முன்பொரு காலத்தில்(வந்துட்டோம்!!🙂🙂) கடலில் நண்டு குடும்பம் ஒன்று வசித்து வந்தது. அந்த குடும்பத்தில் கடைசி நண்டு உங்களைப் போலவே பயங்கர வாண்டு.. பெயர் நட்டி.
நட்டிக்கு இந்த உலகத்திலேயே பிடிக்காத காரியங்கள் இரண்டு. ஒன்று மாலையில் விளையாடாமல் படிப்பது. மற்றொன்று காய் சாப்பிடுவது.
நட்டியின் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி எல்லோருமே பல மணி நேரம் உட்கார்ந்து பேசி பேசி பார்த்தார்கள். ம்கூம்..எந்த பயனும் இல்லை.
அம்மா பாடத்தை எடுத்ததும் நட்டி கடலுக்குள் உள்ள மண்ணுக்குள் போய் ஒளிந்து கொள்வான். தேடுவார்கள். தேடுவார்கள்.. தேடிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் கண்டுபிடிக்கவே முடியாது.
நட்டிக்கும் தன் குடும்பமே தன்னைத் தேடுவதைக் காண ஒரே கொண்டாட்டமாக இருக்கும்.
ஆனால் அவன் அப்பாவிற்கோ ஒரே வருத்தம். இப்படியே இருந்தால் நம் நட்டி ஒன்றுமே தெரியாதவனாக, உடலில் பலமில்லாதவனாக மாறி விடுவானே என்று ரொம்பவும் வருந்தினார். அதைப் பார்த்த நட்டியின் பாட்டிக்கு ஒரு ஐடியா வந்தது.
நாம் எல்லோரும் கடல் ராஜாவிடம் வேண்டிக் கொள்ளலாம். அவரால்தான் நம் நட்டியைப் படிக்க வைக்க முடியும்; சத்தான உணவைச் சாப்பிட வைக்க முடியும் என்றார் பாட்டி நண்டு.
அவர் யோசனையின் படி எல்லோரும் சேர்ந்து கடுமையான தவம்செய்தார்கள். கடல் கடவுள் உடனே வந்து விட்டார்.
“ஆஹா.. இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்களே.. நீங்க ரொம்ப நல்ல கடவுள்”, என்று நட்டியின் அம்மா சந்தோசமாகக் கூறினார்.
அதைக் கேட்ட, கடல் கடவுள், “நான் உங்கள் தவத்திற்காக வரவில்லை மகளே” என்று தன் இரு கரம் உயர்த்திச் சொன்னார்.
“பின்னே?”
“நீங்கள் இப்படி தவம் இருந்தால் நட்டியைப் பார்த்துக் கொள்வது யார்? அவனுக்காகத்தான் உடனே வந்தேன்” என்று புன்னகையோடு கூற நட்டி குடும்பத்தினர் அனைவரும் “ஙே” என்று விழித்தார்கள்.
“சரி.. இப்போ ஏன் என்னை அழைத்தீர்கள்?”
“அது.. கடவுளே.. இந்த நட்டி சரியாகப் படிக்க மாட்டேன் என்கிறான்; சத்தானதை சாப்பிட மாட்டேன் என்கிறான்.. அவனை எப்படியாவது படிக்க, சாப்பிட வையுங்கள்”
கடல் கடவுள் உசாரானார். ஆஹா.. நாம் மட்டும் இப்போ படிக்க வைக்கிறேன், சாப்பிட வைக்கிறேன் என்று வாக்கு கொடுத்து விட்டால் எல்லா பெரியவர்களும் அவர்கள்வீட்டு வாண்டுகளைப் படிக்க, சாப்பிட வைக்க நம்மிடம் வந்து நிற்பார்கள். அத்தனை பெரிய வேலைக்கு நாம் கமிட் ஆகக் கூடாது.. என்ன பண்ணலாம் என்று வேகவேகமாக யோசித்தார்.
கடவுளுக்கு ஐடியா வராமல் இருக்குமா? வந்து விட்டது.. அதை செயல்படுத்தவும் செய்தார். “பக்தர்களே! உங்கள் கஷ்டம் புரிகிறது.. ஆனால் ஒரு பிரச்சனை..”
“என்ன?” “என்ன?”.. என்று எல்லோரும் கோரசாகக் கூறினார்கள்.
” எப்படிமரணமே இல்லை என்று வரமளிக்க முடியாதோ அது போல சிறு பிள்ளைகளைப் பெற்றவர்கள் விரும்புகிற படி படிக்க, சாப்பிட வைக்கும்படி வரம் அளிக்கக் கூடாது என்று புதிதாகக் கடவுள்களுக்கு சட்டம் போட்டிருக்கிறார்கள்.”
‘அச்சச்சோ.. இப்போ என்ன செய்வது?”
“ம்ம்.. நீங்களே அவனைப் படிக்கவைப்பதற்கு தோதாக ஏதாவது வரம் கேளுங்கள்” என்று நட்டி வீட்டு பெரியவர்களையே லாக் செய்தார் அந்த கடல் கடவுள்.
ஆஹா.. என்ன கேட்பது என்று எல்லோரும் யோசிக்கும்போது நட்டியின் தாத்தாவிற்கு ஒருஅபாராமான யோசனை வந்தது. அதைக் கேட்கவும் செய்தார். “கடவுளே! இந்த கடலில் அடியில் இருக்கும் மண்ணை எல்லாம் கரைக்குக் கொண்டு வந்து விடுங்கள். நட்டி எங்களிடம் தப்பிக்க மண்ணிற்குள் ஒளிந்து கொண்டால் அவனைக் கண்டுபிடிக்கவே எங்களால் முடிவதில்லை. இந்த மண் இல்லையென்றால் ஈசியாக நட்டியைப் பிடித்து படிக்க, சாப்பிட வைத்து விடுவோம்” என்றார்.
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்ட நட்டியின் பாட்டி, அம்மா, அப்பா அனைவரும், ‘இது சரியான யோசனைதான்’ என்று எண்ணி தலையை ஆட்டினர்.
“ம்.. உங்கள் கஷ்டம் எனக்குப் புரிகிறது!” என்று தலையை ஆட்டிய கடல் கடவுள், தன் இருகரங்களைத் தட்டி “யாரங்கே!” என்றார். அவர்அழைத்ததும், “இதோ மன்னா!” என்று அலை வீரர்கள் அடித்துப் பிடித்து ஓடி வந்தார்கள்.
“வீரர்களே! இந்த கடலின் அடியில் உள்ள மண்ணை எல்லாம் கடற்கரைக்குக் கொண்டு சேர்த்து வையுங்கள்” என்று கை கட்டிய படி கடல் ராஜா சொல்ல, “இதோ மன்னா!” என்று மறுபடியும் ஓடினார்கள்.
தங்கள் ராஜா சொன்னபடி பல இலட்ச ஆண்டுகளாக கடல் அலைகள் மண்ணை அள்ளி வந்து கடற்கரையில் கொட்ட, ‘பீச்’ உருவாகியது. இப்போதும் கடலிலிருந்து தப்பிவரும் நண்டுகள் கடற்கரை மணலுக்குள் ஒளிந்து கொள்கின்றன!!🙂
சரி இப்போது அறிவியல் உண்மையைப் பார்க்கலாமா?
கடற்கரை எப்படி உருவாகிறது?
ஆறுகள் மலையிலிருந்து அருவியாக கீழே வீழ்ந்து, ஆறாக நடைபோட்டு கடலில் வந்து கலக்கின்றன. வரும்போது வழியில்
பாறைகளை அரித்து மண்துகள்களாக மாற்றி, கடலுக்குள் கொண்டு சேர்க்கின்றன. அப்படி கடலுக்கு வந்த மண்துகள்களை அலைகள் கரைக்குகொண்டு வந்து சேர்க்கும். இப்படிதான் பீச் உருவாகிறது.
பீச் எப்படி உருவாகிறதுன்னு தெரிஞ்சிகிட்டீங்களா குட்டீஸ்..
அருமை 👌👌👏👏
அருமையான கதை.காட்சிகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.