சித்ராவுக்கு ஒரே வருத்தம். எதிர் வீட்டில் ஒரு நாய்க்குட்டி வந்திருக்கிறது. அம்மா சொன்னாள் நிறைய விலை கொடுத்து வாங்கி வந்தார்களாம்.

சித்ராவுக்கு குழப்பமாக இருந்தது. “ஏம்மா அந்த அத்தை போன வாரந்தானே ஒருநாள் தெரியாம அவங்க தோட்டத்துக்குள்ள நுழைஞ்ச ஒரு நாயை அப்படி துரத்துனாங்க…’ 

“ஆமா சித்ரா, அது தெருநாய். கடிச்சிடக் கூடாது இல்லையா.. அதான் துரத்திட்டாங்க’ 

“அப்ப இந்த நாய் கடிக்காதாம்மா?”

“இதுக்குன்னு டாக்டர் இருக்காங்க அவங்க கிட்ட போய் தடுப்பூசி போட்டுக்குவாங்க” என்று விளக்கம் கொடுத்தாள்.

dogg
படம்: அப்புசிவா

பக்கத்து வீட்டு அக்கா நிறைய வருடங்களாக காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கிப் படித்தார்களாம். இப்போது அந்த அக்கா கல்லூரியில் படிக்க டெல்லிக்குப் போய்விட்டாலும் அந்த அத்தை அதையெல்லாம் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கிறார். அந்த அக்கா விளையாடிய பொம்மைகள் கூட இருக்கும் அந்த அறையில். சித்ராவும், மாடியில் வசிக்கும் ரூபாவும் கூட்டுச் சேர்ந்துகொண்டு அங்கு போய் மணி அடிப்பார்கள். அந்த மாமா அலுவலகம் போனபின்தான் வரவேண்டும் என்று அத்தை சொல்லுவாள்.

“எங்களை மாமாவுக்குப் பிடிக்காதா அத்தை” 

“இல்லடா கண்ணு.. மாமா வீட்டிலயும் கூட ஆஃபீஸ் வேலை செய்திட்டு இருப்பார்.. நீங்க சத்தம் போட்டா தொந்தரவா இருக்குமே. அப்புறம் அவரு கோவிச்சிட்டா உனக்கு, எனக்கு எல்லாருக்குமே கஷ்டமா இருக்கும் தானே.. அதனாலதான்’ சமாதானம் சொன்னது போதாது என்று கடலை மிட்டாயோ, முறுக்கோ தின்னக் கொடுப்பாள். இங்கயே உக்காந்து சாப்பிட்டுட்டு கை கழுவிட்டு, ஈரத்தைத் துடைச்சிட்டு அப்புறந்தான் புத்தகத்தை எடுக்கணும்… எண்ணெய்க் கையோடு தொட்டா புத்தகம் வீணாயிடும்… சமயத்துல எலி கூட கடிச்சிடும்… அதுக்குதான் என்று விளக்கமும் சொல்வாள்.

சித்ராவுக்கு ஒரு கதையை எடுத்தால் ஒரே மூச்சில் படிக்க வேண்டும். ரூபா ஒரு புத்தகத்தையே இரண்டு மூன்று நாட்கள் படித்துக் கொண்டிருப்பாள்.

அன்று ஒருநாள் அப்படித்தான் அத்தை கொடுத்த எள்ளு கேக்கை சாப்பிட்டுவிட்டு பூஞ்சை முயலின் கதையைப் படிக்க ஆரம்பித்தாள். ரூபா போன வாரத்திலிருந்து படித்துக்கொண்டிருந்த ஜப்பான் பொம்மை கதையை எடுத்து வைத்துக்கொண்டாள். அப்போதுதான் அத்தை வந்து சொன்னார்கள். “நாளைக்கி அக்கா ஊரிலிருந்து வந்திடுவா. கொஞ்ச நாள் அவ இங்கதான் இருப்பா. அதனால் நீங்க உக்காந்து படிக்க விளையாட சிரமமா இருக்கும். நாலைஞ்சு புத்தகம் வேணும்னா தரேன். வீட்டுலயே வெச்சு பத்திரமா படிச்சிட்டுத் தாங்க’

அம்மா கூட சொன்னது சித்ராவுக்கு நினைவு வந்தது. பெரிய காய்ச்சல் ஒன்று வந்திருக்குன்னு சொல்றாங்க. எல்லா பள்ளிக்கூடம் கல்லூரியும் மூடறாங்க. ஒரு மாசமாச்சும் ஆகுமாம். செய்தியில சொன்னாங்களாமே…

சித்ராவிடம் ரூபா கூட கேட்டாள்.

“யாருக்கு காய்ச்சலோ அவங்களை மட்டும்தானே டாக்டர்கிட்ட அழைச்சிட்டுப் போகணும்… போன வாரம் கூட அவள் தம்பியை அப்படித்தானே அழைச்சிட்டுப் போனாங்க?” என்று. 

சித்ரா அம்மாவிடம் கேட்டுச் சொல்வதாகச் சொன்னாள்.

அம்மாவுக்கும் சரியாக தெரியவில்லை. அப்பாவும் இன்று சென்னையிலிருந்து ஊருக்கு வந்து விடுவாராம். அவரிடம் கேட்டால் தெரியும் என்றாள். சித்ராவின் அம்மா உள்ளூரில் இருந்த சிறு அரிசி ஆலையில் வேலைக்குப் போவாள். அப்பா சென்னையில் ஒரு கடையில் வேலை பார்க்கிறார். தம்பியைப் பார்த்துக்கொண்டு ஆயா வீட்டில் இருப்பாள்.

சித்ராவுக்கு சென்னைக்குப் போகவேண்டுமென்று ஆசை. அங்கே பெரிய பள்ளிக்கூடம் இருக்குமாமே நாமெல்லாம் அப்பாவுடனேயே போகலாமே என்று ஒவ்வொரு முறையும் அவள் முகத்தை உம்மென்று வைத்து கோபித்துக் கொள்வாள். ஊருக்குக் கிளம்பும் அப்பா தனக்கு இன்னும் கொஞ்சம் அதிகம் சம்பளம் கிடைத்ததும் அழைத்துப் போவதாகச் சொல்லிவிட்டு சித்ராவுக்கு முத்தம் கொடுத்து ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பி விடுவார்.

அப்பாவோடு சைக்கிளில் போவதென்றால் அவளுக்கு அத்தனை குஷி. அதற்காகத்தான் வம்பு செய்கிறாளோ என்று அம்மாவும் சைக்கிள் கற்றுக்கொண்டாள்.

அங்கு எல்லோரும் போய் தங்குவதற்கு வீடு இல்லை, நிறைய செலவாகும் என்றெல்லாம் காரணம் சொல்லி சமாதானப்படுத்துவாள்.

எதற்கும் சரிவராமல் முகத்தைத் துருத்திக்கொண்டு திரிந்தால், “இப்ப பாரு பக்கத்து வீட்டு அத்தை இருக்காங்க… உனக்குப் புத்தகம் படிக்கலாம்.. தின்னக் கொடுப்பாங்க, பொம்மை வெச்சு விளையாடலாம்… அங்க யாரும் இதெல்லாம் செய்ய மாட்டாங்க” என்று மிரட்டுவாள்.

அப்படி யாரும் இல்லாத ஊருக்குப் போக வேண்டாமே என்று சித்ராவும் சமாதானமாகி விடுவாள்.

