இதுவரை…
சென்னையில் நீலாங்கரைப் பகுதியில் வசிக்கும் யாஷினி எனும் சுட்டிப் பெண் தனது பெற்றோருடனும் டெல்லியிலிருந்து வந்திருந்த தனது உறவினர்களுடனும் மாமல்லபுரத்திற்குச் சென்று அங்கிருக்கும் சிற்பங்களைப் பற்றி அறிந்து கொள்கிறாள். அங்கிருக்கும் ஒற்றைக்கல் ரதங்களை, தற்போது காணச் சென்றிருக்கும் அவர்களோடு சேர்ந்து நாமும் பார்க்கலாமா?
வாங்க போகலாம் சுட்டிகளே!
இனி…
ஒற்றைக்கல் ரதங்கள் இருக்கும் மாமல்லபுரத்தின் பகுதிக்கு வந்து சேர்ந்துவிட்டோம். இனி ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். மலைகளை விட சிறியதாக இருப்பவற்றைக் குன்றுகள் என்கிறோம். அதனினும் சிறியதாக இருப்பவற்றை குறுங்குன்றுகள் என்று சொல்கிறோம். இவை மாமல்லபுரத்தில் ஏராளமாக இருக்கின்றன. இந்தக் குன்றுகளின் ஒற்றைக் கல்லினைச் செதுக்கி, ரதங்கள் போன்றச் சிற்பங்களை பல்லவர்கள் செதுக்கியிருக்கிறார்கள். இவ்வாறு செதுக்கப்பட்ட ஒன்பது ரதங்களில், ஒரே இடத்தில் அருகருகே இருக்கும் ஐந்து ரதங்களைப் பஞ்ச பாண்டவ ரதங்கள் என்கிறோம்.
தர்மராஜ ரதம்
பீம ரதம்
சகாதேவ ரதம்
அர்ஜுனன் ரதம்
திரௌபதி ரதம்
என்பது இந்த ரதங்களின் பெயர்களாக இருக்கின்றன. கணேச ரதம் என்ற ஒன்றும் இங்கு உள்ளது.இன்னும் சற்றுத் தொலைவில் மூன்று ரதங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு பிடாரி ரதங்களென்றும், ஒன்று வளையன்குட்டை ரதமென்றும் அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஒரே மாதிரி இல்லாமல் வெவ்வேறாக இருக்கும்படி செதுக்கப்பட்டிருக்கிறது. இவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாமா?
தர்மராஜ ரதம்:
மூன்று அடுக்குகளைக் கொண்ட சிவன் கோவிலாக இந்த ரதம் செதுக்கப்பட்டிருக்கிறது. புராணக் கதைகளில் வருகின்ற ஏராளமான பாத்திரங்களை சிற்பங்களாகச் செதுக்கியிருக்கிறார்கள். இதனுடைய கீழ்ப்பகுதி சதுர அமைப்பு கொண்டதாகவும், சிகரமும் அதனைத் தாங்குகின்ற கழுத்துப் பகுதியும் எண்கோண வடிவிலும் இருக்கின்றன.
பீம ரதம்:
தர்மராஜ ரதத்தின் அடுத்துள்ள மிகப் பெரிய கம்பீரமான உருவத்தைக் கொண்டது பீம ரதம். இந்தக் கோவில் இரண்டு தளங்களைக் கொண்டிருக்கிறதென்றாலும், மேலே செல்வதற்கு வழியில்லாமல் முற்று பெறாமலிருக்கிறது.
கீழ்தளத்தில் சிங்கங்கள் அமர்ந்திருப்பது போன்ற அடிபாகத்தினைக் கொண்ட நான்கு தூண்களையும், இரண்டு அரைத்தூண்களையும் கொண்டு, பின்புறத்தில் கருவறை அமைந்தபடி இந்தக் கோவில் இருக்கிறது.
அர்ஜுனன் ரதம்:
இது பார்ப்பதற்கு தர்மராஜ ரதம் போலவே இருந்தாலும் அதன் உருவத்தில் மிகவும் சிறியது. இரண்டு தளங்களைக் கொண்டிருக்கிறது. இதற்கும் மேல் தளத்திற்குச் செல்வதற்கு வழியில்லை. இதனது சிகரம் எண்பட்டை வடிவத்தில் இருக்கிறது. இந்த ரதமும், இதற்கு அடுத்து உள்ள திரௌபதி ரதமும் யானைகளால் தாங்கப்பட்ட ஒரே பீடத்தில் செதுக்கப்பட்டுள்ளன.
திரௌபதி ரதம்:
இங்குள்ள ரதங்களிலேயே மிகவும் சிறியதாக, குடிசை வடிவில் செதுக்கப்பட்டுள்ள கோவில் இது. கருவறையின் பின்புற சுவரில் திரௌபதியின் சிற்பமானது தாமரை மலர்மேல் நிற்பது போல அமைந்து, நான்கு கைகளைக் கொண்டிருக்கிறது.
சகதேவ ரதம்:
இந்தப் பாறை மற்ற பாறைகளிலிருந்து தனித்து இருந்திருக்க வேண்டும். இந்த ரதமானது, உருவத்தில் யானையின் பின்புறத்தை ஒத்திருக்கிறது. இந்தக் கோவிலின் அருகிலேயே மிகப் பெரிய யானை உருவம் ஒன்றும் செதுக்கப்பட்டுள்ளது. பிற கோவில்கள் போலவே இரண்டு அடுக்காக அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கோவிலின் மேல் தளத்திற்கும் செல்வதற்கு வழி ஏற்படுத்தப்படவில்லை.
கணேச ரதம்:
பசுமையான சூழலில் செதுக்கப்பட்டிருக்கின்ற முடிக்கப்பட்ட நிலையிலுள்ள இந்த அழகான ரதத்தில், பிற்காலத்தில் வைக்கப்பட்ட விநாயகரை தற்போதும் வழிபட்டு வருகிறார்கள். இரண்டு அடுக்காக அமைக்கப்பட்டிருக்கும் இந்த கோவிலும் மேல் தளத்திற்குச் செல்வதற்கு வழியற்று இருக்கிறது.
பிடாரி, வலையன்குட்டை
ரதங்கள்:
முடிக்கப்படாத நிலையிலிருக்கும் இந்த ரதங்கள் எந்த தெய்வங்களுக்காகக் கட்டப் பட்டவையென்பது இதுவரைத் தெரியவில்லை. முடிக்கப்படாத நிலையிலிருக்கும் இவற்றில் கல்வெட்டுகளுமில்லை. செதுக்கப்பட்டிருக்கும் இரண்டு விமானங்களும் வெவ்வேறு அமைப்புகளைக் கொண்டிருக்கிறது. பிடாரி ரதங்களிலிருந்து சிறிது தூரம் சென்றோமானால் வலையன்குட்டை எனும் நீரற்ற குட்டை ஒன்று உள்ளது. இதன் அருகே இந்த சிறியக் கோவில் இருப்பதால் இதற்கு வலையன் குட்டை ரதம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதுவரைப் பார்த்த ரதங்கள் யாவுமே முழுமையாகச் செதுக்கப் படவில்லை. ஆகம விதிகள் என்று சொல்லப்படுகின்ற கோவிலுக்கான விதிகளும் பின்பற்றப்படவில்லை. அவையெல்லாம் ஏற்படுத்தப் படுவதற்கு முன்பே இந்தக் கோவில்கள் கட்டப்பட்டிருக்கலாம்.
சில ரதங்கள் ஆரம்பிக்கப்பட்ட நிலையிலேயே நிறுத்தப்பட்டிருக்கின்றன. அவ்வாறான அடையாளங்களும் சில குன்றுகளில் காணப்படுகின்றன.
பிள்ளைகளே! இவற்றையெல்லாம் நாம் எதற்காக தெரிந்து கொள்கிறோமென்றால், மாமல்லபுரத்திலுள்ள குருங்குன்றுகளை கோவில்களாகவும் சிற்பங்களாகவும் செதுக்கிய பல்லவர்கள் தான் பிற்காலங்களில் தோன்றிய கோவில்களுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறார்கள். செங்கல், சுண்ணாம்பு, மரம் ஆகியவற்றைக் கொண்டு வழக்கமாகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த கோவில்களின் வடிவங்களை முன்மாதிரியாகக் கொண்டே இந்த கருங்கற்களைச் செதுக்கி கற்கோவில்களை எழுப்பியிருக்கிறார்கள். இவற்றைக் கொண்டே பிற்காலத்தில் கற்களாலான கட்டுமானக் கோவில்கள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். தற்காலக் கோவில் கட்டுமானத்திற்கு வழிகாட்டியாக இருந்த நமது முன்னோர்களின் கை வண்ணத்தில் உருவான அழியாதச் சிற்பங்களை நேரிலும் சென்று கண்டு வாருங்கள் குழந்தைகளே! இனி அங்கிருக்கும் அழகுமிகு திறந்தவெளி புடைப்புச் சிற்பங்களைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
காத்திருங்க!!