“கோடை விடுமுறையெல்லாம்  கொளுத்தும்  வெயிலோடு கூடிய சிறப்பு வகுப்புகளோடு சென்றிருக்கும். இதனோடு நாம் அவ்வப்போது மாமல்லபுரம் சிற்பங்களையும் கண்டு களித்து வருகிறோம். அப்படித்தானே?!”  என்று யாஷினியின் சித்தி அவளையும் விச்சுவையும் பார்த்து பேசியவாறே புன்னகைத்தாள்.

“ஒரு மாலையின் சிறுபொழுது மட்டும் போதாது இங்குள்ள அத்தனை சிற்பங்களையும் காண்பதற்கு. முழு நாளையும் எடுத்துக் கொண்டாலும் இதன் நுட்பங்களையெல்லாம் காண்பதற்கு அதுவும் போதாதுதான். கோடை வெயில் கொளுத்துகிறது. காண்பதற்கே இப்படி என்றால் செதுக்கிய சிற்பிகளின் நிலையை எண்ணிப் பாருங்களேன். கோபுரங்களை செதுக்கும் போதெல்லாம் சாய்வாக சரிந்தும், தலைகீழாக தொங்கியும், வெவ்வேறு நிலைகளில் நின்றும் அமர்ந்தும் அவர்கள் செதுக்கி இருக்கக்கூடும். இதில் சிறு தவறு நேர்ந்துவிட்டால் மீண்டும் உளியைக் கொண்டு சரி செய்ய முடியாது. சிற்பிகள் சிற்பங்களை கற்களில் செதுக்க கற்றுக்கொண்ட ஆரம்பகால சிலைகள் இவை. உற்று நோக்கினால் தெரிகின்ற தவறுகள் இவற்றில் இருந்தாலும், திறமைகளைக் கொண்டு நுட்பமாக  வடிக்கப்பட்ட சிலைகள் அத்தனையும். இவற்றையெல்லாம் ஒரு சேரக் காண்பதற்கே நமது கால்கள் கடுக்கிறதெனில் அவர்களது உழைப்பையெல்லாம் சற்று எண்ணிப் பாருங்களேன்! காக்க வேண்டிய சிற்பங்கள் இவை. இந்தக் கலைகளைக் கற்று கடத்த வேண்டிய கடமையும் இருக்கிறது. அயல்நாட்டினரில் ஆண்டுக்கணக்காக மாமல்லபுரத்தில் தங்கியிருந்து இக்கலையை கற்றுக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். இதுவரை கண்டு வியந்த சிலைகளுக்குப் பிறகு, யானையின் சிற்ப தொகுதிகளையும் காண இருக்கிறோம் அல்லவா? வாங்க பார்க்கலாம்.” என்றார் தாத்தா.

oor 1

“பெருந்தவ சிற்பத் தொகுதியில் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் படி கம்பீரமாக நிற்கும் உருவம் எதுவென்றால் யானை உருவங்கள் தான். காடுகளில் யானைகள் எப்பொழுதும் கூட்டமாக வாழ்பவை. அவற்றிற்கு தலைமை தாங்கும் கொம்பன் யானை என்ற  ஒன்று ஒவ்வொரு கூட்டங்களுக்கும் இருக்கும். அதனை வெளிப்படுத்தும் விதமாக, இங்குள்ள சிற்ப யானைகளின் தொகுதியிலும் 15 அடி உயரம் கொண்ட பெரிய யானையொன்று முன்புறமாக ராஜ கம்பீரத்துடன் நிற்கிறது. அதற்கு பின்புறமாக மற்றுமொரு பெரிய யானை நின்று கொண்டிருக்கிறது. அதனைச்சுற்றி அருகருகே எட்டு யானைக் கன்றுகள் இருக்கின்றன. கன்றுகள் என்றால் அறிவீர்களா பிள்ளைகளே?! மாடுகள் மற்றும் யானைகள் ஈனும் குட்டிகளை கன்றுகள் என்று தான் அழைப்பார்கள்.”

“நமக்கு யானைகள் என்றால் கொள்ளை பிரியம் தானே?! பல்லவர்களுக்கும் அப்படி இருந்திருக்க வேண்டும். அதனால் தான் அவற்றை சிற்பங்களாக வடித்திருக்கிறார்கள். பெருந்தவ சிற்பத் தொகுதியில் மட்டுமல்லாமல் திருமூர்த்தி மண்டபத்திற்கு பின்பகுதியில் ஒரு திறந்தவெளி பாறைப் புடைப்புச் சிற்பம் உள்ளது. மிருகங்களின் உருவங்களை அதிகமாக இங்கு சிற்பமாக செதுக்கி இருக்கிறார்கள். இவற்றில் யானைக் கூட்டங்கள் நம்மை மிகவும் கவருகின்றன. கம்பீரமாக நிற்கும் ஒரு ஆண் யானையின் காலருகில் இரண்டு குட்டி யானைகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் அருகே தாய் யானையின் தலை மட்டும் தெரியும்படி செதுக்கப்பட்டிருக்கிறது. பெருந்தவ சிற்பத் தொகுதியிலுள்ள யானை சிலைகள் போலவே இந்த சிலைகளும் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.”

oor 2

“ஆண் யானையின் தலைக்கு அருகில் அழகான ஒரு மயிலும் அதற்குச் சற்று பின்புறத்தில் ஒரு குரங்கும் அமர்ந்திருக்கும் படி சிற்பங்களை செதுக்கியிருக்கிறார்கள். காண்பதற்கு கொள்ளை அழகு அத்தனையும். இங்குள்ள சிற்பங்கள் அத்தனையும் நமது பண்பாட்டினையும் கலையையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன.”

“ காலங்களால் அழியாத கற்சிலைகளாக இருக்கின்ற இவை அத்தனையும், அவை உருவாக்கப்பட்ட காலங்களில் வண்ணங்கள் பூசப்பட்டு இன்னும் அழகாக மிளிர்ந்து கொண்டிருந்தவை. இவற்றைக் குறித்து எந்த இலக்கியங்களிலும் குறிப்பிடப்படாதது ஏனென்று தெரியவில்லை. அக்காலங்களில் கருவறைகளில் சிலைகளைக் கொண்டு இங்கு பூஜைகள் நடந்திருக்கலாம். அவையெல்லாம் அக்காலங்களுக்கு ஏற்ப மரத்தாலான சிலைகளாக இருந்திருக்கலாம். நாளடைவில் அவை அழிந்து, தற்போது சிலைகள் இல்லாத கருவறைகளும்  இங்கு இருக்கின்றன.”

“ ஆங்கிலேயர்களால் விலைக்கு வாங்கப்பட்டு எடுத்துச் சென்ற சிலைகளும் உண்டு. பெயர்த்து எடுக்க முடியாத சிற்பங்கள் இங்கு எஞ்சியிருக்கின்றன. இவ்விடம் உலக அளவில் கவனிக்கபட்டதும் ஆங்கிலேயர்களால் தான். அதன் பிறகே நமது கலையை நாம் பெருமிதமாக எண்ணினோம். தற்போது மாமல்லபுரச் சிற்பங்களை சுற்றிப் பார்ப்பவர்களை நம்பி சிறுசிறு கடைகளும் இங்கு இருக்கின்றன. கற்களால் செதுக்கப்பட்ட சிறுசிறு வடிவமைப்புகளையும் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். எவ்வளவு பெரிய சிலைகள் வேண்டுமானாலும் வாங்கிச் செல்லலாம். அந்த காலத்திலிருந்து தற்போது வரை உளியின் சத்தம் நிற்காமல் இங்கு கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. கடற்கரையோரம் அமைந்திருக்கும் இந்த சிற்பங்களின் காதுகளில் அலைகளின் ஓசையும் நிற்காமல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. இங்கு சுற்றுலாவாக வரும் மக்களும் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களும்  மட்டுமே மாறிக்கொண்டே இருக்கிறார்கள். பயணங்கள் முடிவதில்லை பிள்ளைகளே…”

            என்று கூறிய முடித்த தாத்தாவின் வார்த்தைகள் அனைவரது மனதிலும் சூழ்ந்து கொண்டது. அதேநேரத்தில் மாலை நேரமும் மங்கி சூரியனும் விடைபெற்றுப் போனதில் இருள் கவிழ்ந்த இரவு அனைவருக்கும் விடை கொடுத்தது. சுற்றுலாவாக செல்ல விரும்பிய பிள்ளைகளுக்கு வரலாற்றின் பாதைகளில் பயணம் செய்து நமது முன்னோர்களைக் கண்டு வந்த கற்பனையில் யாஷினியும், விச்சுவும், சித்தார்த்தையும் துருவையும் பார்த்து கையசைத்தார்கள். தாத்தாவிற்கு நன்றி கூறி, விடைபெற்றுக் கொண்டு அவரவரது கார் நின்று கொண்டிருக்கும் இடத்தை நோக்கி, தாங்கள் இதுவரை கண்ட இனிய நினைவுகளையும் சுமந்து கொண்டு நடந்தார்கள். ஷங்கரும் சுகந்தியும் மற்றும் விச்சுவின் பெற்றோரும் தாத்தாவைப் பார்த்து, தங்களது இல்லங்களுக்கு வருவதற்கு அழைப்பினைக் கொடுத்துவிட்டு, கையெடுத்து வணங்கி விடை பெற்றார்கள்.

முற்றும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments