இந்தியாவின் முதல் பெண் கடல் மாலுமி என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கும் ரேஷ்மா நிலோஃபர், சென்னையில் பிறந்து வளர்ந்தவர். பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ராஞ்சியில் கடல்சார் தொழில்நுட்பம் படித்து, பி.ஈ பட்டம் பெற்றிருக்கிறார்.
“ஒரு தமிழ்ப் பெண்ணாக என்னை அடையாளப்படுத்திக் கொள்வதில், பெருமை அடைகிறேன்” என்று பேட்டியொன்றில் இவர் கூறியிருக்கிறார். முதல் பெண் மாலுமி மட்டுமின்றி, இந்தியாவின் ஒரே பெண் மாலுமியும் இவரே..
மாலுமி ஆவதற்காக ஆறு ஆண்டுகள் பயிற்சி பெற்ற இவர், தற்போது கொல்கத்தா ஹூக்ளி துறைமுகத்தில் பைலட்டாகப் பணியாற்றி வருகின்றார். விமானத்தைச் செலுத்தும் பைலட் போல, கப்பலைச் செலுத்தும் பைலட்டின் பணியும் மிகவும் முக்கியமானது.
கப்பலுக்குத் தலைவரான கேப்டனுக்குக் கடல் சார்ந்த அறிவுரைகளை வழங்குவது கடல் பைலட்டின் முக்கிய வேலை. கேப்டனுக்கு துறைமுகத்தைப் பற்றி முழு விபரமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை; ஆனால் கடல் பைலட்டுக்குத் துறைமுகம் பற்றிய முழு விபரங்களும் தெரிந்திருக்க வேண்டியது, மிகவும் அவசியம்.
இவர் கடல் மாலுமியாக மட்டுமின்றி, நதிகளில் கப்பலை வழிநடத்தும் முதல் நதி மாலுமியாகவும் பணிபுரிகின்றார். இவர் பணி புரியும் ஹூக்ளி நதியில் அமைந்துள்ள கல்கத்தா துறைமுகப்பகுதி, கப்பல் செல்லக் கூடிய உலகின் மிக ஆபத்தான நதி வழிப் பாதையில் ஒன்றாகக் கருதப் படுகின்றது.
கடலில் கப்பலைச் செலுத்துவதை விட, நதிகளில் செலுத்துவது மிகவும் ஆபத்தானது; நதியில் அதிக ஆழம் இல்லாவிடினும், அதன் அலைகள் மிகவும் வேகமானவை. எனவே கடல் மாலுமிக்கு ஆறு மாத காலப் பயிற்சி வேண்டும். ஆனால் நதி மாலுமி ஆவதற்கு, இரண்டு ஆண்டு பயிற்சி தேவை.
கப்பலில் ஏற கயிற்றால் ஆன ஏணி இருக்கும். நிலையாக ஒரே இடத்தில் இல்லாமல் ஆடிக்கொண்டே இருக்கும் அந்த ஏணியைப் பிடித்து ஏறுவதே பெண்களுக்குச் சவாலான பணி தான் என்று சொல்லும் ரேஷ்மா, சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு வானம் கூட எல்லை இல்லை என்கிறார்.
சாதனை பெண்களுக்கு வழங்கப்படும் ‘நாரி சக்தி புரஸ்கார் விருது’ 2019 ஆம் ஆண்டு இவருக்குக் கிடைத்தது.
பெயர் ஞா.கலையரசி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு. புதுவையில் வாசம். ஊஞ்சல் unjal.blogspot.com என் வலைப்பூ. புதிய வேர்கள் எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளேன்.