இந்த மாதம் நாம் பார்க்கப்போகும் பறவை Pied Bushchat. இதன் அறிவியல் பெயர் Saxicola caprata. இதைத் தமிழில் கறுப்பு வெள்ளை புதர்ச் சிட்டு என்று அழைப்பார்கள். இப்பறவை இந்தியத் துணைக் கண்டத்திலும் பரவலாக மற்ற ஆசிய நாடுகளிலும் காணப்படுகிறது. இதுவரை கிட்டத்தட்ட 16 வகையான புதர்ச் சிட்டுகள் அறியப்பட்டுள்ளன.
இப் பறவைகளை கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் காணலாம். பொதுவாகச் சிறிய செடிகளால் ஆன புதர்கள் மண்டிக் கிடக்கும் இடங்களில் காணப்படுவதால் இவை புதர்ச்சிட்டு என்று அழைக்கப்படுகிறது. தனியாகவும், ஆண் பெண் இணையாகவும் பார்க்கலாம்.
அளவில் சிட்டுக்குருவியை விடச் சற்றே பெரிதாகவும் மைனாவை விடச் சிறிதாகவும் கிட்டத்தட்ட 13 சென்டிமீட்டர் அளவில் இருக்கும். ஆண் பறவையின் உடல் கருமை நிறத்தில் இருக்கும். ஆனால் தோள் பகுதியிலும் அடிவயிற்றின் சிறுபகுதியிலும் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். பெண் பறவையின் உடல் பழுப்பு நிறத்திலும் வால் பகுதியில் சிறிது செம்பழுப்புத் திட்டு இருக்கும். இளஞ்சிட்டுகளின் உடலில் புள்ளிகள் காணப்படும். கால்கள் மற்றும் அலகுகள் கருமை நிறத்தில் இருக்கும். மென்மையாக விசில் அடிப்பது போல் ஓசை எழுப்பும். அந்த ஓசை ” tea for two ” என்ற சப்தத்தைப் போன்று இருக்கும்.
இவை சிறு பூச்சிகள், புழுக்கள் இவற்றை உணவாகக் கொள்ளும். சிறு செடியின் உச்சியிலும், முட்புதர்களின் கிளைகளிலும் அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். கீழே தரையில் இருக்கும் பூச்சியோ புழுவையோ அடையாளம் கண்டு கொண்டு பறந்து சென்று அவற்றைப் பிடிக்கும்… பிறகு திரும்பவும் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து உணவை உண்ணும். பொதுவாகப் பறக்கும் போது வேட்டை ஆடாது. அமர்ந்திருக்கும் போது வாலை ஆட்டிக் கொண்டே இருக்கும்.
இதன் இனப்பெருக்க காலம் பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை இருக்கும். பாறை இடுக்கிலும் சுவர்களில் உள்ள பொந்துகளிலும் புற்கள் மற்றும் உரோமங்களால் கூடு கட்டும். கூட்டில் 2 முதல் 5 முட்டைகள் இடும். மொத்தத்தில் நகர்ப்புற வாழ்க்கைக்குப் பழகி விட்ட சிட்டுக்குருவி போன்ற ஒரு சிறு பறவை இந்தப் புதர்ச்சிட்டு.