அப்பா இத்தனை நாட்கள் சேர்ந்தாற்போல இங்கு வந்து தங்கியதேயில்லை. அப்பா கூட சைக்கிளில் சுற்றும் ஆசையும் பலிக்கவில்லை. யாரும் வீட்டை விட்டு எங்கேயும் போகக்கூடாதாம். அம்மா வேலை பார்த்த ஆலையும் மூடிவிட்டார்களாம். ஆயா எப்படியும் ஒரு மாதத்துக்கொரு முறை பக்கத்து சுகாதார நிலையம் போய் கைவலி கால்வலி என்று மாத்திரை வாங்கி வருவது வழக்கம். அதெல்லாம் வரக்கூடாது என்று சொல்லி விட்டார்களாம்.

மாடியிலிருந்து ரூபா ஓரிரு நாள் வந்து கொண்டிருந்தாள். அப்புறம் ஒருநாள் ரூபாவின் சொந்தக்காரர் யாருக்கோ அந்தக் காய்ச்சல் வந்து விட்டதாம்.

அதனால் அவளை வரச்சொல்லி விளையாடக் கூடாது என்று அப்பா சொன்னார். ஏம்பா என்று ஏக்கமாக சித்ரா கேட்டபோது அந்த காய்ச்சல் வந்தால் சில பேர் இறந்து கூடப் போய்விடுகிறார்கள் என்றார். “அந்த கொரோனா பாத்தாலே வந்துருமாப்பா?” என்றாள்.

“இல்லடா, தொட்டா ஒட்டிக்கும்னு சொல்றாங்க… தும்முனா, இருமுனா கூட வருமாம்” என்றாள் அம்மா.

“நீங்க எனக்கு அந்த மூக்கை மூடற துணி வாங்கித்தாங்க. நானும் ரூபாவும் தொடாம பேசிக்கறோம்” என்றாள் சித்ரா.

பள்ளிக்கூடம் இல்லை, நண்பர்கள் இல்லை. விடுமுறைக் காலம் என்று விளையாடவும் முடியவில்லை. ரூபாவையும் பார்க்கக்கூடாதா? சைக்கிளில் வெளியில் சுற்றலாம் என்று கூப்பிட்டால் அப்பாவோ, அம்மாவோ திட்டுகிறார்கள். தம்பிப் பயல் வேறு எப்போதும் அழுகிறான். அதையே பார்த்துக்கொண்டு என்ன செய்வது?

சித்ராவின் கண்ணில் ரூபா இறங்கி வருவது தெரிந்ததும் மறைவாக மாடிப்படி அருகே போய் நின்று கொண்டாள். அவளுக்குத் தெரியாமல் கையை நீட்டி ஒரு கிள்ளு கிள்ளியதும் ரூபா திடுக்கிட்டாள்.

சித்ராதான் என்று தெரிந்ததும் சிரிப்பு வந்து விட்டது.

கிள்ளு விழுந்த இடத்தைத் தேய்த்துக்கொண்டாள் ரூபா.

“ஏ… அந்த காய்ச்சலுக்கு பேரு என்னா தெரியுமா?” என்று சித்ரா கேட்க,

“தெரியுமே எங்க அப்பா சொன்னார்… கொர்னாவாம்” என்று பதில் கூறினாள் ரூபா.

“கொர்னா இல்ல கொரோனா …”

வழக்கம்போல திருத்தினாள் சித்ரா.

“இல்லல்ல கொர்னா தான்.. கொர் கொர் னு அந்த மண்டு சிங்கம் கதையில வர்ர சிங்கம் மாதிரி கொறட்ட விடுமா…”

“இல்ல.. எங்க ஆயா மத்தியானம் விடுற மாதிரி…கொர்..

கொர்… னு விடும் அதான் கொர்னா!”

அப்புறம் சில நாளில் ரூபா வீட்டிலும் ஊருக்குப் போய்விட்டார்கள்.

அடுத்த வீட்டு அத்தை கடைசியாகக் கொடுத்த புத்தகத்தில் இருந்த பூஞ்சை முயல்குட்டி மாதிரிதான் சித்ராவும் வாசலிலேயே ஒடுங்கிக் கொண்டு உட்கார்ந்திருப்பாள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
1 கருத்து
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments