18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கு எதிராக இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆண்களுக்கு இணையாகவும், துணையாகவும் களமிறங்கிய வீரப்பெண்மணி வேலு நாச்சியார். அவர் தமிழ் மக்களால் “வீரமங்கை” என்று அழைக்கப்படுகிறார். இவர் 1780-1790 காலகட்டத்தில் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராணியாக இருந்தார்.
வேலு நாச்சியார் இராமநாதபுரத்தில் அரச தம்பதிகளான மன்னர் செல்லமுத்து சேதுபதி மற்றும் சக்கந்தி முத்தாள் ஆகியோருக்கு 1730 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் நாள் பிறந்தார். ஆணுக்கு நிகராக ஆயுதப் பயிற்சி பெற்றார், ஒரு இளவரசன் போல வளர்க்கப்பட்டார். சிலம்பம், வளரி, குதிரையேற்றம், பல்வேறு போர் ஆயுதங்களைக் கையாளுதல், வில்வித்தை போன்ற தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்றார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பிரஞ்சு, ஆங்கிலம் மற்றும் உருது என சுமார் 10 மொழிகள் நன்கு அறிந்திருந்தார். அவர் நல்ல அறிவாளியாகவும் இருந்தார். பருவத்தில் அழகிற்கு அழகு சேர்த்தார்.
1746-ல் சிவகங்கை மன்னர் முத்துவடுக நாதர் வேலுநாச்சியாரை தனது மனைவியாக்கிக் கொண்டார். ஒரு முறை மன்னர் முத்துவடுக நாதர் காளையர் கோவிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த போது நவாப் படைகள் அந்த கோவிலைச் சுற்றி வளைத்து தாக்கின. அதில் அவர் வீர மரணம் அடைந்தார்.
அவரது கணவர் இறந்த பிறகு, ஆங்கிலேயர்கள் ஆற்காடு நவாபின் மகனுடன் சிவகங்கை மீது படையெடுத்தனர், எனவே அவர் தனது மகளுடன் தனது ராஜ்யத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வேலு நாச்சியாரும் வெள்ளச்சியும் திண்டுக்கல்லில் சிவகங்கை மருது சகோதரர்கள் மற்றும் சில நண்பர்களின் உதவியோடு வாழ்ந்து வந்தனர்.
வேலு நாச்சியார் 1780 இல் ஆங்கிலேயர்களைத் துணிச்சலுடன் தோற்கடித்தார். வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட முதல் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை அவர் தனது வளர்ப்பு மகள் தளபதி குயிலியுடன் உருவாக்கினார்.
வேலு நாச்சியார் அரசை மீண்டும் கைப்பற்றி, வெற்றி பெற்று சிவகங்கை அரசி ஆனார். தன் ஆட்சியில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் இறந்த தன் வளர்ப்பு மகளின் நினைவாக உடையாள் என்ற மகளிர் படையை உருவாக்கினார்.
வேலு நாச்சியாரின் மகள் வெள்ளச்சி, அவருக்குப் பிறகு அரியணையில் அமர்ந்து 1790 முதல் 1793 வரை ஆட்சி செய்தார்.
கௌரவங்கள்:
• சிவகங்கையில் வீரமங்கை வேலு நாச்சியார் நினைவிடத்தைத் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜூலை 18, 2014 அன்று திறந்து வைத்தார்.
• ராணியின் ஆறு அடி வெண்கலச் சிலையும் நினைவிடத்தில் நிறுவப்பட்டது.
• தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 3 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
• 31 டிசம்பர் 2008 அன்று, அவரது பெயரில் ஒரு நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
• பேராசிரியர் ஏ.எல்.ஐ. டோனி தாமஸ் (A.L.I.Ft. Tony Thomas), ஒரு தமிழ்-அமெரிக்க ஹிப்-ஹாப் கலைஞன், வேலு நாச்சியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட “எங்கள் ராணி” என்ற பாடலை 2016 இல் தனது தமிழ்மாடிக் (Tamilmatic) ஆல்பத்தின் ஒரு பகுதியாக வெளியிட்டார்.
• 21 ஆகஸ்ட் 2017 அன்று, சென்னையில் உள்ள நாரத கான சபையில் ராணி வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் பிரமாண்ட நாட்டிய நாடகம் நடத்தப்பட்டது. ராணியின் வாழ்க்கை வரலாற்றை ஏறக்குறைய பத்தாண்டுகள் ஆராய்ச்சி செய்த ஸ்ரீராம் ஷர்மா இந்த நாடகத்தை இயக்கினார்.
நமது அன்புக்குரிய “வீர மங்கை”, ராணி வேலு நாச்சியாரின் நூற்றாண்டு பிறந்த நாளைக் கொண்டாடி, இன்றைய உலகின் அச்சுறுத்தல்களை முறியடிக்க அவரது துணிச்சலை நம் பெண் குழந்தைகளுக்கு வழங்குவோம்.
நான் சென்னையைச் சேர்ந்த விஜி ராஜ், கணினி அறிவியலில் முதுகலைப் பட்டதாரி, ஐடியில் பணி, பிறகு என் 2 மகள்களுடன் பிஸியான ஹோம் மேக்கர், சுமார் 50 வகையான பூக்கள், காய்கறிகள் மற்றும் மிக முக்கியமாகத் தேவைப்படும் மருத்துவ மூலிகைகளுடன் கூடிய வீட்டுத்தோட்டம், ஃப்ரீலான்ஸ் பதிப்பாசிரியை, வலைப்பதிவு (Blog) மற்றும் இடுகை (Content) எழுத்தாளர், மற்றும் மொழிபெயர்ப்பாளர் (தமிழ் மற்றும் ஆங்கிலம்). பூஞ்சிட்டுக் குழுமத்தில் இணைவதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன்.