லதா அவசர அவசரமாக பள்ளியிலிருந்து வீடு நோக்கி கிட்டத்தட்ட ஓடினாள். வழக்கமா வீட்டுக்கு வந்து சாப்பிடும் பழக்கம் உண்டு. ஆனால் இன்று சாப்பிடக்கூடவில்லை.

புதிதாக திறந்த பூங்காவில் இன்று எப்படியாவது ஊஞ்சலில் இடம் பிடித்திட உறுதியாய் இருந்தாள் லதா.

“ஏய்., லதா சாப்பிடாமல் எங்க அவசரமா கிளம்பற?” என்றார் ஜெயந்தி.

அம்மா, “இந்த ப்ரியா குரூப் தினமும் சீக்கிரம் வந்து உட்கார்ந்து ஊஞ்சலில் கொண்டு உயிரெடுக்குதுங்கள்.”

“எல்லோரும் விளையாடத்தானே பூங்கா வைத்திருக்கிறார்கள். நீங்க தான் அட்ஜஸ் பண்ணி விளையாடணும்.”

“சரிமா. நான் அப்புறம் வந்து பேசறேன்” என்று ஓடிய மகளை பரிவுடன் பார்த்தார் ஜெயந்தி.

நடுத்தர வர்க்கத்தில் பிறந்த மகளுக்கு ஒரு பிரம்பு ஊஞ்சல் வாங்கிக்கொடுக்கணும் என்பது அவரின் நீண்ட நாள் ஆசை. சிறுவயதில் எப்போதும் அவரின் புடவையை வீட்டுக்கு அருகில் இருக்கும் மரத்தில் கட்டி ஊஞ்சல் ஆடிக்கொண்டே இருப்பாள் லதா. வளர்ந்த பிறகும் அந்த ஆசை அவளுக்கு விடவில்லை. பள்ளிக்குப் போகும் வழியில் பெரிய ஆலமரம் இருக்கும். அங்கே தொங்கும் விழுதை பிடித்து ஒரு ஆட்டம் ஆடிவிட்டுத்தான் பள்ளி செல்வாள். ஒரு முறை தவறி விழுந்து முட்டியில் காயம் பட்டவுடன் தான் அந்தப் பழக்கம் போனது. இப்போ புதுசா பூங்காவில் ஊஞ்சல் வைத்ததும் அங்கே போகிறாள்.

சீக்கிரம் வந்து யாருமே பூங்காவில் இல்லை என்ற சந்தோஷத்தோடு வேகமாக ஊஞ்சலில் அமர்ந்தாள். ஒரு ஐந்து நிமிடம் ஆடிக் கொண்டே இருக்கும் போது பிரியா தன் தோழிகளுடன் வந்தாள்.

unjal

வந்தவுடனே இவளை ஊஞ்சலிலிருந்து தள்ளி அவர்கள் விளையாட ஆரம்பித்தார்கள்.

லதா அழுதுகொண்டே நகர்ந்து நின்றாள்.

“ஏண்டி இப்படி பண்றீங்க? அவளும் பாவம் தானே?” என்ற ராதாவை முறைத்தாள் பிரியா.

“எங்களோட இருக்கணும்னா இவளுக்கு நீ சப்போர்ட் பண்ணக் கூடாது சரியா?”

ஒன்றும் சொல்லாமல் போய் உட்கார்ந்து கொண்டாள் ராதா.

இதை ரொம்ப நாளாக கவனித்துக் கொண்டிருந்த வாட்ச்மென் தாத்தா லதா அருகில் வந்தார்.

“அழாதே பாப்பா. கொஞ்ச நேரம் கழித்து உன்னிடம் பேசுறேன். அதுவரை இங்கேயே இரு” என்றார்.

பூங்கா நடை சாத்தும் நேரம் வந்ததும் எல்லோரும் கிளம்பினார்கள். லதா மட்டும் தாத்தாவுக்காக உட்கார்ந்து இருந்தாள்.

“பாப்பா தினமும் உனக்காக பூங்காவை சிறிது நேரம் முன்னாடியே திறக்கிறேன். நீ வந்து அப்போது உன் ஆசைதீர ஊஞ்சல் ஆடிக்கோ” என்றார்.

“நிஜமாவா தாத்தா?” என்று கேட்ட லதாவின் கண்களில் அத்தனை வெளிச்சம்.

மறுநாளிலிருந்து தினமும் காலையில் தனியே ஊஞ்சல் ஆடுவாள் லதா. சில நேரங்களில் தாத்தாவுக்கும் உணவு எடுத்து வருவாள். இருவரும் ஒன்றாக அமர்ந்து கதைப் பேசுவார்கள். இப்போதெல்லாம் அவர்களின் கதையை காற்றில் ஆடும் ஊஞ்சலும் கேட்கிறது.

ஒரு நாள் இதைக் கவனித்த ப்ரியா தான் ஒதுக்கியதால்தான் தனிச்சிறப்பு லதாவுக்குக் கிடைத்தது.. எனவும்..தன் தவறால் தன் பெயர் கெடுகிறது என்பதையும் உணர்ந்து லதாவையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டாள். இப்போது ஆளுக்குச் சில நிமிடங்கள் என்று பிரித்து விளையாடுகிறார்கள். இப்போது ஊஞ்சல் சத்தத்தோடு, அவர்களின் குதூகலச் சத்தமும் பூங்காவை அழகாக்கியது.

லதா தன் படிப்பிற்காக அடுத்த ஊர் ஹாஸ்டலில் சேர்ந்தாள். இப்போது லதாவுக்காக ஊஞ்சலும், தாத்தாவும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

What’s your Reaction?
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments