ரொம்ப காலத்துக்கு முன்னாடி, மாக்பை (MAGPIE)ன்னு ஒரு பறவைக்கு  மட்டும் தான் கூடு கட்டத் தெரிஞ்சு இருந்தது. 

ஒரு நாள் மத்த பறவைங்க எல்லாம் சேர்ந்து அதுக்கிட்ட வந்து ‘எங்களுக்கும் கூடு எப்படிக் கட்டுறதுன்னு சொல்லிக் குடு’ன்னு கேட்டுதுங்க.

மேக்பை பறவை “சரி”ன்னு சொல்லிட்டு எல்லாப் பறவைகளையும் தன்னைச் சுத்தி வட்டமா நிக்கச் சொன்னுச்சு.  அதுக்கப்புறம் கூடு எப்படி கட்டுறதுன்னு செஞ்சு காட்ட ஆரம்பிச்சிது.

முதல்ல கொஞ்சம் சேற்று மண்ணை எடுத்துட்டு வந்து, அதை ஒரு  வளைவான கிண்ணம் மாதிரி பண்ணுச்சு.

“அட! கூடு செய்றது எவ்ளோ சுலபமாயிருக்கு” ன்னு சொல்லிட்டுப் பூங்குருவி (THRUSH) பறந்து போயிடுச்சி.  இன்னிக்கு வரைக்கும் பெரும்பாலும் சேற்று மண்ணை வைச்சித் தான்,  அது கூடு கட்டிட்டு இருக்கு.

பிறகு மாக்பை சின்ன மரக்குச்சிகளைக் கொண்டு வந்து, அந்தச் சேற்றைச் சுத்தியும், குறுக்கேயும் வைச்சுது

“இவ்ளோ தான் கத்துக்கறதுக்கு இருக்கு” என்று சொன்னபடி, கரும்பறவை (BLACK BIRD) வேகமாப் பறந்து போயிடுச்சி. அதுக்கு மேலே அந்தப் பறவை கத்துக்கவேயில்லை.

மேக்பை மறுபடியும் கொஞ்சம் சேறு எடுத்துட்டு வந்து, அந்தக் குச்சிகளுக்கு மேல வைச்சுது.

“ஓஹோ! இவ்ளோ தானா? இதுக்கு மேல நல்ல கூடு யாருக்கு வேணும்?” னு ஆந்தை (OWL) சொன்னுச்சு.  நல்ல கூடு கட்டுறதுக்கு அதுக்குப் பிறகு எந்த ஆந்தையும் முயற்சியே பண்ணலை.

ஆனா மேக்பை தொடர்ந்து வேலை செஞ்சுக்கிட்டே இருந்துச்சி. சேற்றை நல்லாக் குழைச்சிப் பூசிட்டு, இன்னும் கொஞ்சம் குச்சி எடுத்துட்டு வந்து வெளிப்புறம் அணைச்சு வைச்சுது.

“இது போறும் எனக்கு” ன்னது சிட்டுக்குருவி (SPARROW). “நான் போயி இதே மாதிரி கூடு கட்டப் போறேன்”னு அது சொன்னுச்சு.

மறுபடியும் மேக்பை போய் கொஞ்சம் வைக்கோலும், கொஞ்சம் பறவைகளோட மென்மையான இறகுகளையும் கொண்டு வந்துச்சி. உட்கார மெத்து மெத்துன்னு சுகமாயிருக்குற மாதிரி, அந்தக் கூட்டுல ரொம்ப கவனமா அடுக்குச்சு. 

அதைப் பார்த்த ஸ்டார்லிங் (STARLING) குருவிக்கு ரொம்ப மகிழ்ச்சியாயிடுச்சி.  “நல்லது. இறகும், வைக்கோலும் வச்ச கூடு தான் ரொம்ப சிறந்த கூடு” ன்னு, அது சொல்லுச்சி.

கூட்டுக்கு அடியில சேற்று மண்ணையும், குச்சியையும் வைச்சி மேக்பை போட்ட அஸ்திவாரத்தைக் கவனிக்காம, அது பறந்து போயிடுச்சி.

இப்படி எல்லாப் பறவைகளும் மேக்பை கிட்டேயிருந்து கூடு கட்டறதைப் பத்திக் கொஞ்சம் கொஞ்சம் கத்துக்கிட்டுதுங்க.  கடைசி வரைக்கும் இருந்து, அது கத்துக் கொடுத்ததைக் கவனிக்க, எந்தப் பறவைக்கும் பொறுமையில்லை.

கடைசியா ஆமைப்புறா (TURTLE DOVE) அங்க வந்துச்சி. மேக்பை என்ன செய்யுதுன்னு அது கவனிக்கவே இல்ல.  மேக்பை கடைசியா ஒவ்வொரு வைக்கோலா வைச்சி அந்தக் கூட்டை அழகுபடுத்திக்கிட்டு இருந்துது.

அதோட தலைக்கு மேல மரத்துக் கிளையில வெட்டியா ஒக்கார்ந்துட்டு இருந்த புறா, “ரெண்டு எடு, ரெண்டு எடு” ன்னு சொன்னுது.

nest

மேக்பைக்கு கோபம் வந்துடுச்சு.  “ஒன்னு தான்; நான் சொல்றேன், ஒன்னே ஒன்னு தான்”

ஆனா புறா மீண்டும் சொன்னுது, “ரெண்டு எடு, ரெண்டு எடு”.

மேக்பைக்கு கோபம் அதிகமாயிடுச்சி., “ஒன்னு போதும்” னு அது கத்துச்சு.

மேக்பை சொன்னதுல ஒரு வார்த்தையைக் கூடக் காதில் வாங்காம புல்வெளியைப் பார்த்துக்கிட்டு, “ரெண்டு எடு; ரெண்டு எடு” ன்னு ஆமைப் புறா மீண்டும் சொன்னது.

புறா மீண்டும் சொன்னதில் மேக்பைக்கு ரொம்ப கோபம். தன்னுடைய பாடத்தை முடிக்காமல் பாதியில் நிறுத்தி விட்டு, கையில் இருந்த வைக்கோலைக் கீழே தூக்கிப் போட்டுட்டு மேக்பை பறந்து போய்விட்டது.   

“எங்களுக்கு ஏற்கெனவே எல்லாம் தெரியும் என்று நினைக்கிறவங்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறதுல பயன் இல்ல” என்று மேக்பை சொன்னது. 

இதனால் தான் வெவ்வேறு பறவைகளும், வெவ்வேறு விதமாகக் கூடு கட்டுகின்றன. 

அதற்குப் பிறகு மேக்பை யாருக்கும் எதுவும் சொல்லிக் கொடுக்க முயலவே இல்லை. 

உண்மையைச் சொன்னால், எல்லாப் பறவைகளும் ‘எல்லாம் எங்களுக்குத்  தெரியும்;  இதற்கு மேல் கற்றுக் கொள்ள எதுவுமில்லை’ என்ற நம்பிக்கையில், திருப்தியாக இருந்தன.

(ஆங்கிலம் – ஜேம்ஸ் பால்டுவின்)

(தமிழாக்கம் – ஞா.கலையரசி)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments