முன்னொரு காலத்தில், ஒருவருக்குச் சொந்தமாக ஒரு வீடு இருந்தது.  அதைத் தவிர, அவருக்கு வேறு ஏதும் சொத்து இல்லை. அவருக்கு மூன்று மகன்கள். அப்பா இறந்த பிறகு, அந்த வீடு தனக்குக் கிடைக்க வேண்டும் என்று அந்த மூவருமே ஆசைப்பட்டனர்.

அப்பாவுக்கு மூன்று பிள்ளைகளையுமே மிகவும் பிடிக்கும்.  அதனால் அந்த வீட்டை யாருக்குக் கொடுப்பது என அவருக்குத் தெரியவில்லை. 

அவருடைய முன்னோர் பரம்பரையாக வாழ்ந்த வீடு என்பதால், அதை விற்று மூவருக்கும் பணத்தைச் சமமாகப் பிரித்துக் கொடுக்க, அவருக்கு மனம் வரவில்லை.

கடைசியில் அப்பாவுக்கு ஒரு எண்ணம் வரவே, மகன்களைக் கூப்பிட்டு, “மூவரும் வெளி உலகத்துக்குச் செல்லுங்கள்; மிகவும் சிறப்பாகக் கைத்தொழிலைக் கற்றுக் கொண்டு வருபவருக்கு, இந்த வீடு கிடைக்கும்”, என்று சொன்னார்.

மூவருக்கும் அப்பா சொன்னது சரியெனப் பட்டது. முதல் மகன் குதிரைக்கு லாடம் அடிக்கும் தொழிலைக் கற்றான். இரண்டாமவன் முடி திருத்தும் தொழிலாளி ஆக முடிவு செய்தான்.  மூன்றாமவன் வாள் சுழற்றும் வித்தை கற்றுக் கொள்ள முடிவு செய்தான். 

ஒரு குறிப்பிட்ட காலம் முடிந்ததும், மூவரும் வீட்டில் சந்திப்பது என முடிவு செய்து, வெளியே கிளம்பிச் சென்றனர்.

மூவரும் தாங்கள் விரும்பிய தொழிலைக் கற்றுக் கொடுக்கக் கூடிய சிறந்த ஆசிரியரைக் கண்டுபிடித்துக் கற்றுக் கொண்டனர். 

லாடம் அடிப்பவன் அரசனுடைய குதிரைகளுக்கு லாடம் அடித்தான்.  ‘எனக்குத் தான் கண்டிப்பாக வீடு கிடைக்கும்’, என அவன் நினைத்தான்.

முடி திருத்தும் தொழிலாளியான இரண்டாம் மகன், சமுதாயத்தில் மேல் மட்ட பிரபுகளுக்கும்,  மந்திரிகளுக்கும் முடிதிருத்தம் செய்தமையால், தனக்குத் தான் வீடு கிடைக்கும் என நினைத்தான். 

மூன்றாம் மகனுக்கு வாள் வித்தை கற்ற போது, உடம்பில் பலமான அடிகள் விழுந்தன. ஆனால் பல்லைக் கடித்துக் கொண்டு அடிகளைப் பொறுத்துக் கொண்டான்.  இந்த அடிக்குப் பயந்து ஒதுங்கினால், எனக்கு எப்போதுமே வீடு கிடைக்காது என அவன் நினைத்தான். 

குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகு, மூவரும் வீட்டுக்குத் திரும்பினர்.  அப்பாவிடம் தங்கள் திறமையை எப்படி நிரூபிப்பது என்று அவர்கள் யோசித்த வேளையில், திடீரென ஒரு முயல் அங்கு ஓடி வந்தது.

“ஆஹா! சரியான நேரத்தில் வந்தது”, என்று சொல்லிக் கொண்டே முடி திருத்துபவன், அதனுடன் ஓடிக்கொண்டே சோப் போட்டு அதன் உடம்பைக் கழுவிவிட்டு, முடியை வெட்டத் துவங்கினான்.  ஒரு முடியைக் கூட விட்டு விடாமலும், அதன் உடம்பில் சின்னக் கீறல் கூட ஏற்படாமலும் முடி வெட்டி அசத்தினான்.

அவன் அப்பா அதைப் பார்த்து வியந்தார்.  “மற்ற இருவரும் சரியாக ஏதும் செய்யாவிட்டால், வீடு உனக்குத் தான்”, என்றார்.

அதற்குப் பிறகு அந்தப் பக்கம் ஒரு பெரிய மனிதர் குதிரை வண்டியில் வந்தார். குதிரை மிக வேகமாகப் பாய்ந்து ஓடியது. 

“அப்பா! நான் செய்வதை இப்பொழுது பாருங்கள்”, என்று சொல்லி விட்டு லாடம் அடிப்பவன் வண்டியின் பின்னால் ஓடிய படியே, பாய்ந்து ஓடிய குதிரையின் நான்கு கால்களிலும் புது லாடம் அடித்து விட்டான்.

“உன் சகோதரனைப் போலவே, நீயும் உன் தொழிலை நன்கு தெரிந்து வைத்துள்ளாய். இப்படியிருந்தால் நான் யாருக்குக் கொடுப்பதென தெரியவில்லையே”, என்றார் அப்பா.

“எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள், அப்பா!”, என்றான் மூன்றாமவன்.

அப்போது மழை பெய்யத் துவங்கியிருந்தது. மூன்றாம் மகன் வாளை எடுத்துத் தலைக்கு மேலே சுழற்றினான். மழைத்துளி ஒரு சொட்டு கூட உடம்பில் விழாமல், சுழன்று சுழன்று வாளை வீசினான். 

fight
படம்: அப்புசிவா

வானத்திலிருந்து வாளி வாளியாகத் தண்ணீரைக் கொட்டியது போல்  கடுமையான மழை பெய்தது. ஆனால் கூரையின் கீழ் நின்றது போல்,  உடம்பில் ஒரு சொட்டு நீர் கூட படாமல் அவன் நின்றான்.

அவன் அப்பாவுக்கு மிகவும் வியப்பு. “மூன்று பேரில் நீ தான் மிகவும் திறமைசாலி. எனவே வீடு உனக்குத் தான்”, என்றார்.

அவன் அப்பா எடுத்த முடிவு சரியானது தான் என மற்ற இருவரும் திருப்தியோடு ஏற்றுக் கொண்டனர். 

மூவரும் ஒருவரோடு ஒருவர் பாசமாக இருந்தமையால், எல்லோரும் சேர்ந்தே இருந்தனர். அவரவர் தொழிலைச் சிறப்பாகச் செய்தமையால், மூவருக்கும் நிறைய வருமானம் கிடைத்தது.

வயதாகும் வரை அதே வீட்டில் மூவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Inline Feedbacks
View all comments