அந்தக் குழந்தை கடத்தலில் தாமரை, கடத்தல்காரர்களிடம் இருந்து சாமர்த்தியமாகத் தப்பித்ததோடு, அந்த இடத்தைக் கண்டுபிடிக்க நிறைய க்ளூக்கள் (clues) கொடுத்து உதவினாள் என்று எல்லோரிடமும் சொல்லிச் சொல்லி, அந்தத் தலைமை ஆசிரியை மிகவும் மகிழ்ந்து போனாள்.

videorecord
படம்: அப்புசிவா

அடுத்த நாள் ஸ்கூலில் ஏற்பாடு செய்யப் பட்ட ஸ்பெஷல் அசெம்பிளியில் தாமரையை ஆஹா, ஓஹோவென்று புகழ்ந்தாள் பாரதி மேடம்.

“இந்தப் பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவியும், தாமரை போலத் துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் செயல் பட வேண்டும். அவளைப் போலவே பல தாமரைகளை உருவாக்க, இந்தப் பள்ளியின் ஆசிரியைகளான நாங்கள் இன்று உறுதி எடுக்கிறோம்.

இன்றிலிருந்து தினமும் எல்லா மாணவிகளுக்கும் தற்காப்புக் கலைகள் கற்றுத் தரப்படும். ஏற்கனவே தற்காலிகமாக நடந்து கொண்டிருந்த வகுப்புகள் இனி நிரந்தரமாக நடத்தப் படும். இவற்றைத் தவிர சிலம்பம், மலை ஏறுதல், ஆபத்து நேரங்களில் எப்படி செயல்படுவது, என்ன எச்சரிக்கை எல்லாம் எடுக்கவேண்டும் என்பது பற்றிய வகுப்புகள் எல்லாமே தொடர்ந்து நடக்கும்.

படிப்பைப் போலவே விளையாட்டுப் பயிற்சிகளும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு அவசியம் என்பதால் விளையாட்டு நேரம் இனி தினமும் உண்டு. கால்பந்து, ஹாக்கி, கிரிக்கெட், டென்னிஸ், நீச்சல் போன்றவற்றில் ‌உங்களுக்குப் பயிற்சி அளிக்க எக்ஸ்பர்ட்டுகளை வரவழைக்கிறோம். இதற்காக எந்தக் கட்டணமும் வசூலிக்க மாட்டோம். எல்லாமே இலவசம்.

மிகப் பெரிய கடத்தல் மன்னர்களைக் கூட்டத்தோடு பிடிக்க, நமது பள்ளியைச் சேர்ந்தவர்கள் உதவியதால் நமது மாவட்ட கலெக்டரே இந்தப் பயிற்சிக்கான ஆணைகளைத் தனிப்பட்ட முறையில் வழங்கியிருக்கிறார்”, என்று சொன்னதும் மாணவிகளும், ஆசிரியர்களும் சேர்ந்து செய்த கரவொலி விண்ணை எட்டியது.

“இன்று உங்கள் அனைவர் முன்னிலையிலும் நமது மாணவியான தாமரைக்கு, ‘தங்கத் தாமரை’ என்ற பட்டத்தை வழங்குகிறேன். கோல்டன் தமிழச்சி பற்றி நமது மாணவிகளும், மீனா டீச்சரும் சொன்ன தகவல்களை எல்லோரும் கற்பனை‌ என்று சொன்னார்கள். ஆனால் இந்தத் தங்கத்தாமரைப் பெண் நிஜம். நமது கண்ணெதிரே நிற்கிறாள்”, என்று சொல்லி பாரதி மேடம் தனது உரையை முடித்தார். போலீஸ் கமிஷனர் தனது பரிசாக அனுப்பியிருந்த ஸ்மார்ட் ஃபோன் ஒன்றையும் தாமரைக்கு மேடையில் அழைத்து வழங்கினார்.

சித்தி செண்பகத்திற்குப் பெருமை தாங்கவில்லை. திடீரென்று நமக்கு நல்ல நேரம் வந்துவிட்டது. குழந்தைகளும் ஸ்கூலில் சேர்ந்து படிக்க ஆரம்பித்து விட்டார்கள். தாமரையையும் எல்லோரும் பாராட்டுகிறார்கள் என்று நினைத்து நினைத்து சந்தோஷப் பட்டுக் கொண்டாள்.

லட்டு கோபால் கூட வந்து தனது தோழியைப் பாராட்டி விட்டுப் போனான். ‘தாமரை என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட்’, என்று எல்லோரிடமும் பெருமையாகப் பேசினான். ஊருக்குள் தாமரைக்கு நல்ல பேரும், புகழும் பரவின. அவளுடைய படிப்புச் செலவை ஊர்ப் பெரிய மனிதர் ஒருத்தர் ஏற்றுக் கொண்டார்.

தாமரை, தனது மொபைலைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டாள். அதிலுள்ள காமெராவை வைத்துப் படமெடுக்கவும், உரையாடல்களைப் பதிவு செய்வதற்கும், வீடியோ எடுப்பதற்கும் பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள்.

மின்மினியைப் பார்க்க வேண்டும் என்று மனதில் ஆசை வந்தது தாமரைக்கு.

மலையடிவாரத்திற்குப் போய் யாருமே இல்லாத இடமாகப் பார்த்து நின்று கொண்டு மின்மினி தேவதையை மனதில் நினைத்தவுடன், மின்மினி தேவதை அவளெதிரே தோன்றினாள்.

“என்ன தாமரை, பெரிய ஆளாயிட்டே போல இருக்கே?”, என்று சொல்லி விட்டுச் சிரித்தாள்.

“என்ன மின்மினி, நீயே என்னை கேலி செய்யலாமா?”, என்று தாமரை சிணுங்கினாள்.

“இல்லை தாமரை, நெஜமாத் தான் சந்தோஷத்தோட சொல்லறேன். நான் என்ன தான் உனக்கு சக்திகள் கொடுத்தாலும் நீ அந்த சக்திகளைத் தேவையான சமயத்தில, அறிவு பூர்வமா யோசிச்சு, நல்லபடியா செயல்படுத்தின, இல்லையா?

சரியான ஆளுக்குத் தான் மந்திர சக்தி கொடுத்திருக்கேன்னு மனசுல திருப்தியா இருக்கு. இதே மாதிரி தொடர்ந்து கிட்டே இரு. எப்பயாவது ஏதாவது பெரிய கஷ்டத்தில மாட்டிக்கிட்டு எப்படி வெளியே வரதுன்னு தெரியாம தவிக்கும் போது என்னை மனசில நெனைச்சுக்கோ.

 நான் வந்து மத்தவங்க கண்ணுக்குத் தெரியாம உனக்கு உதவி செய்வேன். கவலையில்லாம நிம்மதியா வீட்டுக்குப் போ. பெஸ்ட் ஆஃப் லக்”, என்று சொல்லி விட்டு மின்மினி தேவதை மறைந்து போனாள். தாமரையும் மனநிறைவுடன் வீட்டுக்குத் திரும்பினாள்.

தாமரையும் அடுத்த சாகசத்துக்கான வாய்ப்பு வந்து கதவைத் தட்டியது. அவர்களுடைய ஊர், மலை அடிவாரத்தில் இருக்கும் ஊர். அவர்கள் ஊருக்கும், அடுத்த ஊருக்கும் நடுவில் இருந்த இடத்தில் ஒரு முதியோர் இல்லமும், அனாதை இல்லமும் அடுத்தடுத்த கட்டிடங்களில் செயல்பட்டு வந்தன‌.

கொஞ்சம் வசதியான முதியவர்கள் ஓய்வு பெற்றதும் தங்களுடைய சேமிப்புப் பணத்தையும், ஓய்வு பெற்ற சமயத்தில் கிடைத்த தொகையையும் வைத்து அந்த முதியோர் இல்லத்தை ஆரம்பித்தார்கள். அந்த ஊர் மலை அடிவாரத்தில் இருந்ததால் நல்ல குளுகுளுவென்ற காற்று எப்போதும் அங்கு உண்டு. தண்ணீர் வசதியும் தடையில்லாமல் உண்டு. சுற்றிலும் மருத்துவ வசதி உள்ள சிறு நகரங்கள் இருக்கின்றன. அந்த இடத்தையும் வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்நாட்டுத் தொழிலதிபர் ஒருத்தர், அவர்களுடைய நற்பணிக்காக இலவசமாகத் தந்திருந்தார்.

வசதி வாய்ப்பு நிறைய இருந்த அந்த முதியவர்களும், தங்களுக்குப் பொழுதைப் போக்குவதற்காகவும், பொது மக்களுக்கு சேவை செய்வதற்காகவும் அனாதைக் குழந்தைகளுக்கான இல்லம் ஒன்றையும் ஆரம்பித்திருந்தார்கள். எல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது.

ஒரு பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பார்வை அந்த இடத்தின் மீது விழுந்து விட்டது.

“அருமையான லொகேஷன், வசதிகள் எல்லாம் குறைச்சலே இல்லை. நல்ல க்ளைமேட். இந்த இடத்தை எப்படியாவது வாங்கி, நமது அடுத்த ஹௌஸிங் ப்ராஜெக்டை ஆரம்பிக்கலாம். நல்ல விலைக்குப் போகும். நிறைய இலாபம் பாக்கலாம். கொஞ்ச நாட்கள் கழிச்சு நாமே அங்க பக்கத்தில ஷாப்பிங் மால், மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டர், தீம் பார்க், ரெஸ்டாரெண்ட்னு ஆரம்பிச்சு அந்த இடத்தையே மொத்தமா பாப்புலர் ஆக்கிட்டோம்னா பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்”, என்று அந்த நிறுவனத்தின் அதிபரான செழியன் தனது மீட்டிங்கில் அறிவித்தார். தனது குழுவில் இருப்பவர்களிடம் அதற்கான ஏற்பாடுகளை ஆரம்பிக்கச் சொன்னார்.

“ஒரு பிராப்ளம் இருக்கு ஸார் இதில. இந்த இடத்தில ஒரு முதியோர் இல்லமும், அனாதை இல்லமும் இருக்கு. இவங்க அவ்வளவு ஈஸியாக் காலி செய்ய மாட்டாங்க. அங்கே இருக்கற லோக்கல் ஜனங்க எலலோருமே அவங்க ஸப்போர்ட்டுக்கு வந்து குவிஞ்சிடுவாங்க”, என்றார் மீட்டிங்கில் கலந்து கொண்ட‌ ஓர் ஊழியர்.

“ஒரு கஷ்டமும் இல்லை. அந்த ஊரில இருக்கற செல்வாக்குள்ள பெரிய‌ ஆள் யாருன்னு கண்டுபிடிங்க. அவரை நம்ம கையில போட்டுக்கலாம். அப்புறம் அந்த முதியோர் இல்லத்துக்கும், அனாதாஷ்ரமத்துக்கும், அந்த இடங்களுக்குப் பதிலா வேற எடம் தரோன்னு சொல்லி அவங்களை நம்ம வழிக்குக் கொண்டு வரலாம். பணத்தைக் கொஞ்சம் செலவழிச்சா எல்லாத்தையும் ஈஸியா முடிக்கலாம்”, என்று நம்பிக்கையுடன் செழியன் சொன்னார்.

“நீங்க நெனைக்கற மாதிரி அவ்வளவு ஈஸி இல்லை. அந்த முதியோர் இல்லத்தில இருக்கறவங்க பெரிய ஆளுங்க. பெரிய வழக்கறிஞர்கள், நீதிபதிகள், அரசாங்க அதிகாரிகள், காலேஜ் பிரின்ஸிபால்கள், டாக்டர்கள், ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், சயண்டிஸ்டுகள்னு பெரிய கூட்டமே அங்கே இருக்கு. துணிச்சலோடு எதுத்து நிப்பாங்க. சட்டம் தெரிஞ்சவங்க அவங்க”, என்று சொன்ன ஊழியரைச் சுட்டெரிப்பது போலப் பார்த்தார் செழியன்.

“நான் ஒரு காரியத்தில் இறங்கிட்டேன்னா பின் வாங்கவே மாட்டேன். முன் வச்ச காலைப் பின் வைக்க மாட்டேன். முதலில் பொறுமையாப் பேசிப் பாப்பேன். பேச்சில படியலைன்னா, வேற சாம, தான, பேத, தண்ட முறைகள் எதுக்குமே நான் தயங்க மாட்டேன். நமக்கு வேணுங்கற இடத்தை அங்கே இருக்கறவங்க, காலி பண்ண மறுத்துட்டாங்கன்னா அவங்களைக் காலி பண்ண வைக்க என் கிட்ட ஒரு பெரிய ரௌடி கும்பலே இருக்கு”, என்று செழியன் தீர்மானமாகச் சொல்லி விட, அந்த நிறுவனத்தின் ஊழியர்களும் புதிய புராஜெக்டிற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்து விட்டார்கள்.

ஒரு லாயர், தனது ஆட்களுடன் கிளம்பிப் போய் முதலில் முதியோர் இல்லத்தில் இருந்தவர்களிடம பேசினார். வெளிநாட்டில் வசிக்கும் அந்த இடத்தின் சொந்தக்காரர், தங்களுக்கு அந்த இடத்தை விற்று விட்டதாகச் சொல்லி, அவர்களை அந்த இடத்தைக் காலி செய்யச் சொன்னார்.

அவர்களால் நம்ப முடியவில்லை. அந்த இடத்தின் சொந்தக்காரருக்குத் தொலைபேசி அழைப்பு விடுத்துப் பேச முயற்சி செய்தும் பேச முடியவில்லை. அவர் உடல்நலக் கோளாறால் மருத்துவமனையில் இருப்பதாகவும், அவருடைய ஒரே வாரிசான மகன், அந்த இடத்தை விற்று விட்டதாகவும் தகவல் வந்தது.

இருந்தாலும் கோர்ட்டில் கேஸ் போட்டு, ஸ்டே வாங்கப் போவதாக முதியோர் இல்லத்தினர் சொல்லி விட்டார்கள்.

“கேஸ் போட்டா நிச்சயமா நாங்க தான் ஜெயிப்போம். இந்த இடத்தோட பத்திரம் எங்க பேரில இருக்கு.‌ கேஸ் போடறதால டயம் தான் நிறைய வேஸ்ட் ஆகும். பணமும் இரண்டு தரப்பிலிருந்தும் செலவாகும். அதுனால நாமே பேசி இதைத் தீர்த்துக்கலாம். நாங்க உங்களுக்கு இதுக்குப் பதிலா வேற எடம் தரோம்”, என்று சொல்லிப் புரிய வைக்க, வந்தவர்கள் முயற்சி செய்தார்கள். முதியவர்கள் அந்த முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை.

என்ன செய்வதென்று தெரியாமல் முதியவர்கள் குழம்பிப் போனார்கள்.

தாமரையின் சித்தி செண்பகம் வாரத்துக்கு ஒரு நாள் விடுமுறை தினத்தன்று அந்த முதியோர் இல்லத்திற்குப் போய் உதவி செய்வது வழக்கம்.

அங்கேயிருக்கும் வழக்கறிஞர், தாமரையின் அப்பா இறந்து போன சமயம் செண்பகத்திற்கு நிறைய உதவி செய்திருந்தார். அரசு தரப்பில் இருந்து அவர்கள் குடும்பத்திற்கு வரவேண்டிய நஷ்ட ஈட்டுத் (compensation) தொகையை வாங்கித் தந்ததோடு, அந்தக் குடும்பத்திற்கு நிறையப் பொருளாதார ரீதியிலான உதவிகள் செய்திருந்தார். அந்த நன்றிக்கடனுக்காக செண்பகம் அங்கு முடிந்த போதெல்லாம் போவாள்.

போகும் போது குழந்தைகள் மூன்று பேரையும் கூட்டிப் போவாள். தாமரை, தாய்க்கு முடிந்த அளவு வேலையில் உதவி செய்வாள். அப்புறம் அந்த முதியவர்களிடம் இருக்கும் புத்தகங்களில் தன்னால் படிக்க முடிந்த புத்தகங்களாகப் பார்த்து வாங்கிப் படிப்பாள். புரியாத கதைகளைப் பெரியவர்களே படித்து அவளுக்குச் சொல்லுவார்கள். தாமரையின் தம்பியும், தங்கையும் அனாதை இல்லத்துக் குழந்தைகளுடன் விளையாடிப் பொழுதைக் கழிப்பார்கள்.

ஸ்கூலில் ஒரு வாரம் தொடர்ந்து விடுமுறை வந்ததால், தாமரை குடும்பத்தோடு அங்கு வந்திருந்தாள். அவர்களுக்காக ஒரு தனியறை கொடுத்திருந்தார்கள். தாமரை ஒருநாள் அலுவலக அறைக்கு எதிரே உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த போது தான் செழியனின் ஆட்கள் வந்து முதியோர்களிடம் பேசினார்கள். வந்தவர்களுக்குத் தண்ணீர் கொடுக்க, தாமரை உள்ளே சென்றதால் அவளுடைய காதில் அவர்கள் பேசிய அனைத்து வார்த்தைகளும் விழுந்தன.

பேசி விட்டு வெளியே சென்றதும் செழியனிடம் மொபைலில் பேசி அவர்கள் செய்தி சொன்னதையும் தாமரை மனதில் குறித்துக் கொண்டாள். பேச்சு வார்த்தைக்கு வந்தவர்கள் திரும்பியபோது அவர்கள் வந்த காரின் அருகே இன்னொரு கார் நின்றிருந்தது. அதிலிருந்த முரட்டுத்தனமான சில அடியாட்கள் தங்களுடைய காரில் இருந்து இறங்கி அந்த இடத்தை நோட்டம் விட்டதையும் தாமரை கவனித்துக் கொண்டாள். தன்னுடைய மொபைலில் அந்த அடியாட்களை, தாமரை படம் பிடித்து வைத்துக் கொண்டாள்.

அவர்கள் போனதும் உள்ளே சென்று, தான் கேட்டதையும், பார்த்ததையும் முதியோர்களிடம் சொல்ல, நிர்வாகிகளில் ஒருத்தர்,

“வெல்டன் தாமரை. நீ ரொம்ப அலர்ட்டா இருக்கே. இந்தப் படங்களை என்னோட மொபைலுக்கு நான் மாத்திக்கறேன். சென்னையில் இருக்கும் என்னோட நண்பனுக்கு அனுப்பி இவங்களைப் பத்தி விசாரிக்கச் சொல்லறேன். நீ நெஜமாகவே தங்கப் பெண் தாமரை தான்”, என்று பாராட்டினார்.

அன்று இரவே தனது அடுத்த சாகசத்தை ஆரம்பிக்கத் தாமரைக்கு சந்தர்ப்பம் தானாகவே வந்து அமைந்தது.

தொடரும்…

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments