வணக்கம் பூஞ்சிட்டுகளே! உங்கள் மனதைக் கவர்ந்த ‘ஐந்து குழந்தைகள் மற்றும் அது!’ கதை முடிவடைந்துவிட்டது. அதே கதைமாந்தர்கள் தோன்றும் அதன் தொடர்ச்சியான ‘ஃபீனிக்ஸ் பறவையும் மந்திரக் கம்பளமும்’ என்ற கதையைத் தான் இந்த இதழ் முதல் தொடராகப் படிக்கப் போகிறீர்கள். என்ன, சந்தோஷம் தானே? வாருங்கள், இன்னொரு மந்திர தந்திர உலகத்திற்குள் பயணிக்கலாம்!

ஃபீனிக்ஸ் பறவையும் மந்திரக் கம்பளமும்

-எடித் நெஸ்பிட்

(தமிழில்: Dr. S. அகிலாண்ட பாரதி)

phoenix

அத்தியாயம்-1

மறுநாள் Guy Fawkes day* என்ற பண்டிகை. அதனால் வீட்டில் நிறைய பட்டாசுகள் வாங்கி வைத்திருந்தார் ராபர்ட், சிறில், ஆந்த்தியா, ஜேன் இவர்களின் தந்தை. ராபர்ட்டுக்குத் திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது.

“நாம வாங்கி வச்சிருக்கிற பட்டாசுகள் எல்லாம் சரியா வெடிக்குமா? அதைப் பரிசோதனை பண்ணிப் பார்த்தா என்ன?”, என்று கேட்டான்.

ஆந்த்தியா, “ஒரு தடவை தான் பட்டாசுகளை எரிக்க முடியும். தெரியாதா? பரிசோதிச்சுப் பார்த்துத் திருப்பி உள்ளே வைக்க முடியாது” என்று கூற,

“ரெண்டு அல்லது மூணு பட்டாசுகளை மட்டும் எடுத்துக் கொளுத்திப் பார்ப்போமே?”, என்றான் சிறில். எல்லாருக்கும் அந்த யோசனை சரியாகப்பட்டது. ஏனென்றால் அவர்களுக்கும் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்ற ஆசை அப்போது வந்திருந்தது.

இரண்டு மத்தாப்புகள், ஒரு மெழுகுவர்த்தி இவற்றை வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்த்தனர். அடுத்ததாக ஒரு பட்டாசு மட்டும் சரியாக வேலை செய்யவில்லை. சரி, இதைத் தூக்கிப் போட்டு விடலாம் என்று நினைக்கையில் திடீரென்று அது தீப்பற்றிக் கொண்டது.

அறை முழுவதும் புகை மண்டலமாக ஆகி, குழந்தைகளின் முகங்களிலும் புகை படிந்து விட்டது. அதைத் தொடர்ந்து குழந்தைகள் ஐந்து பேரும் கூச்சலிட்டனர். என்ன சத்தம் என்று அவர்களின் அம்மாவும் அப்பாவும் வந்து பார்க்க, அறை கிடந்த கோலத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்து விட்டனர்.

“வர வர உங்களோட போக்கே சரியில்லை. இங்க பாருங்க.. அறை முழுசும் கரி ஆயிடுச்சு.. போதாததற்கு நல்ல தரைக் கம்பளம்.. அதுவும் பாழாப் போச்சு!”, என்று கூறி அவர்களைக் கடிந்து கொண்டனர் பெற்றோர்.

அறையைச் சுத்தம் செய்து விட்டு, “உங்களுக்கு இந்த தடவை எந்தப் பட்டாசுமே கிடையாது. எல்லாத்தையும் தூக்கிப் போடப் போறேன்”, என்று அப்பா பட்டாசுகள் அனைத்தையும் அப்புறப்படுத்தினார்.

‘சே! இப்படி ஆயிடுச்சே!’, என்று வருத்தத்தில் ஆழ்ந்தனர் குழந்தைகள். ஆனால் அடுத்த நாள் அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.

புதிதாக ஒரு தரைக் கம்பளத்தை வாங்கி வந்திருந்த அவர்களது தந்தை, அதைத் தரையில் சரியான முறையில் பொருத்துவதற்காக ஒரு நபரையும் கூடவே கூட்டி வந்திருந்தார். அந்த நபர் இவர்களுடைய அறையில் கம்பளத்தை முழுவதுமாக விரித்து முடித்தார். அவர் கம்பளத்தை விரிக்கையில் அதிலிருந்து வழவழப்பான ஒரு பொருள் உருண்டு ஓடியது. அதை எடுத்துப் பார்க்க அது சற்றே பெரிய கோழி முட்டை வடிவிலான ஒரு பொருள். மஞ்சள் நிறத்தில் தக தகவென்று மின்னியது. ஒவ்வொரு திசையிலும் வேறு வேறு வண்ணத்தைக் காட்டியது.

“இந்தாங்க! உங்களோட கம்பளத்தில் இருந்து இது விழுந்திடுச்சு!”, என்று அந்த நபரிடம் குழந்தைகள் அந்த முட்டையைத் திருப்பி அளிக்க, “இல்லை! இது என்னோடது இல்ல.. நீங்களே வச்சுக்கோங்க!”, என்றபடி கிளம்பிவிட்டார் அந்த மனிதர்.

“அம்மா அம்மா! இது அவரோடது இல்லைன்னு சொல்லிட்டார்.. நாங்களே வச்சுக்கலாமா?”, என்று குழந்தைகள் ஆசையுடன் கேட்க, “தாராளமா வச்சுக்கோங்க. கவனமா விளையாடணும். ஏதாவது சேட்டை பண்ணி வைக்காதீங்க”, என்றார் அம்மா.

மகிழ்ச்சியுடன் கணப்பின் அருகில் இருந்த சிறிய மேஜையில் அந்த முட்டையை வைத்து அழகு பார்த்தார்கள் குழந்தைகள். அம்மாவும் அப்பாவும் பண்டிகைக்கான பொருட்கள் வாங்குவதற்காக வெளியே சென்றிருக்க, எதற்காகவோ ஓடிச்சென்ற சிறில் அந்த முட்டையைத் தட்டி விட்டு விட்டான். தவறி விழுந்த முட்டை நெருப்பில் போய் விழுந்தது.

“ஐயையோ! முட்டை நெருப்புக்குள்ள விழுந்திருச்சே!”, என்று வருத்தப்பட்டாள் ஜேன். அப்போது சடசடவென்ற ஓசையுடனும் பளீரிடும் ஒளியுடனும் அந்த முட்டைக்குள் இருந்து ஒரு உருவம் வெளியே வந்தது.

வண்ணமயமான இறகுகளுடன் ஒரு பெரிய பறவையாக அது உருவெடுத்து நெருப்பை விட்டு வெளியே வந்து குதித்தது. “ஹையா! ஃபீனிக்ஸ் பறவை!”, என்று குதூகலித்தான் ராபர்ட்.

ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக, “ஆமா! ஃபீனிக்ஸ் தான்!”, என்று அந்தப் பறவை பேசியது.

“நீ எப்படி இந்த முட்டைக்குள்ள வந்தே?”, என்று ஆந்த்தியா கேட்க,

“உங்களுக்குத் தெரியாதா? எனக்கு இறப்பே கிடையாது. ஐநூறு வருஷத்துக்கு ஒரு முறை நான் ஒரு முட்டையைப் போட்டுட்டு நெருப்புக்குள்ள குதிச்சிடுவேன்.. அப்புறம் மறுபடியும் அந்த முட்டையில் இருந்து வெளியே வருவேன். இப்படி மாறி மாறி பிறப்பெடுத்துக்கிட்டே இருக்கிறது எனக்கு சலிப்பா இருந்துச்சு. அப்ப தான் ஒரு இளவரசனையும் இளவரசியையும் நான் சந்திக்க நேர்ந்தது. அவங்க கிட்ட என்னோட பிரச்சனையை சொன்னப்ப, அவங்க எனக்கு ஒரு மந்திரக் கம்பளத்தைப் பரிசாக் குடுத்தாங்க. ‘நீ முட்டையா மாறி இந்தக் கம்பளத்துக்குள்ள ஒளிஞ்சுக்கோ. இரண்டாயிரம் வருஷங்களுக்கு யார் கண்ணுலயும் பட மாட்டே’, அப்படின்னு சொன்னாங்க. அநேகமாய் இப்ப 2000 வருஷம் கடந்து இருக்கணும். அதான் உங்களுக்கு இந்த மாயக்கம்பளமும் முட்டையும் கிடைச்சிருக்கு. நீங்க அதிர்ஷ்டக்காரங்க தான். இந்த மந்திரக் கம்பளம் உங்களோட ஆசைகளை நிறைவேற்றி வைக்கும்”, என்றது ஃபீனிக்ஸ் பறவை.

“அட! மணல் தேவதை மாதிரி நமக்கு வரங்களைக் குடுக்கறதுக்கு இன்னொரு மந்திரப் பொருள் கிடைச்சிருக்கு.. நாமெல்லாம் ரொம்ப அதிர்ஷ்டக்காரங்க தான். என்ன?”, என்று குதூகலித்தாள் ஜேன். “ஆமா! கண்டிப்பா!”, என்று மகிழ்ந்தனர் மற்ற மூவரும்.

-தொடரும்.

(Guy Fawkes day.. – இந்தப் பண்டிகை ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி இங்கிலாந்தில் கொண்டாடப்படுகிறது. 1605 ஆம் ஆண்டு அப்போதைய மன்னர் ஜேம்ஸ் I அவர்களைக் கொலை செய்வதற்காக ஒரு இயக்கம் திட்டம் தீட்டி கை ஃபாக்ஸ் என்ற நபரை வெடி மருந்துகளுடன் அரண்மனைக்கு அனுப்பியிருந்தது. அரண்மனைக்குள் பதுங்கியிருந்த அவன் கைது செய்யப்பட்டு, அவர்களது சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது. அந்த வெற்றியை மக்கள் பட்டாசுகளை கொளுத்தி ஆரவாரத்துடன் கொண்டாடினர். அதே நினைவாக நானூறு வருடங்களைத் தாண்டி இன்றும் அந்த நாளை இங்கிலாந்து மக்கள் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுகின்றனர்!)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments