வணக்கம் செல்லங்களே!
“நான்தான் உங்க பூஞ்சிட்டு பேசறேன்!!
இந்த இதழில் இருந்து நீங்க தினமும் பயன்படுத்துகிற பொருள்களைப் பற்றிய அரிய தகவல்களை சொல்லலாம்னு இருக்கேன்.”
“என்ன செல்லங்களே! கண்கள் விரிய ஆர்வமுடன் தயார் ஆகிட்டீங்க போல இருக்கே. “
“ஒவ்வொரு பொருளும் எப்படி, எங்க, எந்த ஆண்டு கண்டுபிடிச்சு இருப்பாங்க இப்படிப் பல தகவல்களை தெரிஞ்சுக்கலாம். சரியா?”
“இப்போ நாம உங்களுக்கு மிகவும் பிடித்தமான உபயோகம் உள்ள பொருளைத் பற்றி தெரிஞ்சுக்க போறோம்.”
எல்லாரும் மேலே உள்ளப் படத்தைப் பார்த்ததும் யூகிச்சு இருப்பீங்க”.
“வாழ்த்துக்கள் புத்திசாலிக் குட்டீஸ்.
பென்சில் அதாவது தமிழ்ல கரிக்கோல் பற்றி தான் பேசப்போறோம்.”
“நான் பென்சில்களின் அரசனிடம் பேட்டி எடுக்கலாம்னு இருக்கேன். நீங்களும் என் கூட வர்றீங்களா?”
“என்னது பென்சில் பேசுமா” என்று நீங்க கேட்கிறது புரியுது குட்டீஸ்.”நாம ஒரு கற்பனை உலகத்துக்கு போகப் போறோம். அங்க பென்சில் தன்னோட சுயசரிதையை சொல்லப் போகுது”
“அனைவரும் கற்பனை உலகத்துக்குள்ள வந்துட்டீங்களா?
அங்கபாருங்க!! விதவிதமாய் பல வண்ணங்களில் பென்சில்கள் நிறைந்த ஒருமிகப்பெரிய மாளிகை. வண்ண பென்சில்களால் அலங்கரிக்கப்பட்ட தூண்கள். வாயில் காவலர்களாய் இரண்டு பயில்வான் பென்சில்கள். பார்க்கவே ரொம்ப அழகாகவும் ஆசையாகவும் இருக்கு இல்ல குட்டீஸ்”. பென்சில்களின் அரசரைப் பார்க்கணும் என்று வாயில் காவலர்களிடம் கூறியதும் உள்ளே அழைத்துச் சென்றார்கள்..
மாளிகையின் வெளியில் உள்ளதைப் போன்றே உள்ளேயும் அருமையான கரிக்கோலான அலங்காரங்கள்.. பிரம்மாண்டமான கரிக்கோல் ஓவியங்கள் சுவர்களை அலங்கரித்தன.. நடுவில் பென்சில் அரசன் கம்பீரமாய் அமர்ந்திருந்தார். “வாருங்கள் பூஞ்சிட்டு! வாருங்கள் செல்லங்களே! உங்களை வரவேற்பதில் பென்சில் நகரம் பெருமகிழ்ச்சி கொள்கிறது. எல்லோரும் தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இருக்கைகளில் அமருங்கள்.. எங்களின் வரலாறு தெரிந்து கொள்ள தாங்கள் அனைவரும் வந்திருப்பதாக கேள்விப்பட்டேன்.. இதோ உங்களுக்காக எங்களின் வரலாற்றை கூறுகிறேன்”..என்றார் பென்சில் அரசர்.
“இங்கிலாந்து நாட்டின் பரோடேல் (Borrowdale) எனும் பகுதியில் 16ஆம்நூற்றாண்டு , ஒரு மரத்தின் வேர்ப் பகுதியில் கிராபைட் கண்டறியப்பட்டது. லெட் என்ற பொருளைக் கொண்டு ஒரு பேப்பரில் குறியீடுகளை குறிப்பதை விட கிராபைட் கொண்டு குறித்தால் அதிக கறுப்பு நிறத்தோடு அடர்த்தியாக இருப்பதை கண்டறிந்தார்கள். லத்தின் மொழியின் Pencillus என்னும் வார்த்தையில் இருந்து தான் பென்சில் என்ற வார்த்தை தோன்றியது.
ஆங்கிலேயர்கள் கிராபைட் கட்டிகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி குச்சிகளில் பொருத்தி எழுத பயன்படுத்ததினார்கள்.
பிரான்சு நாட்டில் 1795 ஆம் ஆண்டு நிக்கோலாஸ் ஜாக்ஸ் கான்ட்டே [Nicolas-Jacques Conté] என்ற அறிவியல் அறிஞர் முதன்முதலாக களிமண்ணையும் எழுது கரியையும் கலந்தால் அடர்த்தி குறைவாக [lighter] எழுதும் பென்சிலை கண்டறிந்தார். குறைந்த அளவு களிமண்ணில் அதிக அளவு கிராபைட் இருந்தால் அடர்த்தி அதிகமாக [darker]எழுதும் பென்சிலையும் உருவாக்கலாம் என கண்டறிந்தார்.
மேலும் மரக்கட்டையில் ஒரு துளையிட்டு அதில் கிராபைட் மற்றும் களிமண் கலவையை கொட்டி அதனை இன்னொரு மரப்பொருளால் மூடி பயன்படுத்தலாம் என கண்டறிந்தார்.
எழுதுவற்கு மிகவும் ஏற்றதாக இருந்ததனால் பின்னாளில் இந்த பென்சிலுக்கு வரவேற்பு அதிகரித்தது. நாம் இன்று பயன்படுத்துகிறோமே 1HB , 2 HB பென்சில் இவை அனைத்துமே கான்டே என்பவரின் கண்டுபிடிப்புதான்..
ஐரோப்பியத் தரம் பிரிப்பு முறையில்B (Black)என்றால் கருமையைக் குறிக்கும். H (Hardness) என்பது கடினத்தைக் குறிக்கிறது. அமெரிக்க முறையில் எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. உயர்ந்த எண்கள் உயர்ந்தக் கடினத்தைக் குறிக்கின்றன. இவ்வாறு தான் தங்களின் சின்னஞ்சிறு கரங்களில் தினமும் தவழ்கின்ற பாக்கியம் பெற்றோம் தங்கங்களே!!“ என்று கூறி முடித்தார். பென்சில் அரசருக்கு பெருமகிழ்ச்சியை தெரிவித்துவிட்டு அனைவரும் கற்பனை உலகத்திலிருந்து கிளம்பினோம்.
என்ன குட்டீஸ் ! பென்சில் பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சியா?
“அனைவருக்கும் வணக்கம்” என்று சொல்லிவிட்டு பறந்தது பூஞ்சிட்டு!!