கீதா மதுரையில் வசிக்கும் 13 வயதுப் பெண். படு புத்திசாலி, படு சுட்டி. படிப்பிலும் கெட்டிக்காரி. ஆனால் கூடவே சற்றே அலட்சியமும், சோம்பேறித்தனமும் அவளிடம் இருந்தன. அவள் அம்மா, அப்பாவுக்கு அவளின் புத்திசாலித்தனத்தைக் கண்டு ஏகப்பட்ட பெருமை; என்றாலும் அவளின் அம்மா அடிக்கடி அவளை எதிலும் அலட்சியமாக இருக்கக் கூடாது என்று கடிந்து கொள்வதுண்டு.
ஒருமுறை மதுரையில் மிகப் பெரிய கலை விழா ஒன்று நடந்தது. அதில் பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி, நாட்டியப் போட்டி எனப் பல வகை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தன. கீதா பாட்டுப் போட்டியில் பங்கேற்று மிக அருமையாகப் பாடி முதல் பரிசையும் பெற்றாள். அவளுக்கும், அவள் பெற்றோருக்கும் ஏகப்பட்ட சந்தோஷம். அதே போட்டியில் அவள் பள்ளியிலே படிக்கும் ராதிகாவும் கலந்து கொண்டாள். அவளுக்கு மூன்றாவது பரிசு கிடைத்தது. கீதா ராதிகாவைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தாள். ராதிகாவிற்கு வருத்தமாக இருந்தது.
நிகழ்ச்சி முடிந்து சில நாட்களுக்குப் பிறகு அந்த நிகழ்ச்சியின் அமைப்பாளரிடமிருந்து ஒரு தகவல் வந்தது. அதில், “நீங்கள் உடனடியாக கீழ்க்கண்ட விலாசத்திற்கு வரவும். உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது”, என்று எழுதியிருந்தது.
கீதா வழக்கம் போல் அலட்சியமாக இருந்து விட்டாள். அந்தத் தகவல் வந்ததை மறந்தே விட்டாள்.
ஒரு வாரம் கழித்து அவள் அம்மா எதேச்சையாக அந்தத் தகவலைப் பார்க்க நேர்ந்தது. கீதாவை அழைத்து அவளின் அலட்சியப் போக்கிற்காக அவளை வெகுவாகக் கடிந்து கொண்டாள். உடனடியாகத் தகவலில் கொடுக்கப்பட்டிருந்த விலாசத்திற்கு விரைந்து சென்றார்கள்.
ஆனால், அங்கு அவர்களுக்கு மகிழ்ச்சியல்ல, அதிர்ச்சி தான் காத்திருந்தது. அந்தக் கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்றுப் பரிசை வென்றவர்களுக்கு ஒரு பிரபல தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் பங்கு பெற வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று சொன்னார்கள்.
கீதா பாட்டுப் போட்டியில் முதல் பரிசு பெற்றதால் அவளுக்கு அந்த தொலைக்காட்சியினர் நடத்தும் “பெஸ்ட் சிங்கர்”போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் நீங்கள் உடனே வராததால் மூன்றாம் பரிசு மற்றும் இரண்டாம் பரிசு பெற்றவர்களைத் தேர்வு செய்து சென்னைக்கு அனுப்பி விட்டோம். நிகழ்ச்சிக்கான ஆடிஷன் சென்னையில் நேற்றே முடிந்து விட்டது. நீங்கள் மிகவும் தாமதமாக வந்திருக்கிறீர்கள்”, என்றனர்.
கீதாவிற்கு மிகவும் வருத்தமாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. ஓவென அழுது விட்டாள். தன் சோம்பேறித்தனத்தாலும், அலட்சியத்தாலும் எவ்வளவு பெரிய வாய்ப்பை இழந்து விட்டோம். தவிரவும் தான் கேலி செய்த ராதிகா தொலைக்காட்சியில் பாடப் போகிறாள். தன் கையிலிருந்து அந்த வாய்ப்பு நழுவி விட்டதே என்று வெட்கப் பட்டாள்.
இனிமேல், எதிலும் அலட்சியமாக இருக்கக் கூடாது. யாரையும் அவமானப் படுத்தக் கூடாது என முடிவு செய்தாள்.
நீதி: எதிலும் அலட்சியமாக இருக்கக் கூடாது. பொறுப்பாக இருக்க வேண்டும். யாரையும் அவமானப் படுத்தக் கூடாது.