த.நடராஜன் சேலம் தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் தந்தை நெசவுத் தொழிலாளி. தாயார் சாலையோரச் சிற்றுண்டிக்கடை நடத்துகிறார். மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர், தம் அசாத்திய திறமையின் மூலம், இன்று உலகம் முழுதும் தெரிந்த கிரிக்கெட் பந்து வீச்சாளராகத் திகழ்கின்றார்.
ஐபிஎல் போட்டியில் தம் திறமையை வெளிப்படுத்திய இவருக்கு, இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. சில வீர்ர்களுக்குக் காயம் பட்டதால், ஆஸ்திரேலியாவில் நடந்த டி20, ஒரு நாள் போட்டி, மற்றும் டெஸ்ட் போட்டி ஆகியவற்றில் விளையாடினார். ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று வித கிரிக்கெட்டில் அறிமுகமான ஒரே வீர்ர் என்ற சாதனையைப் படைத்தார். 2020-21ல் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா கைப்பற்ற, இவரது திறமையான பந்து வீச்சு உதவியது.
இவர் தற்போது தமது சொந்த கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய கிரிக்கெட் மைதானத்தை அமைத்து வருகிறார். அதற்கு ‘நடராஜன் கிரிக்கெட் மைதானம்’ என்ற பெயர் சூட்டப்படும் என்று அறிவித்திருக்கிறார். “கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்காக நான் அறிமுகமானேன். இந்தாண்டு (டிசம்பர்) கிரிக்கெட் மைதானம் அமைக்கிறேன். கடவுளுக்கு நன்றி”, என்று கூறியிருக்கிறார்.
அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு மைதானத்தைச் சொந்த கிராமத்தில் அமைப்பதன் மூலம், கிராமத்துச் சிறுவர்களுக்குத் தம் கிரிக்கெட் கனவை நனவாக்க, ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.