மாலை நேரம் நெருங்கியதும் லேசாக இருட்ட ஆரம்பித்தது. கொஞ்சம் அடர்ந்த காட்டுப் பகுதியாக அந்த இடம் இருந்ததால் சீக்கிரம் இருட்டுகிறதோ என்று தாமரைக்குத் தோன்றியது.
இவ்வளவு நேரம் அவர்கள் பண்ணைத் தோட்டத்துக்குப் போகாத விஷயம் தலைமை ஆசிரியைக்குத் தெரிந்திருக்கும். தெரிய வந்ததும் அவர் உடனே டீச்சருக்குத் தான் ஃபோனில் அழைப்பு விடுவார். ஃபோனில் அழைப்பு வந்தால் சத்தம், அந்த வீட்டு வாசலில் காவலுக்கு நிற்கும் முரடர்களுக்குக் கேட்டு விடும் என்று நினைத்த தாமரை, அங்கிருந்து பின்னால் நகர்ந்து நகர்ந்து கொஞ்சம் காட்டுப் பகுதிக்குள் போய் விட்டாள்.
அவள் நினைத்தபடியே ஃபோன் அடித்தது. எடுத்துக் காதில் வைத்துக் கொண்டாள் தாமரை.
“மீனா டீச்சர், என்ன ஆச்சு? இன்னும் பழத்தோட்டத்துக்கே போய்ச் சேரலையாமே? எங்கே இருக்கீங்க இப்போ? வேன் ஏதாவது ரிப்பேர் ஆயிடுச்சா? எனக்கு உடனே ஃபோன் செஞ்சு தகவல் சொல்லிருக்கலாமே? நான் எவ்வளவு கவலையோட இருக்கேன் தெரியுமா? பொறுப்பில்லாம இருக்கீங்களே இப்படி?”, என்று தலைமை ஆசிரியை படபடவென்று பேசினார்.
“மேடம், நான் தாமரை பேசறேன். செண்பகம் ஆயாவோட பொண்ணு. நாங்க எல்லாருமே பெரிய ஆபத்தில மாட்டிட்டிருக்கோம். நீங்க கொஞ்சம் சீக்கிரமா போலீஸைக் கூட்டிட்டு வாங்க. ஏற்கனவே பத்து, பதினைஞ்சு மொரட்டுப் பசங்க இங்க இருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில் இவங்க பாஸும் இன்னும் கொஞ்சம் ஆட்களும் வராங்க போல இருக்கு. அதுனால நெறைய போலீஸ் வேண்டியிருக்கும்”, என்றாள் கிசுகிசுப்பான குரலில்.
அமைதியான காட்டுப்பகுதி என்பதால் ஸெல்ஃபோன் அடித்த சத்தமும், அவள் பேசும் குரலும் கேட்டு அவர்கள் தேடிக் கொண்டு வந்து கண்டுபிடித்து விடலாம் என்று பயந்தாள் தாமரை.
“என்ன ஆபத்தும்மா? எந்த எடத்துல இருக்கேன்னு சொல்லு. அப்பத் தானே நாங்க உதவிக்கு வர முடியும்?”, என்று கேட்டாள் பாரதி மேடம், ஆமாம் அது தான் அந்தத் தலைமை ஆசிரியையின் பெயர்.
“மேடம், எங்கிட்ட நேரம் அதிகம் இல்லை. சீக்கிரம் சொல்றேன். கவனமாக் கேட்டுக்கங்க. நாங்க காலையில் வரும்போது வழியில் நிறுத்தி ஒரு மரத்தடியில் சாப்பாடு பொட்டலங்களைப் பிரிச்சுச் சாப்பிட்டோம். அதைச் சாப்பிடதுக்கு அப்புறம் என்னைத் தவிர எல்லோரும் மயக்கமாயிட்டாங்க. நான் சரியா சாப்பிடாததுனால பொழைச்சேன்.
அங்கிருந்து கொஞ்ச தூரம் வந்ததும் டிரைவர் வண்டியை நிறுத்தி யார் கிட்டயோ பேசிட்டு வண்டியைத் திருப்பி இங்க கொண்டு வந்துட்டான். இங்கே வந்ததும் அந்த டிரைவரையும் அடிச்சுப் போட்டுட்டாங்க. எங்க எல்லாரையும் எதுக்காவோ கடத்தியிருக்காங்க. நான் எப்படியோ இவங்க கண்ணில மண்ணைத் தூவிட்டு வேனில் இருந்து இறங்கி இங்க காட்டுக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டு இருக்கேன்”, என்றாள் தாமரை.
“நாங்க அந்த இடத்தைக் கண்டுபிடிக்கறதுக்கு ஏதாவது அடையாளம் சொல்லும்மா. இந்த ஃபோன் லொகேஷன் வச்சும் கண்டுபிடிக்கப் பாக்கறோம். அதுக்கு எவ்வளவு நேரம் ஆகுமோ தெரியலை. நீ சீக்கிரமா அங்கே சுத்திப் பாத்து என்னல்லாம் இருக்குன்னு சொல்லு, கொஞ்சம்”, என்று பரபரப்புடன் சொன்னாள் பாரதி.
“சரி மேடம். இந்த எடத்தில இந்த ஒரு வீடு மட்டும் தான் தனியா இருக்கு. அக்கம் பக்கத்தில வேற எந்த வீடும் இல்லை. எதித்தாப்பல காடு. வீட்டுக்குப் பின்னால் ஒரு மலை தெரியுது. வீட்டுக்குப் பக்கத்தில ரெண்டு காற்றாலைகள் (wind mills) ரெண்டு பக்கமும் இருக்கு. அப்புறம் வீட்டுப் பக்கத்தில ஒரு புகைபோக்கி மாதிரி கொஞ்சம் உசரமா ஒண்ணு இருக்கு. இந்தத் தொழிற்சாலைகளில இருக்குமே அந்த மாதிரி. இவ்வளவு தான் மேடம் எனக்குத் தெரிஞ்சது. மேடம், பக்கத்தில காலடிச் சத்தம் கேக்குது. யாரோ நடந்து வராங்க. நீங்க ஃபோனை வச்சிருங்க. நான் போய் ஒளிஞ்சுக்கறேன்”, என்று அவசர அவசரமாகச் சொன்னாள்.
“குட் அப்ஸர்வேஷன் தாமரை. பயப்படாம தைரியமா இரு. நான் சீக்கிரம் போலீஸோட வரேன்”, என்று சொன்ன பாரதி மேடம், தன்னுடைய உறவினரான சென்னை போலீஸ் கமிஷனருடன் பேசினாள். இது கொஞ்சம் பெரிய அளவிலான குழந்தைகள் கடத்தல் போல பாரதி மேடத்திற்குத் தோன்றியது. கூட்டத்தோடு குற்றவாளிகளைப் பிடிக்க நிறைய போலீஸ் ஃபோர்ஸும், திறமையான திட்டமிடுதலும் தேவை என்று பாரதி மேடத்திற்குத் தோன்றியது.
தாமரையிடம் பேசிய விஷயங்களைச் சொல்லி விட்டு, அந்த ஃபோன் நம்பரையும் கொடுத்தாள். உடனே கமிஷனர் அந்த ஸ்கூல் இருந்த ஊருக்கு அருகிலிருந்த கொஞ்சம் பெரிய நகரத்தில் இருந்து ஒரு பெரிய போலீஸ் டீமை, அந்த ஸ்கூலுக்கு அனுப்ப, பாரதி மேடத்துடன் அவர்கள் கிளம்பினார்கள்.
போகும் வழியில் ஃபோன் நம்பரை வைத்து லொகேஷனும் கண்டுபிடிக்கப் பட்டதால் அந்த இடத்தை நோக்கி விரைந்தது அந்தக் குழு. தாமரை சொன்ன அடையாளங்களை வைத்து எளிதாகக் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் முன்னேறினார்கள்.
தாமரை, மீண்டும் அந்த வீட்டின் எதிரே வந்தாள். தலைவர் என்று அழைக்கப் பட்டவர் அதற்குள் வந்திருந்தார். அவருடன் ஒரு பெரிய அடியாட்கள் படையே வந்திருந்தது. அவர்கள் கொண்டு வந்திருந்த பெரிய ஆம்புலன்ஸில் குழந்தைகளையும் மீனா டீச்சரையும் துப்பாக்கி முனையில் ஏற்ற ஆரம்பித்தார்கள்.
இப்போது அவர்களை போலீஸ் வரும் வரை தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயம் தாமரைக்கு. உடனே கையை முன்னால் நீட்டி, ‘கோல்டன் தமிழச்சி’ என்று தாமரை கத்த, முற்றிலும் தனது புதிய அவதாரத்தை எடுத்தாள்.
‘கோல்டன் தமிழச்சி பற’ என்று சொல்ல வானில் பறந்து சென்று ஆம்புலன்ஸ் எதிரே குதித்தாள்.
எதிரே குதித்த பொன்னிறமான அந்தப் பெண்ணைப் பார்த்துத் திடுக்கிட்டது அந்தக் கூட்டம்.
கைகளை நீட்டி அவர்களை எச்சரித்தாள் அந்தப் பெண்.
“ஒழுங்கா இவங்களை எல்லாம் விட்டுட்டு போலீஸ் கிட்ட சரண்டர் ஆயிடுங்க. இல்லைன்னா எல்லோருமா அடி வாங்குவீங்க”, என்று அவள் சொன்னதும், ஏதோ பெரிய ஜோக்கைக் கேட்டது போலச் சிரிக்க ஆரம்பித்தார்கள் அந்த முரடர்கள்.
“தோ பாருடா. ஏதோ ஜோக்கர் மாதிரி டிராமா கம்பெனியில இருந்து காஸ்ட்யூமை மாட்டிக்கிட்டு வந்து இந்தப் பொண்ணு ஒளறுது. அதையும் பிடிச்சுப் போடுங்கடா வண்டியில”, என்று அவர்களுடைய பாஸ் சொல்ல, இரண்டு அடியாட்கள் அவளை நோக்கிச் சிரிப்புடன் வந்தார்கள். மின்மினியை மனதில் நினைத்துக் கொண்டு கையை நீட்டி அவர்கள் இருவருக்கும் கராத்தே அடி கொடுத்தாள் தமிழச்சி. இரும்பால் அடித்தது போல இருந்த அந்தத் தாக்குதலில் தள்ளிப் போய்ப் பொத்தென்று விழுந்தார்கள் இரண்டு பேரும்.
அதற்கப்புறம் ஒரே வேடிக்கை தான். தமிழச்சி பறந்து பறந்து அவர்களைத் தாக்கினாள். அவர்கள் தப்பித்து ஓட முடியாதபடி அவர்களைச் சுற்றி வளைத்து மாறி மாறித் தாக்கினாள். அதற்குள் மயக்கம் தெளிந்திருந்த குழந்தைகள் கைதட்டி இரசிக்க ஆரம்பித்தார்கள். துப்பாக்கி, கத்தி, கம்பு எதுவுமே தமிழச்சியை ஒன்றுமே செய்ய முடியாமல் தோற்றுப் போனதால் அரண்டு போனார்கள் அவர்கள். மின்னல் வேகத் தாக்குதல். அதனுடன் அவளுடைய உடலும் தங்க நிறத்தில் இருந்ததால் லேசாக இருட்டத் தொடங்கிய அந்த நேரத்தில் கோல்டன் தமிழச்சியின் உடலும் பளீர் பளீரென்று மின்னியது.
அதற்குப் பிறகு அந்த தடியர்கள் எல்லோரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி அடைத்துக் கதவைப் பூட்டி அதனருகில் ஸ்கூல் வேனில் வந்த ஹெல்ப்பர் நின்று கொண்டான். குழந்தைகளும் அவனுக்கு உதவியாக அங்கேயே நின்று கொண்டார்கள்.
அவர்களுடைய பாஸ் அப்போது துப்பாக்கியால் அந்த வொண்டர் கேர்ளை ஒன்றும் செய்ய முடியாது என்பதைப் புரிந்து கொண்டு தன் துப்பாக்கியை மீனா டீச்சரின் நெற்றிப் பொட்டில் வைத்து மிரட்டினான்.
“ஏய் தங்கப் பொண்ணு! ஒழுங்காச் சண்டையை நிறுத்திட்டு அமைதியா நில்லு. இல்லைன்னா இவங்க மூளை தெறிச்சு வெளியே வந்துரும்”, என்று மிரட்டியபோது, என்ன செய்வதென்று புரியாமல் குழம்பிப் போய் நின்றாள் கோல்டன் தமிழச்சி.
அப்போது எதிர்பாராத திசையில் இருந்து அவர்களுக்கு உதவி வந்தது. கடத்தல் குழுவிற்கு உதவி செய்தும் அவர்களிடம் அடி வாங்கி மயங்கிக் கிடந்த டிரைவர், தன்னுடைய தவறை உணர்ந்து வருந்தினான். மெல்ல எழுந்து வந்து வெளியே நடந்த காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். கோல்டன் தமிழச்சியின் சாகசத்தில் மனதைப் பறிகொடுத்துப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.
அந்தத் தலைவன், மீனா டீச்சரின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தவுடன், டிரைவர் ஒரு பெரிய தடியை எடுத்து வந்து அவனைப் பின்புறமாகத் தாக்க, பாஸின் கையில் இருந்த துப்பாக்கி தெறித்து விழுந்தது.
அதை மீனா டீச்சர் எடுத்து வைத்துக் கொண்டாள். அதற்குள் போலீஸ் வண்டிகள் வரும் சத்தம் கேட்டதால், கோல்டன் தமிழச்சி போலீஸ் டீம் வந்து சேர்வதற்குள் அங்கிருந்து மறைந்து விட வேண்டும் என்று நினைத்துக் கிளம்பினாள்.
ஒரு சிறுமி அவளருகில் வந்து, “எங்களைக் காப்பாத்தினதுக்கு தேங்க்ஸ். உங்க பேரென்ன ஸுபர் கேர்ளா?”, என்று கேட்க, அவளும் சிரித்துக் கொண்டே
” இல்லை, இல்லை. என்னோட பேரு கோல்டன் தமிழச்சி”, என்றாள். எல்லோரும் சேர்ந்து கை தட்டினார்கள். போலீஸும் நெருங்கிக் கொண்டிருந்தது.
கோல்டன் தமிழச்சி அவர்களுக்கு டாட்டா சொல்லி விட்டு, வானத்தில் பறந்து சென்றாள். அவர்கள் கண்களில் இருந்து மறைந்து விட்டாள்.
“மீனா டீச்சர், மீனா டீச்சர், தாமரையைக் காணோமே?”, என்றாள் ஒரு சிறுமி. உள்ளே போய்த் தேடினார்கள். தாமரை கிடைக்கவில்லை. கண்களைக் கசக்கிக் கொண்டு எதிரே இருந்த மரத்தின் பின்னால் இருந்து தாமரை வந்தாள். அவள் கையில் மீனா டீச்சரின் மொபைல் இருந்தது.
“நான் மட்டும் காலையில சாப்பிடாததுன்னால மயக்கமாகலை. தப்பிச்சுப் போய், மரத்துக்குப் பின்னால ஒளிஞ்சுக்கிட்டிருந்தேன். அப்படியே தூங்கிப் போயிட்டேன்”, என்றாள் தாமரை
“அச்சச்சோ, நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டே தாமரை! நீ அந்த கோல்டன் தமிழச்சியைப் பாக்கவேயில்லை. எப்படி பறந்து பறந்து சண்டை போட்டு எங்களைக் காப்பாத்துனா தெரியுமா?”, என்று அவர்கள் சொன்னதும் தாமரை வருத்தப் பட்டாள்.
குற்றவாளிகள் அனைவரும் வளைக்கப் பட்டனர். குழந்தைகளைக் கடத்தி வெளிநாடுகளுக்கு அனுப்புவதும், பிச்சைக்காரர்களாக மாற்றிப் பிச்சை எடுக்க வைப்பதும், கொஞ்சம் பெரிய பெண் குழந்தைகளை பிராத்தல் ஹவுஸ் போன்ற தவறான இடங்களுக்கு விற்பதுமான கொடிய செயல்களைச் செய்து கொண்டிருந்த அந்தக் கூட்டத்தின் தலைவன் பிடிபட்டான்.
வேன் டிரைவர் தவறை உணர்ந்து சரண்டர் ஆனதுடன் அப்ரூவராகி, போலீஸுக்கு உதவினான். பணத்திற்கு ஆசைப்பட்டு, உணவில் மயக்க மருந்தைக் கலந்ததில் இருந்து எல்லாக் குற்றங்களையும் ஒத்துக் கொண்டான்.
தாமரை சொன்ன இடத்தில் தேடி ஸ்கூல் வேனையும் கண்டுபிடித்து விட்டார்கள். புதிய அனுபவத்துடன் குழந்தைகள் வீட்டுக்குத் திரும்பினார்கள்.
அடுத்த நாள் செய்தித்தாள்களில் மற்றும் டி.வி. ந்யூஸில் குழந்தைகள் கோல்டன் தமிழச்சி பற்றி சொல்ல, மனோதத்துவ நிபுணர்கள் கலந்துரையாடலில் தங்கள் பொன்னான கருத்துக்களை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
“மயக்கமருந்து கலந்த உணவைச் சாப்பிட்டதால் அவர்கள் ஒரு மாதிரி கிறக்கத்தில் இருந்திருக்கிறார்கள். கோல்டன் தமிழச்சி என்று ஒரு ஸுபர் கேர்ள் கேரக்டரை உருவாக்கிக் கற்பனை அதாவது ஹேலுஸினேட் (hallucinate) செய்து சொல்கிறார்கள். இது கடத்தப்பட்டவர்கள் தாங்களாக உருவகப்படுத்திக் கொண்ட ஒரு விதமான மனதின் குழப்பமான கற்பனை நிலை”, என்று அவர்கள் தீர்ப்பு வழங்க, அந்த நிகழ்ச்சியைப் பார்த்த தாமரை சிரித்து இரசித்துக் கொண்டிருந்தாள்.
கோல்டன் தமிழச்சியின் சாகசங்கள் வளரும் இனி.
தொடரும்,
வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.