ஜுன் மாதம் ஒரு நாள் காலையில் எடித் என்கிற அழகிய குட்டிப் பெண் கிளம்பி, ஒரு தோட்டத்துக்குச் சென்றாள்.
டாமி என்பவன் அவளுடைய விளையாட்டுத் தோழன். பூக்களின் வாசனை நிரம்பிய அந்தக் கோடை காலத்தில், உடம்பு சரியில்லாததால் வெளியே வர முடியாமல், அவன் வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடந்தான். எனவே அவள் தோட்டத்தில் பூத்திருப்பதிலேயே மிக அழகான பூக்களைப் பறித்து வந்து கொடுத்து, அவனுக்கு மகிழ்ச்சியூட்ட நினைத்தாள்.
கையில் சிறிய கூடையொன்றையும், பூக்களைச் செடியிலிருந்து பறிக்க ஒரு கத்திரிக்கோல் ஒன்றையும், எடித் எடுத்துச் சென்றாள். ஒரு இடத்தில் நில்லாமல் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்த எடித், ரோஜாச் செடிகளுக்கிடையே ஒரு தேவதை போலத் தோன்றினாள். அந்தத் தோட்டத்தில் இருந்த எல்லா ரோஜாக்களை விடவும், அவள் மிக அழகான ரோஜா பூப்போல இருந்தாள்.
சுறுசுறுப்பாக வேலை செய்த போதும், அவள் நினைவு முழுதும் டாமியைப் பற்றியே இருந்தது. ‘நான் அவனைக் குஷிபடுத்த விரும்புறேன்; அவனுக்கு எது ரொம்ப மகிழ்ச்சியைக் கொடுக்கும்?’ என்ற யோசனையுடன், ஒரு அழகிய நீரூற்றின் ஓரத்தில் உட்கார்ந்தாள்.
அங்கு அவள் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்த போது, இரண்டு அழகிய குட்டிக் குருவிகள் அந்த நீரூற்றில் குளித்தன. வெயிலில் மின்னிய அந்த நீர், அலை அலையாக வந்து நடனம் ஆடுவது போல் தோன்றியது. அந்தக் குருவிகள் நீருக்குள் மூழ்கிக் குளித்தன; பின் நீர்த்திவலைகள் சொட்டச் சொட்ட வெளியில் வந்து, ஒரு நிமிடம் நின்றுவிட்டு, மீண்டும் நீரினுள் மூழ்கின.
பின்னர் வெளியில் வந்து, சிறகுகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் நீரை உதறிவிட்டு, இனிமையாகப் பாடிக்கொண்டே பறந்து சென்றன. தன் குட்டித் தம்பி குளியலை ரசித்து மகிழ்வது போல், இந்தக் குட்டிக் குருவிகளும் குளியலை மிகவும் ரசிக்கின்றன என்று எடித் நினைத்தாள்.
அக்குருவிகள் தூரத்தில் இருந்த ஒரு மரத்துக்குப் பறந்து சென்றன. அங்கு ஒரு ரோஜாச் செடியில் மிக அழகான ரோஜா பூத்திருப்பதை எடித் கவனித்தாள். அதுவரை அவள் பார்த்ததிலேயே, அது மிக அழகானதாக இருந்தது.
“ஆஹா! எவ்ளோ அழகு!”, என்று அவள் கத்திக் கொண்டே அந்தச் செடியை நோக்கி ஓடினாள். முகத்தை அந்தப் பூவுக்கு மிக அருகில் வைத்து, குனிந்து பார்த்தாள். அப்போது, அதன் உள்ளே இருந்து ஒரு சின்ன பூச்சி வெளியில் வந்து, அவள் கன்னத்தில் கொட்டிவிட்டது.

வலி தாங்காமல் எடித் சத்தம் போட்டு அழ ஆரம்பித்தாள். அந்தத் தோட்டத்தில் வேறு பக்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த அவள் அப்பாவிடம் அழுது கொண்டே ஓடினாள்.
அவளைப் பார்த்த அவள் அப்பா, “ஏன் அழுவுற?”, என்று கேட்டுவிட்டு, அவள் கன்னத்தைப் பார்த்தார். “தேனீ உன்னைக் கொட்டிடுச்சி!”, என்று சொல்லிவிட்டு, அவள் கன்னத்தில் இருந்து, ஒரு கொடுக்கை வெளியே எடுத்தார்.
வீங்கியிருந்த அவள் கன்னத்தைக் குளிர்ந்த நீரால் கழுவி விட்டார். அதே சமயம் சிறிய தேனீ பூச்சிகளைப் பற்றிய சுவாரசியமான செய்திகளை அவளுக்குச் சொன்னார்.
“இனிமே அழக்கூடாது, என் செல்லம்!”, என்று அப்பா அவளைத் தேற்றினார். “நிறைய தேன் கூடு வைச்சிருக்கிற ஒருத்தர் கிட்ட ஒன்னை அழைச்சிட்டுப் போறேன்”, என்று அப்பா சொன்னார்.
“ஓ! ரொம்ப நன்றி அப்பா!”, என்று தன் கண்ணீரைத் துடைத்துவிட்டு மகிழ்ச்சியுடன் சொன்னாள் எடித். “நான் ஓடிப்போய் ஒடனே கிளம்பத் தயார் ஆகிறேன்”, என்றாள்.
‘தேனீ மாஸ்டர்’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் ஒரு பெரியவரிடம் அப்பா அவளை அழைத்துச் சென்றார். தாம் வளர்க்கும் தேனீக்களைப் பற்றித் தமக்குத் தெரிந்தவற்றைக் குட்டிப் பெண்ணுக்குச் சொல்வதில், அவருக்கு மிகவும் மகிழ்ச்சி.
ஒரு கண்ணாடியால் ஆன தேன் கூட்டுக்கு, அவர் அவளை அழைத்துச் சென்றார். கண்ணாடி என்பதால், உள்ளே தேனீக்கள் வேலை செய்வதை அவளால் பார்க்க முடிந்தது.
“ஒவ்வொரு கூட்டிலேயும் மூன்று விதமான தேனீக்கள் உண்டு”, என்றார் அவர்.
“நடுவுல பெருசா இருக்கிறது ராணித் தேனீ; கூட்டில அது தான் மிகவும் முக்கியமான தேனீ; அதுக்கும் கொடுக்கு இருக்கு. ஆனா அது, அதைப் பயன்படுத்துறதே கிடையாது; சுறுசுறுப்பா வேலை செய்றது, வேலைக்கார தேனீக்கள்! இன்னிக்குக் காலையில ஒன்னைக் கொட்டினது, அநேகமா ஒரு வேலைக்காரத் தேனீயாத் தான் இருக்கும் குட்டிப்பெண்ணே”, என்றார் தேனீ மாஸ்டர்.
எடித்துக்கு முதலில் வேலைக்காரத் தேனீக்களைப் பிடிக்கவில்லை. ஆனால் அவை தாம் மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்யும்; குட்டித் தேனீக்களை நல்லாக் கவனிச்சிக்கும்; தேன் மெழுகால கூட்டோட அறைகளைக் கட்டும்; தேனைக் கொண்டு வரும் என்ற விபரங்களை அறிந்த போது, அவற்றின் மீது அவளுக்குப் பாசம் அதிகமாகிவிட்டது.
“குளிர் காலத்துல பூவே இருக்காதே, அப்ப தேனீயெல்லாம் தேனுக்கு என்ன செய்யும்?”, என்று கேட்டாள் எடித்.
“நீண்ட குளிர் காலத்துல தேனீக்கள் தூங்கிடும்; சூடு தர்ற வசந்தம் வரும் போது முழிச்சிக்கும்”, என்றார் அந்தப் பெரியவர்.
“சரி. இப்ப நாம கெளம்புறது நல்லது; இல்லேன்னா, நீ டாமியை இன்னிக்குப் பார்க்க முடியாது”, என்றார் அவள் அப்பா.
பிறகு எடித் தேனீக்களைப் பற்றி சுவையான விபரங்களைச் சொன்ன தேனீ மாஸ்டருக்கு நன்றி தெரிவித்தாள். எப்போதெல்லாம் முடியுமோ அப்போது அவரை வந்து பார்ப்பதாகச் சொல்லி விட்டுக் கிளம்பினாள்.
வீட்டுக்குப் போகும் வழியில், “அப்பா! காலையில அந்தக் குறும்புக்காரத் தேனீ என்னைக் கொட்டினதை நினைச்சி, எனக்கு மகிழ்ச்சி தான்; ஏன்னா இப்ப டாமிக்கிட்ட சொல்ல சுவாரசியமான விஷயங்கள் எங்கிட்ட இருக்கு”, என்றாள் எடித்.
(ஆங்கிலம் – ஹெலன் கெல்லர்)