“வணக்கம் குழந்தைகளே! அனு இன்னும் என்ன செய்யுற சீக்கிரம் வா!” – பிண்டு.
“இரு பிண்டு. இப்பத்தான் ஸ்கூலேர்ந்து வந்தேன், கை கால் முகம் கழுவிட்டு ட்ரெஸ் மாத்திட்டு நான் ஓடி வருவேனாம், நீ அதுக்குள்ள நம்ம எக்ஸ்பிரிமெண்டுக்குத் தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்து வைப்பியாம்!”, என்று சொல்லி விட்டு குளியலறைக்குள் ஓடினாள் அனு.
“பூஞ்சிட்டுக்களே! இன்னிக்கு ஒரு சேஞ்சுக்கு நம்மளே தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வைப்போமா! வாங்க அனு வரதுக்குள்ள எல்லாத்தையும் தயாரா வைக்கலாம்”.
தேவையான பொருட்கள்:
தட்டு
உப்பு
மிளகு
சீப்பு
“அனு வந்தாச்சு பசங்களா! வாங்க நம்ம செய்முறையைப் பார்க்கலாம்”.
செய்முறை:
1. தட்டில் ஒரு ஸ்பூன் அளவிற்கு மிளகினை கொட்டிக் கொள்ளவும்.
2. சீப்பை வைத்து இரண்டு மூன்று முறை நன்றாக முடியை சீவி, சீப்பின் ஒரு முனையைக் கையிலும் மறுமுனையை தட்டில் உள்ள மிளகிற்கு அருகே வைக்கவும்
3. இப்போது தட்டில் உள்ள மிளகு குதிப்பதைக் காணலாம்.
“அட! ஆமாம் பிண்டு, இந்த மிளகுல ஏதாவது மந்திரப்பொடி போட்டியா எப்படிக் குதிக்குது”, என்று அனுவும் அதோடு சேர்ந்து அழகாக குதித்தாள்.
மந்திரமும் இல்ல, மாயமும் இல்ல, எல்லாம் அறிவியல் அனு.
அறிவியல் உண்மைகள்:
நாம் தலையில் சீப்பை வைத்து சீவும் பொழுது சீப்பின் முனைகளில் நெகட்டிவ் (-) சார்ஜ் உருவாகும். மிளகு பாசிட்டிவ் (+) சார்ஜினைக் கொண்டது. எனவே தலையைச் சீவிய சீப்பினை மிளகின் அருகே வைக்கும் பொழுது, இரு எதிர்வினை ஆற்றலும் ஈர்க்கப்படுகிறது. அதனால் சீப்பினை நோக்கி மிளகு நகர்வது குதிப்பது போல் உள்ளது. இதற்கு ஸ்டாடிக் எலக்ட்ரிசிட்டி (Static Electricity) என்று பெயர்.
“வாவ் பிண்டு சூப்பரா இருக்கே! இந்த சோப்பு விளம்பரத்துல ஒரு குட்டிப் பையன் தலையை சீப்பால சீவி தூரம் உள்ள ரூபாய் நோட்டை எடுப்பானே!”.
பிண்டு, “ஆங்..அதே தான் இது அனு. அதுவும் ஸ்டாடிக் எலக்ட்ரிசிட்டி தான். சின்னச் சின்ன பேப்பர் துண்டுகளை கிழிச்சுப் போட்டு அதுக்குப் பக்கத்துல சீப்பைக் கொண்டு போனா பேப்பர் துண்டு சீப்போட ஒட்டிக்கும்”.
“என்ன ஃப்ரெண்ட்ஸ், பிண்டு சொல்லிக் குடுத்த ரொம்ப ரொம்ப சுலபமான சோதனையைச் செஞ்சு பாக்குறீங்களா! மிளகு மட்டும் இல்லாம வீட்டுல உள்ள மத்த மசாலா பொருட்கள், கல் உப்பு இதையெல்லாம் வெச்சு செஞ்சு பாருங்க”.
பிண்டு, “பாய் குட்டீஸ் அடுத்த மாசம் பார்க்கலாம்”.
மருத்துவம் சார்ந்த துறையில் இளங்கலை மற்றும் முதுகலை முடித்துள்ளேன். ஒரு மருத்துவ கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறேன்.கடந்த இரண்டு வருடங்களாக சிறுகதைகள் மற்றும் புதினங்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். யூ ட்யூப்பில் ஒலி வடிவ கதைக்களுக்கான சானல் ஒன்றையும் நடத்திக் கொண்டு வருகிறேன்.