புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ஜெயலட்சுமி, மனநோயாளியான அம்மாவுடனும், தம்பியுடனும் வசிக்கிறார்.  அப்பா வீட்டை விட்டுச் சென்றுவிட, பள்ளி நேரம் போக மீதி நேரத்தில் கூலி வேலைக்குச் சென்று, குடும்பத்தையும் கவனித்துக் கொள்கிறார். தற்போது புதுக்கோட்டை தனியார் கல்லூரியில் இளங்கலை வரலாறு பிரிவில் சேர்ந்திருக்கிறார்.

jayalakshmi

புத்தகங்களைத் தாண்டி வாசிக்கும் பழக்கம் கொண்ட ஜெயலட்சுமி, புதுக்கோட்டை ராணியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் படித்த போது, ஒரு அமெரிக்க நிறுவனம் நடத்திய அறிவியல் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு, முதல்கட்டத் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றார். 4000 பேர் எழுதிய அத்தேர்வில் வெற்றி பெற்ற ஒரே அரசுப்பள்ளி ஏழை மாணவி இவரே.  அதனால் இவருக்கு நாசாவுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.

அமெரிக்காவில் நடைபெறும் இறுதிப்போட்டிக்குச் சொந்தச் செலவில் தான் சென்று திரும்ப வேண்டும்; அதற்கு ஆகும் செலவு மட்டுமே 1.69 லட்சம் ஆகும் என்ற நிலையில், இவரது சாதனையைப் பாராட்டி, இவருக்குப் பல இடங்களில் இருந்து நிதிஉதவி குவிந்தது.  கொரோனா காரணமாக, இறுதிப்போட்டிக்கு இவர் அமெரிக்கா போவது தள்ளிப் போயிருக்கிறது.

இவருடைய வறிய நிலையைக் கேள்விப்பட்டு, கிராமாலயா தொண்டு நிறுவனம் இவருக்கு உதவி செய்ய முன் வந்தது.   ‘வீடு கட்டித் தரவேண்டுமா? டாய்லெட் வேண்டுமா?’ என்று அந்நிறுவனம் கேட்ட போது, தனக்கு மட்டும் கழிப்பறை கட்டித் தருவதற்குப் பதிலாக, தான் குடியிருக்கும் திருவள்ளுவர் நகருக்கே கட்டித் தர முடியுமா என இவர் கேட்டிருக்கிறார்.  இவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, 26 லட்சம் செலவில், 126 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

“முன்னாடிலாம் நான் டாய்லெட் போகணும்னா, 2 கிலோ மீட்டர் தூரம் நடக்கணும்; வழியில டாஸ்மாக், மெயின்ரோடு எல்லாம் இருக்கும்.  ஒரு பொண்ணா இதனால நிறைய கஷ்டப்பட்டிருக்கேன்” என்று சொல்லும் இவர், தம்மைப் போல் பிறர் கஷ்டப்படக்கூடாது என்று நினைத்துக் கிராமாலயா தொண்டு நிறுவனத்திடம், தம் வேண்டுகோளை வைத்து நிறைவேற்றியிருக்கிறார்.  இதனால் அந்தக் கிராமத்துக்கே இவர் செல்லப் பிள்ளையாகியிருக்கிறார்.

அமெரிக்க அறிவியல் கட்டுரை இறுதித் தேர்விலும், ஜெயலட்சுமி வெற்றி பெற்று சாதனை நிகழ்த்த  வாழ்த்துவோம்!

What’s your Reaction?
+1
2
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
2 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments