இதுவரை:

கடற்கரைக்குச் செல்லும்ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து குழந்தைகள் ஒரு மணல் தேவதையை சந்திக்க, அது இவர்களுக்கு தினமும் ஒரு வரத்தைக் கொடுக்கிறது. அந்த வரங்களால் நன்மையைக் காட்டிலும் தொல்லையே அதிகம் ஏற்படுகிறது. ஐந்தாவதாக கொடுத்த வரத்தால் இவர்களது உயிருக்கே ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டது. அதிலிருந்து கஷ்டப்பட்டு மீண்டனர். இனி..

அத்தியாயம் 6

 ‘இன்னிக்கு நமக்கு எந்த வரமும் வேண்டாம். பேசாம திருடன் போலீஸ் விளையாடுவோம்’ என்று குழந்தைகள் முடிவு செய்தனர் திருடன் போலீஸ் விளையாட்டில் ஆங்காங்கே ஒளிந்து கொள்ள வேண்டும், ஓட வேண்டும். அதனால் வீட்டுக்குள் இருந்தால் சரிப்படாது என்று நினைத்தவர்கள் வழக்கம்போல கடற்கரைக்குச் சென்றார்கள்.

 அங்கு அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கையில் வழக்கமாகக் கடையிலிருந்து உணவு பொருட்களைக் கொண்டுவரும் இளைஞன் ஒருவன் அந்த வழியே சென்றான். திருடன் போல் வேடமணிந்திருந்த ராபர்ட் தன் சகோதரர் சகோதரிகளிடம் விளையாடுவதைப் போலவே அவனிடமும் சென்று பொம்மைக் கத்தியைக் காட்டி, “உன் கையில இருக்கிற பொருட்களையெல்லாம் குடுத்துடு.. இல்லை.. கத்தியால் குத்திடுவேன்” என்று விளையாட்டாய்க் கூற,

 ஏற்கனவே நிறைய வேலை இருந்ததால் கடுப்பாகி இருந்த இளைஞன், “போ அந்தப் பக்கம்!” என்று ராபர்ட்டைப் பிடித்துத் தள்ளி விட்டான். அதில் காயமடைந்த ராபர்ட்டுக்கு பயங்கரமாகக் கோபம் வந்தது. மீண்டும் அந்த இளைஞனைப் பிடித்து நிறுத்தி சண்டைக்குப் போனான்.

 ஆந்த்தியா, சிறில், ஜேன் மூவரும் சண்டையிட்டவர்களை விலக்கி விட்டார்கள்.  “அவன் நம்மை விட ரொம்பப் பெரியவன்.. அவன் கிட்ட வம்புக்குப் போகாதே” என்று அவர்கள் ராபர்ட்டிடம் கூறினர். அந்த இளைஞனும் அங்கிருந்து சென்று விட்டான்.

சண்டையிட்டதில் களைப்பாகிப் போய் மணலில் அமர்ந்த ராபர்ட், “நான் இவனோட ரொம்பப் பெரியவனாகவும் பலசாலியாகவும் மாறணும்” என்று சொல்ல,

“அது தாராளமா நடக்கும்.. இப்ப என் மேலே இருந்து கையை எடு” என்று ஒரு குரல் கேட்டது. அது வேறு யாருமல்ல மணல் தேவதைதான். ராபர்ட் தான் தன் கையை மணல் தேவதை மேல் வைத்திருந்தான்.

“ஐயோ! அது நான் சும்மா விளையாட்டுக்காகக் கேட்டது. அதுக்காக என்னை உடனே பெருசா மாத்திட வேண்டாம்!” என்று ராபர்ட் பதட்டமாக ஏதோ சொல்ல, அதைக் கேட்பதற்கு மணல் தேவதை அங்கே இல்லை.

 ராபர்ட் ஏற்கனவே மிக உயரமானவனாகவும் பலசாலியாகவும் வளர்ந்திருந்தான். அவனைப் பார்க்கும் போது மற்ற குழந்தைகள் அனைவரும் சின்ன எலிக் குஞ்சுகள் போல் தெரிந்தனர். “ஐயையோ! இப்ப என்ன பண்றது?” என்று ஜேன் அழவே ஆரம்பித்து விட்டாள். அப்போது அந்த வழியாக கடைக்கார இளைஞன் தன் வேலையை முடித்துக் கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்ததும் எழுந்த ராபர்ட் அவனை அப்படியே அலேக்காகத் தூக்கி அங்கிருந்த வைக்கோல் போரின் மேல் விட்டுவிட்டான். “என்னையா அடிக்கிற? இப்ப எப்படி நீ இறங்கி கீழே வர்றேன்னு பார்க்கலாம்” என்று கூறினான்.

 பழிவாங்கி விட்ட மகிழ்ச்சியில் அவன் திரும்பி வர, ஆந்த்தியாவுக்கு திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. “பக்கத்து ஊர்ல ஒரு கண்காட்சி நடக்குது. அங்கே போய் இவனோட பெரிய உருவத்தை வச்சுக் கொஞ்சம் காசு சம்பாதிக்கப் பார்க்கலாம்” என்று அவள் கூற, அதை ஏற்றுக்கொண்டு அனைவரும் பக்கத்து ஊரை நோக்கி நடந்தனர்.

 யார் கண்ணிலும் படாமல் ராபர்ட்டை அழைத்துச் செல்வது ஒரு சவாலாக இருந்தது. கண்காட்சியில் ஒரு கூடாரம் அமைத்து மந்திர தந்திரக் காட்சிகளை நிகழ்த்திக் கொண்டிருந்த ஒரு தம்பதியினரிடம் சென்று ராபர்ட்டைக் காட்டி, “இவரை உங்க கண்காட்சிக்கு பயன்படுத்திக்கலாம். அதுக்கு சன்மானமா 200 ரூபாய் நீங்க தரணும்” என்று கேட்க, அந்த தம்பதியினரும் ஒத்துக்கொண்டனர்.

 ஒரு திரைக்குப்பின் ராபர்ட்டை நிறுத்தி வைத்து, வந்திருந்த மக்களிடம், “இதோ! பாதாள உலகத்தின் மிக உயர்ந்த மனிதர் ஒருவர் உங்கள் பார்வைக்காக வந்திருக்கிறார்!” என்று அறிவித்து திரைச்சீலையை விலக்கினார் அந்த அரங்க உரிமையாளர்.

 எல்லா மக்களுக்கும் மிக உயரமான ராபர்ட்டைப் பார்த்ததில் மிகுந்த ஆச்சரியம். அவனைக் கிள்ளி பார்த்தும் அவன் மேல் தண்ணீரை ஊற்றியும் அது உண்மையான மனிதன் தானா என்று பரிசோதனை செய்தனர். இதெல்லாம் ராபர்ட்டுக்கு எரிச்சலாக வந்தது. எப்படியோ எல்லாவற்றையும் சகித்துக் கொண்டான்.

 மாலை நேரம் நெருங்கியது. “இப்ப மறுபடி ராபர்ட் சாதாரணமான பையனா மாறிடுவானே! இதை எப்படி சமாளிக்கிறது?” என்று யோசித்தனர்.

 அப்போது ஆந்த்தியா ஒரு யோசனையைக் கூறினாள். “முதல்ல நானும் ஜேனும் வெளியே போறோம். சிறில்! நீ ராபர்ட்டுக்கு சாப்பாடு வாங்கப் போறேன்னு சொல்லி முன் பக்க வாசல் வழியாக வெளியே வந்துடு.. ராபர்ட்! பின்பக்க வாசல்ல இந்தக் கூடாரத்தோட உரிமையாளரின் மனைவி நிக்கிறாங்க. கொஞ்ச நேரத்துல நீ பழைய உருவத்துக்கு வந்தவுடனே அவங்ககிட்ட சாப்பாடு வாங்கப் போறதா சொல்லிட்டு வெளியே வந்துடு” என்று கூறினாள். எல்லாருக்கும் அந்த யோசனை சரியாகப்பட்டது.

 அவர்கள் எதிர்பார்த்த மாதிரியே மக்கள் கூட்டம் ஓய்ந்திருந்த கொஞ்சம் நேரத்தில் ராபர்ட் பழைய மாதிரி சிறியவன் ஆகிவிட, திட்டப்படியே எல்லாம் நடந்தேறியது. முன் வாசலில் நின்றிருந்த கணவனிடம் சொல்லிக் கொண்டு சிறில் வெளியே போனதும்,  தோற்றத்தில் அவனை மாதிரியே இருந்த ராபர்ட் பின்வாசல் வழியே வெளியேற அவனை சிறில் என்று நினைத்து அவரது மனைவியும் தடுக்கவில்லை. இப்படியாக அந்த நாளை மேலும் பிரச்சனையின்றி குழந்தைகள் கழித்து விட்டனர்.

அடுத்தடுத்த நாள்களில் கிடைத்த அனுபவங்களால் குழந்தைகள் ரொம்பவும் சோர்ந்து போய் விட்டிருந்தார்கள். “நாளைக்கு நம்ம அம்மாவும் அப்பாவும் வர்றாங்க.. இனிமே மணல் தேவதை கிட்ட போய் கோமாளித்தனமான வரங்கள் வாங்கிட்டு அப்புறம் மாட்டிகிட்டு முழிச்சோம்னா அவங்க ஈசியா கண்டுபிடிச்சுடுவாங்க” என்றான் சிறில்.

“ஆமா! மார்த்தாவை ஏமாத்துற மாதிரி அவர்களை சமாளிக்க முடியாது” என்றாள் ஆந்த்தியா.

“இனிமே நமக்கு வரமே வேண்டாம். மணல் தேவதை கிட்ட போய் நாம எடுத்திருக்கிற முடிவை சொல்லிட்டு அதுக்கு ஒரு டாட்டா பாய் சொல்லிட்டு வரலாமா?” என்று ஜேன் கேட்க, “கண்டிப்பா!” என்றபடி கடற்கரைக்குச் சென்றனர்.

 மணல் தேவதையைத் தேடி எடுத்தவர்கள், “இனிமே நாங்க உன்னைத் தொல்லை பண்ண மாட்டோம். எங்களுக்கு எந்த வரமும் வேண்டாம். ஆனா உன்னை சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம். உன்னை நாங்க எப்பவுமே மறக்க மாட்டோம்!” என்று கூறினர்.

“இத்தனை நாள் நான் உங்களுக்கு நிறைய வரங்கள் குடுத்தேனே.. இப்போ உங்களை ஒண்ணு கேக்கட்டுமா?” என்றது மணல் தேவதை.

“தாராளமா!” என்று குழந்தைகள் கூற,

“நீங்க என்னைப் பார்த்ததையோ இல்லை நான் வரம் குடுத்ததையோ வெளில யார்கிட்டயும் சொல்லக்கூடாது. சரியா?” என்று கேட்டது மணல் தேவதை.

“கண்டிப்பா சொல்ல மாட்டோம்! வாய்ப்பிருந்தா மறுபடியும் நாம சந்திக்கலாம்” என்று கூறி நான்கு பேரும் பிரியா விடை பெற்றனர்.

(முற்றும்)

அடுத்த இதழில்:

 இதே கதை மாந்தர்கள் தோன்றும், ‘ஐந்து குழந்தைகள் மற்றும் அது!’ கதையின் அடுத்த பகுதியான “ஃபீனிக்ஸ் பறவையும் மந்திரக்கம்பளமும்!”.. காத்திருங்கள்.. மீண்டும் மந்திர உலகில் பயணிக்கலாம்!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments