பொன் வண்டு தேவதை சொன்னவற்றைக் கேட்ட தாமரை, சிந்தனையில் ஆழ்ந்தாள்.

” எனக்குப் பரிசெல்லாம் வேணாம். ஆனா உன்னைப் பாத்தாப் பாவமா இருக்கு. அதுக்காக என்னால முடிஞ்ச உதவி செய்யறேன். நீயும் உங்கம்மா, அப்பா கிட்ட பத்திரமாப் போய்ச் சேந்துட்டா அதுவே எனக்குப் போதும்” என்று சொன்னதும், அந்தக் குட்டி தேவதை மகிழ்ந்து போனாள்.

” தாமரை, நீ ரொம்ப நல்ல பொண்ணு. உன்னோட மனசு தங்கமான மனசு ” என்றாள் அந்தக் குட்டி தேவதை‌.

” எனக்கு அந்தப் பையனைப் பத்தி இன்னும் கொஞ்சம் விவரம் சொல்லு. அப்பத் தான் அவன் யாருன்னு கண்டுபிடிக்க முடியும்” என்று தாமரை சொன்னதும்,

” அவன் கொஞ்சம் குண்டா இருந்தான். குள்ளமாத் தெரிஞ்சான். ஒரு நிமிஷம் கூட உக்காராம , குதிச்சுக்கிட்டே இருந்தான். இன்னைக்குத் தான் மொதல் தடவையா நான் அவனைப் பாத்தேன். அவன் கூட யாரும் இல்லலாததுனால அவனோட பேரு எனக்குத் தெரியலை.

யாராவது கூட இருந்திருந்தா, அவனைப் பேர் சொல்லிக் கூப்பிட்டிருப்பாங்க இல்லையா? அப்புறம் பூச்சிகள், எறும்புகளை எல்லாம் புடிச்சுப் புடிச்சுத் தண்ணிக்குள்ளே போட்டுக்கிட்டே இருந்தான். மூக்கை மூக்கை உறிஞ்சிக்கிட்டே இருந்தான்” என்று குட்டி தேவதை சொன்னதும் தாமரையின் முகம் மலர்ந்து போனது.

” ஓ அவனா? எனக்குத் தெரிஞ்சு போச்சு? நான் இன்னைக்கு சாயந்திரம் ஆடு, மாடுகளை எல்லாம் கொண்டு சேத்துட்டு அவன் வீட்டுக்குப் போய், அவன் கிட்டக் கெஞ்சிக் கூத்தாடி எப்படியாவது மணியை வாங்கிட்டு வரேன். அவ்வளவு ஈஸியாத் தருவானான்னு தெரியலை. பேசிப் பாக்கறேன். அவன் பேரு லட்டு கோபால். அவனுக்கு ஒரு லட்டு கொடுத்தா, ஈஸியாக் கேட்டதைக் கொடுத்துருவான். ஆனா, நான் லட்டுக்கு எங்கே போவேன்?” என்று வருத்தப்பட்டாள்.

” என் கிட்ட மாத்திரம் அந்த மணி திரும்ப வந்திருச்சுன்னா, என்னோட மந்திர சக்தி எல்லாம் திரும்ப வந்திரும். எவ்வளவு லட்டு வேணாலும் என்னால வரவழைக்க முடியும். நீ வேணா அவன் கிட்ட இந்த மாதிரி சொல்லிப் பாரு. நீ மணியைக் கொடுத்தேன்னா, நான் நாளைக்கு சாயந்திரம் லட்டு தரேன்னு சொல்லிப் பாரு” என்றாள் அந்தப் பொன்வண்டு தேவதை.

” சரி, சரி, நீ ரொம்பக் கவலைப்படாதே. அந்த கோபால் குறும்பு நெறைய செய்வானே ஒழிய நல்ல பையன் தான். நானே ஏதாவது முயற்சி செஞ்சு பாக்கறேன். பேசாம அவன் கிட்ட உண்மையைச் சொல்லிக் கேட்டா என்ன?” என்றாள் தாமரை.

” இல்லை இல்லை. நெறையப் பேர் கிட்ட என்னைப் பத்தின உண்மைகளைச்

சொல்லக் கூடாது. எங்க கூட்டத்தில இருக்கறவங்களுக்குத் தெரிஞ்சா, எனக்கு தண்டனை கொடுப்பாங்க. அதுனால சொல்ல வேண்டாம் ப்ளீஸ்” என்று கேட்டுக் கொண்டாள் அந்த குட்டி தேவதை.

” சரி, சரி, கவலைப்படாதே. இன்னைக்கு ராத்திரி மட்டும் எப்படியாவது பத்திரமா இரு. வெளியே எங்கயும் வராதே. பொந்துக்குள்ளேயே இரு, என்ன? நான் காலையில் எப்படியும் மணியோட வந்துடறேன்” என்று சொல்லி விட்டு, தாமரை ஆடு, மாடுகளை விரட்டிக் கொண்டு போனாள்.

பொன்னம்மா ஆச்சியின் வீட்டுக் கொட்டிலில் ஆடு, மாடுகளை பத்திரமாகச் சேர்த்து விட்டு, குண்டு கோபாலின் வீட்டுக்குப் போனாள் தாமரை.

அவன் வாசலிலேயே விளையாடிக் கொண்டிருந்தான். பூச்சிகளையெல்லாம் வழக்கம் போல விரட்டிக் கொண்டிருந்தான். வண்ணத்துப் பூச்சிகளைப் பிடித்து ஒரு பாட்டிலில் போட்டு அடைத்து வைத்துக் கொண்டிருந்தான்.

butterfly
படம்: அப்புசிவா

” பாவம்டா கோபால் இந்தப் பூச்சிகள்ளாம். விட்டுருடா. இப்படி பாட்டிலில் போட்டு அடைச்சு வச்சாச் செத்துப் போயிடுண்டா” என்று கெஞ்சினாள்.

” நீயே பாரு. பாட்டிலுக்குள்ளேயே தப்பிக்க முடியாமச் சுத்தி சுத்தி வரதைப் பாக்க எவ்வளவு ஜாலியா இருக்கு தெரியுமா? படபடன்னு இறக்கைகளை அடிச்சுக்கிட்டு எப்படி சுத்துதுங்க பாரு” என்றான்.

” இல்லைடா, என்னால ரசிக்க முடியலை. இப்ப நீ இந்த மாதிரி செஞ்சேன்னா, அடுத்த ஜன்மத்தில நீ பூச்சியாவும், இந்த மஞ்சள், கறுப்பு வண்ணத்துப்பூச்சி கோபாலாவும் பொறந்து, இது உன்னைப் பிடிச்சு  அடைச்சுப் போடப்  போவுது” என்ற தாமரையின் சொற்களைக் கேட்டு,  கோபாலின் முகம் பயத்தில் வெளிறிப் போனது.

” அப்படியா சொல்லறே நீ? நெஜமாவே அப்படி நடக்குமா என்ன? என்னைப் பயமுறுத்தத் தானே அப்படி சொன்னே?”

” இல்லை, இல்லை. நெஜமாவே தான். எங்க பாட்டி சொல்லுவாங்க” என்று சொன்னதும் கோபால் அந்த வண்ணத்துப் பூச்சிகளை பாட்டிலில் இருந்து விடுதலை செய்தான். மகிழ்ச்சியுடன் அவை பறந்து சென்றன.

” நீ இன்னைக்குக் காலையில ஆத்தங்கரைக்குப் போய் விளையாடினயா?”

” ஆமாம், உனக்கெப்படி தெரியும்? நான் வெளையாடின போது நீ அங்கே இல்லையே?”

” யாரோ அங்கே உன்னைப் பாத்தவங்க சொன்னாங்க. ஆமாம், இன்னைக்கு அங்கே ஏதாவது புதுசாக் கெடைச்சதா?”

” ஆமாம். எனக்கு ஒரு மணி கெடைச்சது. என் ரூமில பத்திரமா வச்சிருக்கேன். அது ஒரு பொன்வண்டோட தலைக் கொண்டையில இருந்துச்சு தெரியுமா? அந்தப் பொன்வண்டு பேசின மாதிரி எனக்குக் கேட்டுச்சு. பயந்து போய் ஓடியே வந்துட்டேன்” என்றேன்.

” அந்த மணியை எனக்குத் தரயா ப்ளீஸ்?”

” அதெல்லாம் தர‌ முடியாது போ. ஏற்கனவே நீ சொல்லி, அந்த வண்ணத்துப் பூச்சிகளை எல்லாம் விட்டுட்டேன்.‌ இப்ப மணியை வேற ஒனக்குக் கொடுக்கணுமா? முடியாது. சரி, மணியை நான் உனக்குக் குடுத்தா, நீ எனக்கென்ன தருவே?”

” நீ மணியைக் கொடு. நான் நாளைக்கு உனக்கு லட்டு தரேன்.”

” அதெல்லாம் முடியாது. நீ லட்டு கொண்டு வா. நான் மணியைத் தரேன்” என்று சொல்லி விட்டு உள்ளே ஓடிப் போனான்.

வருத்தத்துடன் தாமரை வீடு போய்ச் சேர்ந்தாள். அதிர்ஷ்டம் அவள் பக்கம் இருந்தது. சித்தி, தான் வேலை பார்க்கும் வீட்டில் பார்ட்டி நடந்ததென்று சொல்லி, லட்டுக்கள் கொண்டு வந்திருந்தாள். அவற்றை எடுத்துக் குழந்தைகளுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தாள். சித்தியிடம் இரண்டு லட்டுக்களை வாங்கிக் கொண்ட தாமரை, சிட்டாகப் பறந்தாள்.

” கோபால், கோபால், இந்தா, உனக்காக ரெண்டு லட்டு” என்று அவனிடம் கொடுக்க, கோபாலின் கண்கள் விரிந்தன. உள்ளே போய் மணியைக் கொண்டு வந்து அவள் கையில் கொடுத்து விட்டு, லட்டுக்களை வாங்கிக் கொண்டான். தாமரை வீட்டுக்கு வந்தாள்.

அடுத்த நாள் காலையில் வழக்கத்தை விடச் சீக்கிரமாகவே கிளம்பி வேலைக்குப் போனவள், பொன்வண்டிடம் மணியைக் கொடுத்தாள். 

” என்னோட தலையில் நீயே பொருத்திவிடு” என்று அந்தப் பொன்வண்டு கேட்டுக் கொண்டது. உடனே அதன் கொண்டையில் தாமரை அந்த மணியை வைத்தாள். அது நன்றாக ஒட்டிக் கொண்டது.

உடனே அந்தப் பொன்வண்டு ஒரு தேவதையாக மாறி, அவள் முன்னே காட்சி தந்தது.

” நீ எனக்குப் பெரிய உதவி செஞ்சதால, நான் உனக்காகவே சில அபூர்வ சக்திகள் தரப் போறேன்” என்று சொல்லி விட்டுத் தன் கையில் இருந்த மந்திரக் கோலால் தாமரையைத் தொட்டாள்.

உடனே தாமரை ஒரு தங்கப் பெண்ணாக மாறினாள். அதாவது உடலெல்லாம் தகதகதவென்று பொன்னாக மின்னியது. முதுகில் இறக்கைகள் ஒட்டிக் கொண்டன.

தாமரை ஆச்சர்யத்தில் திகைத்துப் போனாள்.

” நீ ஒரு கையை முன்னால் நீட்டிக் கொண்டு, “‘கோல்டன் தமிழச்சி, பற’ என்று சொன்னால், உன்னால் பறக்க முடியும். கீழே இறங்க வேண்டுமானால்,  ‘கோல்டன் தமிழச்சி, இறங்கு’ என்று சொன்னால் உன்னால் இறங்க முடியும்.

உனக்கு என்ன வேண்டுமோ அதற்கு முன்னால் கோல்டன் தமிழச்சி சேர்த்து நீ சொன்னால், நீ நினைப்பது நடக்கும்.‌ நீ திரும்ப, தாமரையாக வேண்டுமானால், கையை நீட்டி, ‘ தாமரை’ என்று சொன்னால் மாறி விடுவாய் .

எப்போது உனக்குத் தேவையோ அப்போது தனியிடத்துக்கு வந்து, என்னை நினைத்து, ‘ மின்மினி, தாமரை டு கோல்டன் தமிழச்சி’ என்று சொன்னால் மாறி விடுவாய். என்னுடைய பெயர் மின்மினி.

ஞாபகம் வைத்துக் கொள். யார் எதிரிலாவது நீ செய்தால் மந்திரம் பலிக்காது. தனிமையில் தான் உருவத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அப்புறம் எந்த ஆயுதத்தாலும் உனக்கு பாதிப்பு ஏற்படாது. தீயோ, சுடுநீரோ, குளிர்நீரோ, புயற்காற்றோ, எந்த விதமான ஆயுதமோ எதுவுமே உனக்கு இடையூறு விளைவிக்காது.

யாராவது கஷ்டத்தில் இருந்தால், நீ கோல்டன் தமிழச்சியாக மாறி உதவி செய்யலாம். ஆனால் உருவத்தை மாற்றிக் கொண்டு ஏதாவது தவறான செயல் செய்தால், அதாவது மற்றவர்கள் பொருட்களைத் திருடுவது போன்ற செயல்களைச் செய்தால் உன்னுடைய சக்தியை நான் திரும்ப எடுத்துக் கொண்டு விடுவேன்.

நீ ரொம்ப நல்ல பெண். நிச்சயமாகத் தவறு செய்ய மாட்டேன்னு எனக்குத் தெரியும். எல்லோருக்கும் உதவிகள் தான் செய்வாய். அதனால் தான் நம்பிக்கையுடன் நான், உன்னை இந்த நொடியில் இருந்து அதீத சக்திசாலியாக மாத்தறேன்” என்று சொல்லி விட்டு, அவளுடைய கண்களின் எதிரிலிருந்து மின்மினி மறைந்து விட்டாள்.

நடந்த செயல்களை தாமரையால் நம்பவே முடியவில்லை. ஆனால் அவளுடைய தங்க உடல், நடந்தவை அனைத்தும் உண்மை என்று அவளை நம்ப வைத்தது. கையை நீட்டி, ‘ தாமரை’ என்று அவள் சொன்னதும், மீண்டும் அதே ஏழைச் சிறுமி தாமரையாக மாறினாள்.

ஆனால் அடுத்தடுத்து கோல்டன் தமிழச்சியாக மாற வேண்டிய வாய்ப்புகள் அவள் முன்னே தானாகவே தோன்றின. கோல்டன் தமிழச்சியின் சாகசங்கள் ஒன், டூ, த்ரீ , ரெடி, ஸ்டார்ட் என்று ஆரம்பித்து விட்டன.

தொடரும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments