது சரி தான்:  இப்ப இருக்கிற உயிரினத்தை அழியாமக் காப்பாத்துறது தான், நாம செய்ய வேண்டிய முதல் வேலை.  அதுக்கு நாங்க எங்களால முடிஞ்ச அளவு பாடுபடுவோம்” என்றாள் கயல்.

“ஆமாம். கண்டிப்பாப் பாடுபடுவோம்” என்றனர், மற்ற குழந்தைகள் அனைவரும்.

“ரொம்ப நன்றி.  டைனோசர் பத்தி எனக்குத் தெரிஞ்ச விஷயத்தை யெல்லாம் உங்களுக்குச் சொல்லிட்டேன்.  ஆர்வமா நீங்களும் கேட்டதால, நானும் உற்சாகமாச் சொன்னேன்.  இன்னியோட டைனோசர் கதையை முடிக்கிறேன்.  அப்புறமா நாம சந்திக்கலாம்” என்றது சிட்டு.

“எங்களுக்கு ரொம்ப வருத்தமாயிருக்கு சிட்டு.  இனிமே நீ மாசாமாசம் எங்களுக்குக் கதை சொல்ல வர மாட்டியா?” என்றாள் மலர்.

“டைனோசர் கதை இல்லேன்னா என்ன, வேற கதை சொல்ல வருவேன்” என்றது சிட்டு.

“ஹே!” என்று இரண்டு கைகளையும் தூக்கிக் கொண்டு உற்சாகமாகக் கத்தினர் குழந்தைகள்.

“சரி. ரொம்ப நேரமாயிட்டுது.  வாய்ப்பிருந்தா வேற ஒரு கதையோட கூடிய சீக்கிரம் சந்திக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, டாட்டா காட்டியபடியே பறந்து போனது சிட்டு.

குழந்தைகள் அனைவரும் சிட்டுவிற்கு டாட்டா காட்டிவிட்டுப் பிரிய மனமின்றி, வீட்டுக்குத் திரும்பினர். 

என்ன குழந்தைகளே! இத்தனை மாசம் உங்களுக்குச் சிட்டு சொன்ன டைனோசர் கதை பிடிச்சிருந்திச்சா?  ஆமாம் என்றால், எங்களுக்கு உங்க கருத்துக்களை மறக்காம எழுதுங்க.

எழுத வேண்டிய முகவரி:-  feedback@poonchittu.com

(முற்றும்)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments