ஒற்றைச் சிறகு ஓவியா – சிறுவர் நாவல்
ஆசிரியர் – விஷ்ணுபுரம் சரவணன்
வெளியீடு:- புக்ஸ் பார் சில்ரன்
விலை – ₹110/-

இந்நூல் 2019 ஆம் ஆண்டு சிறுவர் இலக்கியத்துக்கான ஆனந்த விகடன் பரிசை வென்றது. நடக்கவிருக்கும் நந்திமங்கலம் அரசுப் பள்ளியின் ஆண்டு விழாவுக்காக ஏழாம் வகுப்பு மாணவர்கள் ஒத்திகை பார்க்கும் சமயம், ஓர் அதிசயம் நிகழ்கின்றது.
திடீரென்று ஓவியாவுக்கு ஒற்றைச் சிறகு முளைக்கிறது! மற்றவர்களின் கண்கள் வழியாக அவர்கள் கனவுக்குள் போய், இரகசியத்தைத் தெரிந்து கொள்ளும் அதிசய ஆற்றலும், அவளுக்குக் கிடைக்கின்றது.
அந்த அதிசயத்தையே கலைநிகழ்ச்சியாக நடத்தி, கலெக்டரை அசத்த நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் நினைத்தது போல் செய்ய முடியாமல், முக்கியமான பொருள் திருட்டு போகின்றது. அதனைக் கண்டுபிடிக்க வேண்டுமானால் சில புதிர்களை விடுவித்தாக வேண்டும். அப்புதிர்களை அவர்கள் எவ்வாறு விடுவித்து வெற்றி பெற்றார்கள் என்பதே இதன் கதை.
இவர்களுடைய தேடலுக்குப் பள்ளியின் பியூன் தாத்தா கதிரேசன் மிகவும் உதவியாக இருக்கின்றார். நிலத்தில் செயற்கை உரங்களைக் கொட்டி, நஞ்சாக்கியதன் விளைவாக உழவரின் நண்பனான மண்புழு அழிந்து விட்டது; கார்பரேட் கம்பெனிகள் நிலத்தடி நீரை உறிஞ்சியதால், குடிதண்ணீர் நிறம் மாறி குடிப்பதற்கு லாயக்கில்லாமல் போய் விட்டது; என்பன போன்ற சமகால மக்கள் பிரச்சினைகளை, இந்த பேண்டசி நாவல் மூலம் வாசிக்கும் சிறுவர்களுக்கு ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.
அவசியம் சிறுவர்களுக்கு இந்நூலை வாங்கிக் கொடுத்து வாசிக்கச் செய்யுங்கள்.