வணக்கம் பூஞ்சிட்டுகளே

உங்க எல்லாருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

இந்த தீபாவளி நம்ம எல்லாருக்குமே புதுமையான தீபாவளி. நோய்தொற்று அதிகமா இருக்கக்கூடிய இந்த காலக்கட்டத்துல நமக்கு பிடிச்ச பண்டிகைய நம்ம மனசுக்கு பிடிச்ச மாதிரி கொண்டாடுறது எவ்வளவு முக்கியமோ அதே அளவு பாதுகாப்பாகவும் சமூக இடைவெளியோடவும் கொண்டாடுறது மிகவும் முக்கியமானது. ஓகேயா… சரி சரி அட்வைஸ் எல்லாம்  போதும் ஊரு கதை எங்கன்னு கேக்கறீங்களா..?

இதோ!

தீபாவளி அதுவுமா பட்டாசா கைவசம் சரவெடியா ஒரு ஊரு கதை இருக்கு..!

என்ன கண்டுபிடிச்சிட்டீங்களா..?

இன்னும் இல்லயா..?

அப்போ வாங்க எல்லாரும் ஒரு நடை

சிவகாசிக்கு போயி ஊருக்கு பேர் வந்த கதைய கேட்டுட்டு அப்படியே வரும்போது பட்டாச வாங்கிட்டு வந்துடுவோம் !

ரெடியா குட்டீஸ்?

சிவகாசி விருதுநகர் மாவட்டத்துல இருக்குற ஒரு நகரம்.

விருதுநகர்க்கே ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கு.

ஒரு தடவை ஊரு ஊரா போய் அங்க இருக்கிற பயில்வான்கிட்ட எல்லாம் போட்டி போட்டு ஜெயிச்ச வீராதி வீரன் ஒருத்தன் ஒரு ஊருக்கு வந்து அந்த ஊர் மக்கள் கிட்ட அடேய் ஊருக்காரங்களா எல்லா ஊருக்காரனையும் ஜெயிச்சு இந்த ஊருக்கு வந்திருக்கேன்.. என்னை எதிர்த்து போட்டி போட யாராச்சும் இருக்காங்களா இந்த ஊர்ல? ஒரு வேளை நான் தோத்து நீங்க ஜெயிச்சிட்டீங்கன்னா நான் இதுவரைக்கும் சண்டை போட்டு ஜெயிச்ச எல்லா விருதுகளையும் உங்களுக்கே கொடுத்துட்றேன்.. என்ன ? எங்கூட போட்டி போட யாருமே இல்லயா’ ன்னு  ஒரு சவால் விட்டாராம். அட நம்ம ஊருக்கு இப்படி ஒரு அவமானமான்னு உடனே அந்த ஊரு ஹீரோ ஒருத்தர் நாடி நரம்பெல்லாம் வெறியேறி அந்த வீராதி வீரன் கிட்ட சண்டை போட்டு ஜெயிச்சுட்டாராம். போட்டில தோத்த அந்த வீரனும் தன்னோட  விருதுகளை அந்த ஊருக்கே கொடுத்துட்டு துண்டக்காணோம் துணியக்காணோம்ன்னு ஊரவிட்டே ஓடிப்போயிட்டாராம். இந்த சம்பவத்த வச்சு சுத்தி இருக்க வட்டாரத்துல விருதுகள் வாங்கின நகர்ன்னு அடையாளம் காணப்பட்டு காலப்போக்கில் விருதுநகர்ன்னு ஆச்சாம்!

ஆனா பாவம் சவால்விட்டவன கஷ்டப்பட்டு ஜெயிச்சு  ஊருக்கே பட்டம் வாங்கிக்கொடுத்த  அந்த வீரனோட பெயர் கால வெள்ளத்துல காணாம போயிருக்கு!

வரலாறுல இதெல்லாம் சகஜமப்பா!

சரி இப்போ சிவகாசி கதைய கேப்போமா?

sivakasi1
சிவகாசி கோவில் – Image Source: Wiki

15வது நூற்றாண்டு வாக்குல நிர்மானிக்கப்பட்ட  ஊரு தான் சிவகாசி. அந்த காலத்துல சிவகாசி,  மதுர ஜில்லாவோட சேர்ந்திருந்துச்சாம்.  அப்போ ஆட்சி செஞ்சது,  ஹரிகேசரி பராக்கிரம பாண்டிய மன்னனாம். சிவ பக்தரான அவருக்கு ஒரு குட்டி ஆசை. வடக்கில புகழ்ப்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் மாதிரியே ஒரு கோவில தென்காசில கட்டனும்ன்னு நினைச்சாராம். அதனால வட காசில இருந்து லிங்கத்த தென்காசிக்கு வரவழக்கலாம்ன்னு  பலமா ஏற்பாடு பண்ணினாராம். அந்த ஏற்பாடு படியே வடகாசில இருந்து ஒரு சிவலிங்கத்த எடுத்திட்டு வந்த மன்னன் , வழில ரொம்ப களைப்பா இருக்கேன்னு ஒரு வில்வ மரத்துக்கு கீழ காத்தோட்டமா உக்காந்து இளைப்பாறினாராம். கொஞ்ச நேரம் கழிச்சு அங்க இருந்து புறப்படலாம்ன்னு அவர் கிளம்பினப்போ, லிங்கத்தை சுமந்தபடி வந்த அவரோட வண்டி நகரவேயில்லையாம். எவ்வளவோ முயற்சி பண்ணியும் மன்னனால அந்த வில்வ மர இடத்தில இருந்து நகரவே முடியலயாம்! என்னடா இது அதிசயம்ன்னு விழி பிதுங்கின மன்னனுக்கு கொஞ்ச நேரம் கழிச்சு ஒரு யோசனை வந்து, அதே இடத்துலயே அந்த சிவலிங்கத்தை நிறுவி அங்கேயே கோயிலும் கட்டினாராம் . சிவனாகவே காசியாக இங்க விருப்பப்பட்டு அமர்ந்ததால இந்த ஊருக்கு சிவகாசின்னு பேர் வந்துச்சாம்!

பதினைந்தாம் நூற்றாண்டு வரைக்கும் மதுர ஜில்லாவோட பாண்டிய ஆட்சியில இருந்த ஊரு அடுத்தடுத்த காலக்கட்டங்கள்ல, விஜயநகர ஆட்சி, நாயக்கர்கள் ஆட்சி, ஆர்காட்டு நவாப் ஆட்சி, ப்ரிட்டிஷ் ஆட்சின்னு மாறி மாறி உட்பட்டு கடைசியா சுதந்திரம் கிடைச்ச சமயத்துல மெட்ராஸ் பிரஸிடென்ஸிக்குள்ள வந்ததாம். அதுக்கப்புறம் வந்த  வட்டார மாற்றங்களில் இப்போ இருக்கிற விருதுநகர் மாவட்டத்தோட இணைஞ்சு இருக்கு,  நம்ம சிவகாசி.


சிவகாசி மக்களோட வாழ்வாதாரம், தீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிற்சாலைகள். இந்த ரெண்டு தொழில்லயும் பெரும்பான்மையான மக்கள், அதாவது அம்மா அப்பா அத்தை மாமான்னு குடும்பம் குடும்பமா வேல செய்பவர்களா இருப்பாங்க. ரொம்ப வேதனையான விஷயம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்கள்ல பல குழந்தைகளும் படிக்க முடியாம இந்த தொழிற்சாலைக்கு வேலைக்கு வருவாங்க.. கொஞ்ச காலத்துக்கு முன்னாடி அரசுகள் கடுமையான  நடவடிக்கை எடுத்து இப்போ குழந்தைகள் வேலை செய்றது கணிசமா குறைஞ்சிருக்கறதா சொல்றாங்க!

sivakasi2
சிவகாசியில் கடைத்தெரு

அபாயகராபான வேதிப்பொருட்கள் ஒருபுறம், வறுமையான சூழல்ல படிப்ப விட்ட குழந்தைகள் மறுபுறம்ன்னு நமக்கெல்லாம் சந்தோஷத்த அள்ளித்தர சிவகாசிக்கு பின்னாடி அந்த பட்டாசு சத்தத்துல கேக்காம போன நிறைய கதைகளும் இருக்கு. அவங்களுக்கெல்லாம் நாம செய்யுற பெரிய உதவி வெளிநாட்டு பட்டாசுகளை தவிர்த்து உள்ளூர் சிவகாசி பட்டாசுகள வாங்குறதுதான்.

அதோட பட்டாசு வெடிக்கும் போது சுற்றுப்புற சூழல் மாசுபடாம, நம்ம வீட்டு பெரியவங்களுங்கும் குழந்தைகளுக்கும் தொந்தரவு இல்லாம பாதுகாப்பா கொண்டாடுறதும் அவசியம் சிட்டூஸ்!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments