hoop

ஒருவரை பார்க்கும்போது அவர் ஒரு தொப்பியோ கிரீடமோ தலையில் சூடியிருந்தால் அது நம்மை எளிதில் கவர்ந்து விடும் அல்லவா? இப்படி பறவைகளிலும் சிலவற்றிற்கு அழகான கவர்ச்சிகரமான கிரீடம் அல்லது சிகை அலங்காரம் (crest) உண்டு. அத்தகைய சிகையலங்காரம் கொண்ட ஒரு பறவைதான் கொண்டலாத்தி. நாம் எழுதில் பார்க்கக்கூடிய சேவலுக்கு கூட இத்தகைய அமைப்பு உண்டே என்று கேட்கலாம்… ஆனால் அது ஒரு வகையான ஜவ்வினால் ஆனது. கொண்டலாத்திக்கு இருப்பது இறகுகளின் அமைப்பினால் உருவாக்கப்பட்ட சிகை அலங்காரம்.

கொண்டலாத்தி ஆங்கிலத்தில் யுரேஷியன் ஹூபே (Eurasian hoopoe) என்று அழைக்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் Upupa epops. கிட்டத்தட்ட ஒன்பது சிற்றினங்கள் (sub species) கொண்ட இந்தப் பறவை இனம் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா கண்டங்களில் பரவலாகக் காணப்படுகிறது. இந்தியத் துணைக் கண்டத்தை பொருத்தவரையில் இருப்பிடப் பறவையான இது, சமவெளி, காடு , மலைகள் என்று எல்லா இடங்களிலும் காணப்படும்.

அளவில் மைனாவை ஒத்து இருக்கும் இந்தப் பறவையை அதன் உருவ அமைப்பாலும் வண்ணத்தாலும் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். உடல் இளம் பழுப்பு நிறத்தில் இருக்கும். இறக்கையில் உள்ள சிறகுகள் கருப்பு மற்றும் வெள்ளை கலந்து இருக்கும். இது பறக்கும் போது கருப்பு வெள்ளைப் பட்டையாகத் தெளிவாகத் தெரியும். கண்கள் கருமை நிறத்திலும் அலகு நீண்டு கீழ்நோக்கி வளைந்ததாக இருக்கும். இந்த நீண்ட அலகை மண்ணில் புகுத்தி தரையின் கீழே இருக்கும் வண்டுகள், புழுக்கள், மற்றும் கரையான்களை கொத்தித் தின்னும். பெரும்பாலும் தரையில் நடந்து உணவு தேடும். இவ்வாறாக பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் இப்பறவைகள் பெரும்பங்கு ஆற்றுகிறது.

இப்பறவைகள் மரப்பொந்துகள், கட்டிடங்கள் மற்றும் பாறை இடுக்குகளில் கூடு அமைத்து இனப்பெருக்கம் செய்யும். 7 முதல் 8 முட்டைகள் வரை இடும் பெண் பறவை அடைகாக்கும். அடைகாக்கும் சமயத்தில் பெண் பறவையின் உடலிலிருந்து துர்நாற்றம் வீசக்கூடிய திரவம் ஒன்று சுரக்கும். இது வேட்டையாடிகளிடமிருந்து குஞ்சுகளைக் காத்துக்கொள்ள இந்தப் பறவை கையாளும் ஒரு தந்திரம் .
இந்தப் பறவைகள் தரையில் உள்ள புழுதியில் மண் குளியல் போடுவது பார்ப்பதற்கு அழகாக இருக்கும்

கொண்டலாத்திக்கு – எழுத்தாணி குருவி, கொண்டை வளர்த்தி, கொண்டை உலர்த்தி, விசறிக் கொண்டைக்குருவி என்றும் தமிழில் பெயர்கள் உண்டு.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments