ஹாய் சுட்டீஸ்!

எல்லாரும் எப்படி இருக்கீங்க? ரொம்ப நாள் கழிச்சி ஸ்கூல் போக ஆரம்பிச்சிருக்கீங்க தானே! ஸ்கூல் போறது ஜாலியா இருக்கா?

புதுசா ஸ்கூல் போக ஆரம்பிச்சிருக்கற குழந்தைகளுக்கும் லாங் லீவுக்கு அப்றம் ஸ்கூல் போற குழந்தைகளுக்கும் என் வாழ்த்துக்கள்.

இன்னிக்கு நாம ஒரு குட்டிக் கதை பாக்கலாமா?

கதைத் தலைப்பு: குட்டி சச்சின்

தலைப்பு நல்லா இருக்கா?

சரி! வாங்க கதை படிக்கலாம்.

ஒரு குட்டிப் பையன்! அவன் பேரு சச்சின்.  சச்சின், அம்மா கூடக் கடைத் தெருவுக்கு போய்ட்டுத் திரும்பி வீட்டுக்கு வந்துட்டிருக்கும் போது அவன் செருப்பு அறுந்துடுச்சி. வழியில ஒரு பெரிய மரத்தடியில ஒரு தாத்தா பழைய செருப்பு தைக்கற வேலை செய்துட்டிருந்தார். அது மூலமா கிடைக்கிற வருமானத்தை வெச்சித் தான் அவர் வாழ்க்கை நடத்திட்டிருந்தார்.

அந்தத் தாத்தா கிட்ட சச்சினோட அறுந்த செருப்பைத் தைக்கறதுக்கு குடுத்தாங்க அவங்கம்மா.

சச்சின் அந்தப் பெரிய மரத்த வேடிக்கை பார்த்துட்டிருந்தான். அந்த மரத்தோட கிளைகள் நல்லாப் பெரிசா பரவி இருந்ததால அந்த இடமே நல்ல நிழலா இருந்தது.

அந்தப் பெரிய மரத்துக்குப் பக்கத்தில கொஞ்சம் தள்ளி இன்னும் ரெண்டு மூணு சின்ன மரங்களும் இருந்துச்சு.

மரங்களோட இலைகள் காத்தில ஆடி சலசலன்னு சத்தம் வந்துட்டிருந்தது.

மரத்து மேல சில காகங்களும் புறாக்களும் உக்காருறதும் கொஞ்ச நேரத்தில பறக்கறதுமா இருந்துச்சு.

ரெண்டு மூணு அணில்கள் கூடக் கீச்சு கீச்சுன்னு சத்தம் போட்டுக்கிட்டு இந்த மரத்துக்கும் பக்கத்தில இருக்கற சின்ன மரத்துக்கும் தாவித் தாவிக் குதிச்சு ஓடி விளையாடிட்டு இருந்துச்சு.

squirrel
படம்: அப்புசிவா

சச்சினுக்கு இதப் பாக்கவே ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு. அது எப்டி மரத்துக்கு மரம் அதால ஜம்ப் பண்ண முடியுது? கீழ விழுந்திடாதா? அப்டீன்னு யோசிச்சிகிட்டே அம்மாவ கூப்பிட்டு,

“அம்மா! அம்மா! அங்க பாருங்களேன்.. அந்த அணில் குட்டி ரெண்டும் ஜம்ப் பண்ணி ஜம்ப் பண்ணி வெளையாடுது.. அப்டி ஜம்ப் பண்ணும் போது அதுங்க ரெண்டும் கீழ விழுந்துடாதா?”, அப்டீன்னு கேட்டான்.

“அது கீழல்லாம் விழாதுடா செல்லம்!”, அப்டீன்னு அம்மா சொன்னாங்க.

சச்சினுக்கு அந்த அணிலைப் பாக்கப் பாக்க ரொம்ப ஜாலியா இருந்தது.  அதனால அதையே பாத்துட்டு இருந்தான்.

அந்த பெரிய மரத்தில ஒரு பொந்து இருந்தது.

அந்த அணில் ரெண்டும் சின்ன மரத்தில இருந்து குட்டிக் குட்டிப் பழங்களை பறிச்சிகிட்டு வந்து இந்தப் பெரிய மரத்தில இருந்த பொந்துக்குள்ள வெச்சிட்டுப் போறதப் பாத்தான்.

“அம்மா! அம்மா! அங்க பாருங்க! அது ரெண்டும் அந்தச் சின்ன மரத்தில இருந்து ஃப்ரூட்ஸ் பறிச்சிகிட்டு வந்து இந்த மரத்துக்குள்ள இருக்கற ஓட்டைக்குள்ள போடுது!”, அப்டீன்னு சொன்னான்.

“ஆமாடா செல்லம்!”.

“அந்த ஓட்டைக்குள்ள போட்டா மரத்துக்கு உள்ள அடில போய் விழுந்திடாதா?”.

“விழுந்தாலும் அது ஈசியா எடுத்துக்கும்டா கண்ணா!”.

“ம்! ஏன் அந்த ஓட்டைக்குள்ள போடுது?”.

“அது தனக்கு வேணுங்கற சாப்பாட்டை ஸ்டோர் பண்ணி வெச்சிக்கிது”, அம்மா சொல்லிக் குடுத்தாங்க.

“ஓ! அப்ப அந்த ஓட்டைதான் அதோட ஃப்ரிட்ஜா?”.

“இல்லம்மா.. அதுதான் அதோட வீடு.. அத ஓட்டைன்னு சொல்லக் கூடாதுடா! பொந்துன்னு சொல்லணும்”.

“ஓ! பொந்து? கரெக்ட்டா மா?”, ஒரு முறை சொல்லி பார்த்துகிட்டான்.

“ஹா.. ஹா.. ஆமாடா செல்லம்!”, அம்மா அவன் சொன்னதக் கேட்டுச் சிரிச்சாங்க.

திடீர்ன்னு அந்த பொந்துக்குள்ள எப்டி அணில்க்கு கண்ணு தெரியும்? பொந்துக்குள்ள இருட்டா இருக்குமா, வெளிச்சமா இருக்குமான்னு அவனுக்குப் பயங்கரமா டவுட் வந்துச்சு.

“அம்மா! அம்மா! பொந்துக்குள்ள அணில்க்கு எப்டி கண்ணு தெரியும்? மரத்துக்குள்ள லைட் இருக்காதே?”, என்று அடுத்த கேள்வி கேட்டான்.

“ஹா.. ஹா.. அதுக்கு லைட் எல்லாம் வேணாம்டா!  பொந்துக்குள்ள போனாலும் அதுக்கு கண்ணு தெரியும்டா!”.

“ம்..”

அணில் குட்டிங்க ரெண்டையும் பாத்துட்டே இருந்தான் சச்சின்.

அவனுக்கு அடுத்த டவுட் வந்துடுச்சு?

அந்த டவுட்டைக் கேட்டதும் அவங்கம்மா விழுந்து விழுந்து சிரிச்சாங்க.

அப்டி என்ன கேட்டான்னுதானே நெனக்கறீங்க?

“அம்மா! அம்மா! அந்த அணில் ரெண்டும் கால்ல செருப்பே போட்டுக்கலயே? கால்ல செருப்பில்லாம எப்டி அது இங்கயும் அங்கயும் ஓடுது? அது கால்ல கல்லு குத்தாதா?”, ன்னு கேட்டான்.

அவனோட அம்மா சிரிச்சிகிட்டே பதில் சொன்னாங்க.

“கண்ணா! நம்மள மாதிரி மனுஷங்களுக்கு கால் பாதம் தட்டையா மெத்துன்னு மென்மையா இருக்கும்.. அதனால நம்ம கால்ல ஈசியா கல்லு, முள்ளு எல்லாம் குத்திடும்.. அதனால நமக்குச் செருப்பு தேவையா இருக்கு.. மற்ற விலங்குகளோட கால் பாதங்கள் அது செய்யற வேலைக்குத் தகுந்த மாதிரி வடிவமைக்கப்பட்டிருக்கும்.. அதனால அதுக்கு செருப்பு தேவைப்படாதுடா!”, அப்டீன்னு சொல்லி குடுத்தாங்க.

“ஓ! அப்டியாம்மா!”, ன்னு கேட்டுச் சச்சினும் தலைய ஆட்டிகிட்டான்.

செருப்பு தைக்கிற தாத்தா அதுக்குள்ள சச்சினோட செருப்பைத் தைச்சிக் குடுத்தாரு.

அத அவன் வாங்கி கால்ல போட்டுக்கிட்டான்.

அப்ப தாத்தா பக்கத்தில பெரிய கத்தி இருக்கறதப் பாத்தான். இப்ப அடுத்த கேள்விய கேட்டான்.

“அம்மா! தாத்தா கத்தி வெச்சிருக்காரே! அவரு கையில கட் பண்ணிக்க மாட்டாரா? என்னை மட்டும் கத்தி வெச்சி வெளையாடக் கூடாதுன்னு சொல்வீங்களே?”, ன்னு கேட்டான்.

“அவரு பெரியவருடா செல்லம்.. கத்திய எப்டிப் பயன்படுத்தணும்னு அவருக்கு நல்லாத் தெரியும்”, ன்னு அம்மா சொன்னாங்க.

“ம்..” ன்னு சொல்லிகிட்டே சமத்தா அம்மா கையப் பிடிச்சிகிட்டு அவன் வீட்டுக்குப் போனான்.

வீட்டுக்குப் போனதும் அம்மா அவனுக்கு டிபன் செய்து குடுத்தாங்களா.. ஆனா அவன் அத சாப்பிட மாட்டேன்னு ரொம்ப அடம் பிடிச்சான்.

“ஏண்டா இவ்ளோ அடம் பிடிக்கற?”, அப்டீன்னு அம்மா சோர்ந்து போய்க் கேட்டாங்க.

“நா எவ்ளோ குட்டிப் பையன்?  நானே எப்டி சாப்பிடுவேன்?”, குட்டி சச்சின் கொஞ்சிக் கொஞ்சி அம்மாகிட்ட கேட்டான்.

அப்ப அம்மா சொன்னாங்க,

“செல்லம்! அந்த அணில் கூடக் குட்டியாதானே இருந்துச்சு.. ஆனா அதுவே தானே இந்த மரத்துக்கும் அந்த மரத்துக்கும் ஜம்ப் பண்ணி ஓடி ஓடி ஃப்ரூட் எல்லாம் எடுத்துட்டு வந்து பொந்துக்குள்ள ஸ்டோர் பண்ணிகிச்சு! அது என்ன அதோட அம்மா கிட்ட சண்டையா போட்டுச்சு?”, அப்டீன்னு கேட்டாங்க.

குட்டி சச்சின் கொஞ்ச நேரம் யோசிச்சான்.. அப்றம் அம்மா கிட்டேந்து டிபனை வாங்கி அவனே சமத்தா சாப்பிட்டான்.

அதோட விடாம,

“அம்மா உங்களுக்கு நா ஹெல்ப் பண்றேன்!”, அப்டீன்னு சொல்லிகிட்டே குடு குடுன்னு ஓடி ஓடி எல்லா உதவியும் செஞ்சான்.

குட்டி சச்சின் அணில் குட்டிகளைப் பாத்து ரொம்ப சுறுசுறுப்பான பையனா மாறிட்டான்.

அந்த காக்கா புறால்லாம் பாத்தானே!? அதப் பாத்து எப்டி மாறினான்னு அடுத்த இதழ்ல பாக்கலாமா? அது வரைக்கும் நீங்களும் குட்டி சச்சின் மாதிரியே சுறுசுறுப்பா இருக்கணும்! சரியா?!

இப்ப எல்லாரும் டாட்டா சொல்லுங்க!

டாட்டா! பை! பை!

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
2 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments