அத்தியாயம் 6

இரவு நேரத்தில் எல்லோரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், வெளியே ஏதோ சத்தம் கேட்கச் சட்டென்று கண் விழித்தாள் தாமரை.

மெதுவாக நடந்து வந்து வாசல் கதவருகில் ஒளிந்து நின்று கொண்டு நடப்பதை வேடிக்கை பார்த்தாள் தாமரை.

காலையில் பார்த்த இன்னோவா கார் எதிரே சற்றுத் தொலைவில் நின்று கொண்டிருந்தது. அந்த முரடர்கள் ஐந்தாறு பேர்கள் ஒன்றாக நின்று கொண்டு ஏதோ தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இரண்டு பேர் காரிலிருந்து ஒரு பெரிய மூட்டையை இறக்க, அதிலிருந்து பாம்புகளை காம்பவுண்டுக்குள் அவிழ்த்து விட்டார்கள். உடனே தாமரை நிலைமையைப் புரிந்து கொண்டு கோல்டன் தமிழச்சியாக மாறினாள். பறந்து வந்து, நெளிந்து கொண்டிருந்த பாம்புகளை ஒவ்வொன்றாகக் கையால் பிடித்து, அவர்கள் மேலேயே தூக்கி எறிந்தாள்.

பயந்தடித்துக் கொண்டு அவர்கள் பின்வாங்கினார்கள். பொன்னிறத்தில் தேவதை போல மின்னிய அந்தப் பறக்கும் சிறுமியைப் பார்த்து வாயடைத்துப் போய் நின்றார்கள்.

அவளைத் தாக்க அவர்கள் எடுத்த முயற்சிகள் எதுவுமே பலனளிக்கவில்லை.

அவளை அடிக்க எறிந்த கம்புகள் உடைந்து போயின. துப்பாக்கியால் சுட முடியவில்லை. கத்தியுடன் ஒருத்தன் அவள் மீது பாயக் கத்தியின் முனை வளைந்து போனது. ஒரு வழியாக அவர்கள் பின்வாங்கிச் சென்றார்கள்.

எதிரே இருந்த ஒரு மரத்தின் கிளைகளின் ஊடே அவள் ஒளிந்து கொண்டாள். அவள் எதிர்பார்த்தபடி சிறிது நேரத்தில் திரும்பி வந்தார்கள். இந்த முறை பெரிய பெரிய கேன்களில் கெரசினோ இல்லை பெட்ரோலோ ஏதோ எரிபொருளை எடுத்துக் கொண்டு வந்திருந்தார்கள்.

கேன்களில் இருந்த எரிபொருளை அந்தக் கட்டிடத்தைச் சுற்றி ஊற்றி, அந்தக் கட்டிடத்திற்குத் தீ வைக்கும் முயற்சியில் இறங்கினார்கள். மரத்தின் மேலிருந்து பறந்து வந்த கோல்டன் தமிழச்சி அவர்கள் கைகளில் இருந்த கேன்களைப் பிடுங்கி அவர்களுடைய காரின் மீதே எறிந்தாள். அவளுடைய மின்னல் வேகத் தாக்குதல்களுக்கு முரடர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவர்களிடம் இருந்த தீப்பெட்டியைப் பிடுங்கி, அந்த காரின் மீதே தீக்குச்சியைப் பற்ற வைத்து கோல்டன் தமிழச்சி எறிய, அந்த இன்னோவா கார் ஜகஜ்ஜோதியாகக் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

அதற்குள் தூங்கிக் கொண்டிருந்த முதியவர்கள் எழுந்து வந்து பார்க்கும் போது, எரிந்து கொண்டிருந்த காரையும் அதன் கீழே நெளிந்து கொண்டிருந்த பாம்புகளையும் பார்த்தார்கள்.

“எல்லாம் நம்மை பயமுறுத்துவதற்காக அந்த பில்டரின் ஆட்கள் செய்யும்

வேலையாகத் தான் இருக்கும். நாளை காலையில் போலீஸில் கம்ப்ளைன்ட் கொடுத்து நமக்குப் பாதுகாப்பு வாங்கிக் கொள்ளலாம். கோர்ட் கேஸ் போடுவதற்கு இந்த இடத்தின் டாக்குமெண்டைப் பார்க்க முடிந்தால் நல்லது. வெளிநாட்டில் இருக்கும் ஓனரிடம் இருந்து விலைக்கு வாங்கி விட்டதாக அந்தச் செழியன் ஆட்கள் சொல்லறாங்களே? அந்த ஸ்டேட்மெண்ட் உண்மையா இல்லையாங்கறது அதை வாங்கி ஒருமுறை பாத்தாத் தான் தெரியும். ஆனா அதை எப்படி அவன் கிட்ட இருந்து வாங்கறதுன்னு தான் தெரியலை. அவனாவும் நமக்குக் காமிக்க மாட்டான்”, என்று கவலையுடன் பேசிக் கொண்டார்கள்.

ஒளிந்து நின்று கொண்டு அவர்கள் பேசியதைக் கேட்ட கோல்டன் தமிழச்சி, மெதுவாக அவர்களுக்குத் தெரியாமல் நகர்ந்து அந்த அடியாட்கள் சென்ற திசையில் பறந்து போனாள்.

அருகிலிருந்த நகரத்தின் ஓர் உயர்தர ஹோட்டல் அறையில் செழியன், அவருடைய ஆட்களும் தங்கியிருந்தார்கள். எப்படியாவது அந்த இடத்தைக் கைப்பற்றி, வேலையை உடனடியாக ஆரம்பிக்கும் வெறியுடன் செழியன் வந்திருந்தார்.

அந்த ஹோட்டல் செழியனுக்குச் சொந்தமான ஹோட்டல் என்பதால், அந்த சமயத்தில் வெளியாட்கள் யாரையும் அங்கு தங்க அனுமதிக்கவில்லை. முழுக்க முழுக்கச் செழியனும் அவருடைய ஆட்கள் தான் அங்கு அந்தச் சமயத்தில் தங்கியிருந்தார்கள்.

தோட்டத்தில் பொறுமையில்லாமல் உலாத்திக் கொண்டிருந்த செழியன் முன்னால் போய் அந்த அடியாட்கள் நடுங்கியபடி நின்றார்கள்.

“என்ன செஞ்சுட்டு வந்திருக்கீங்க?  போன காரியத்தை முடிச்சீங்களா இல்லையா? ஏதோ நடந்தே வந்த மாதிரி வேர்க்க விறுவிறுக்க இப்படி நிக்கறீங்களே?” என்று செழியன் கேட்க,

“ஆமாம் பாஸ். கரெக்டா தான் சொல்லறீங்க நீங்க. நாங்க நடந்து தான் வந்தோம்”, என்றார்கள் ஒருமித்த குரலில்.

“என்ன பதில் சொல்றீங்க முட்டாப் பசங்களா? கார் என்ன ஆச்சு?”, என்றதும்,

“கார் எரிஞ்சு போச்சு”, என்று அவர்கள் தலையைச் சொறிந்தார்கள்.

“என்னடா விட்டா உளறிக்கிட்டே போறீங்க? என்ன ஆச்சு உங்களுக்கு? பைத்தியம் பிடிச்சிருச்சா?”, என்று கேட்டார் செழியன்.

“இல்லை பாஸ். தங்கம் போல ஜொலிக்கற உடலோட ஒரு பொண்ணு பறந்து வந்து எங்களோட சண்டை போட்டுச்சு. அந்தப் பொண்ணோட மின்னல் வேகத்தில் தாக்குதலுக்கு எங்களால ஈடு கொடுக்க முடியலை. அவ தான் காரையும் எரிச்சுட்டா”, என்று பயத்துடன் சொன்னார்கள். அவர்கள் சொன்னதைக் கேட்டுச் செழியன் சிரிக்க ஆரம்பித்து விட்டார்.

“என்ன தண்ணியடிச்சுட்டு வேலைக்குப் போனீங்களா என்ன? தங்க நிறத்தில் பெண்ணாம், பறந்து வந்தாளாம், மின்னல் மாதிரித் தாக்கினாளாம், காரை எரிச்சாளாம், நீங்க சொல்லற கதையை நான் நம்பணுமா? என்னை ஏமாளின்னு நெனைச்சீங்களா நீங்க?”, என்று கோபத்துடன் கொதிக்க, அவர்கள் தலைகுனிந்தபடி நின்றார்கள்.

“சரி, எல்லாரும் மொட்டை மாடிக்கு வாங்க. நான் அந்த டாக்குமெண்டை எடுத்துட்டு வரேன். அதைப் பத்தி இன்னும் சில விஷயங்கள் பேசி முடிவு செய்யணும்”, என்று சொல்லி விட்டுப் போனார். அந்த அடியாட்களும் ஹோட்டலின் மொட்டை மாடிக்குப் போய் அங்கே போடப்பட்டிருந்த ஒரு பெரிய டேபிளைச் சுற்றி உட்கார்ந்தார்கள்.

அந்த டாக்குமெண்ட் இருந்த ஃபைலில் அந்தக் கட்டிடத்தின் வரைபடம் இருந்தது. அதை வைத்துப் பார்த்துக் கட்டிடத்தைத் தகர்ப்பதற்கு எங்கெல்லாம் வெடிகுண்டுகள் அதாவது பாம்கள்(bomb) வைக்கலாம் என்று திட்டம் தீட்டுவதற்காகத் தான் அங்கே அவர்கள் கூடியிருந்தார்கள்.

அதற்குள் பறந்து மொட்டை மாடிக்கு வந்த கோல்டன் தமிழச்சியைப் பார்த்து எல்லோரும் அதிர்ச்சி அடைந்தார்கள். அவளை ஏற்கனவே பார்த்திருந்த அந்த அடியாட்கள் கத்தத் தொடங்கினார்கள்.

Snakes
படம்: அப்புசிவா

“இவ தான், இவளே தான்.இவளைப் பத்தித் தான் நாங்க சொன்னோம். நீங்க எங்களோட பேச்சை நம்பலையே? இவ தான் எங்களோட மின்னல் வேகத்தில சண்டை போட்ட பொண்ணு”, என்று பயந்து போய்க் கத்த, செழியன் அவளைச் சுடத் தனது தற்காப்பு ஆயுதமான ரிவால்வரை எடுத்து அவளை நோக்கிக் குறி வைத்தார்.

“துப்பாக்கியால அவளைச் சுட்டுப் பிரயோஜனமே இல்லை. குண்டு அவ உடம்பில பாயாது. தெறிச்சு எங்கயோ போயிடும். கத்தியும் ஒடஞ்சிடும். எந்த ஆயுதத்தாலயும் அவளைத் தாக்க முடியாது”, என்று அடியாட்கள் சொன்னதும், செழியன் யோசித்துக் கொண்டே சுற்று முற்றும் பார்த்தார். மொட்டை மாடியின் ஓரத்தில் பெரிய வலை ஒன்று கிடந்தது. மீன் பிடிக்க உபயோகப் படுத்தும் நைலான் கயிறால் ஆன உறுதியான வலை. அதைத் தூக்கிக் கோல்டன் தமிழச்சியை நோக்கி வீச, அவளும் வலையில் மாட்டிக் கொண்டாள்.

நகர முடியாதபடி அவளைச் சுற்றி அந்த வலையைக் கட்டி அவளைச் செயலிழக்கச் செய்தார்கள். மீனைப் போலத் தமிழச்சி வலையில் மாட்டிக் கொண்டு தவித்தாள். உடனே பயந்து விடாமல், மின்மினி தேவதையை மனதில் எண்ணி, ” மின்மினி, என்னை இந்த ஆபத்தில் இருந்து காப்பாத்து. எப்படியாவது அந்த டாக்குமெண்டை நான் எடுக்கணும்”, என்று மின்மினி தேவதையிடம் வேண்டினாள்.

“உன்னோட உள்ளங்கையை அமுக்கு.‌ உன் விரல் நகங்கள் கத்திகளாக மாறும். அந்தக் கத்திகளை வச்சு வலையை அறுத்து எறி”, என்று மின்மினியின் குரல் கோல்டன் தமிழச்சியின் காதில் விழ, அவளும் அதையே செய்தாள்.

ஒரு நிமிடத்தில் தன்னுடைய வலையை அறுத்தெறிந்து விடுதலையாகித் தங்கள் முன்னால் விஸ்வரூபமெடுத்து நின்ற கோல்டன் தமிழச்சியை, அங்கே இருந்த செழியனின் ஆட்கள் நம்ப முடியாமல் பார்த்தார்கள்.

செழினின் கைகளில் இருந்த டாக்குமெண்ட் ஃபைலைப் பிடுங்கி ஓரமாக வைத்து விட்டு, அங்கிருந்த அனைவரையும் ஒன்றாக வலையை வீசி அதில் மாட்ட வைத்து அவர்களைச் சுற்றி நன்றாகக் கட்டினாள். கீழே கிடந்த ஒரு வலுவான கெட்டிக் கயிற்றால் அந்த வலையை இறுக்கக் கட்டி விட்டு, ஃபைலுடன் பறந்து சென்று முதியோர் இல்லத்தின் அலுவலக அறை டேபிளில் அந்த ஃபைலை வைத்து விட்டுத் தனது அறைக்குச் சென்று படுத்துக் கொண்டாள்.

காலையில் எழுந்து வந்த முதியோர்,அந்த ஃபைலைப் பார்த்து ஆச்சர்யம் அடைந்தார்கள். ஃபைலில் இருந்த விஷயங்களைக் குறித்துக் கொண்டார்கள். புகைப்படங்களாக அந்த டாக்குமெண்டைத் தங்கள் ஃபோனில் சேமித்து வைத்துக் கொண்டார்கள்.

அங்கிருந்த ஓய்வு பெற்ற நீதிபதி ஒருத்தர், சென்னையில் இருந்த தனது நண்பரான போலீஸ் கமிஷனருக்கு ஃபோன் செய்து, நடந்த விஷயங்களைச் சொன்னதோடு, அவர்களைத் தாக்க வந்த அடியாட்களின் ஃபோட்டோக்களை அனுப்பினார். வழக்கறிஞர், தனக்குத் தெரிந்தவர்களுக்கு டாக்குமெண்ட் பற்றிய விவரங்களை அனுப்பினார்.

செழியனும், அவருடைய ஆட்களும் வலையில் இருந்து விடுபட்டு ஒருவழியாக வெளியே வந்து, முதியோர் இல்லத்திற்கு டாக்குமெண்டிற்காக வருவதற்குள் நிறைய நேரம் ஆகி விட்டது.

அங்கே முதியோர் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கிடைத்து விட்டது. அவர்களுடைய டாக்குமெண்ட் பேப்பர்கள் திரும்ப அவர்களுக்குக் கிடைத்தாலும், அது போலி என்று நிரூபிக்கப் பட்டு விட்டது.

அதற்குள் வெளிநாட்டில் இருந்து அந்த ஓனரின் மகன், அவர்களை ஃபோனில் அழைத்தார்.

“அப்பா உடம்பு சரியாகி ஹாஸ்பிடலில் இருந்து வீட்டுக்கு வந்துட்டாரு. எங்களை பிளாக்மெயில் செஞ்சு பயமுறுத்தி அந்தச் செழியனோட ஆளுங்க உங்க யார் கிட்டயும் பேச விடாமத் தடுத்தாங்க. நாங்க அந்த இடத்தை அவருக்கு வித்துட்டதா அவர் சொல்லறது முழுப் பொய். அந்த இடம் முழுக்க முழுக்க உங்க முதியோர் இல்லத்தைச் சேர்ந்தது தான். அடுத்த தடவை இந்தியா வரும்போது பத்திரம் அதுக்கேத்த மாதிரி பதிஞ்சுடலாம். அப்பாவின் விருப்பம் அது தான். நாங்களும் பில்டர் செழியன் மேலே கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறோம்”, என்று சொல்லி விட்டார். பிரச்சினை ஒருவழியாகத் தீர்ந்ததென்று எல்லோரும் ஆனந்தத்துடன் குதித்தார்கள்.

அங்கே இருந்தவர்களுக்கு கோல்டன் தமிழச்சியின் சாகசம் பற்றித் தெரியாது. அவளை அவர்கள் பார்க்கவில்லை. அவளைப் பார்த்த செழியனும் அவருடைய வெளியாட்களும் வெளியே சொல்லவில்லை.

செழியனின் மீது கேஸ் போடப்பட்டு நடந்து வருகிறது. முதியோர் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்திய அடியாட்கள் தாமரை எடுத்த ஃபோட்டோக்களால் அடையாளம் கண்டுபிடிக்கப் பட்டுக் கைது செய்யப்பட்டார்கள். அவர்களில் ஒருத்தன் மட்டும் போலீஸிடம் விசாரணையில், “உடம்பெல்லாம் தங்கமா மின்னுன ஒரு பொண்ணு பறந்து வந்து எங்களைத் தாக்கினா”, என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்.

அவனுக்குத் தலையில் அடிபட்டு மூளை குழம்பி விட்டதாக நினைத்து யாரும் அவன் சொன்னதை நம்பவில்லை. உண்மை தெரிந்த மற்றவர்கள் வாயே திறக்கவில்லை.

தாமரை எடுத்த ஃபோட்டோக்கள் குற்றவாளிகளை அடையாளம் காட்ட உதவியதால், முதியோர் இல்லத்து நிர்வாகிகள் அவளைப் பாராட்டி நன்றி கூறினார்கள்.

“நீ மேற்படிப்பு படிக்கறதுக்கு நாங்க எல்லாரும் சேந்து உதவி செய்யறோம். நீ என்னவாகணும்னு ஆசைப் படறே?”, என்று அவர்கள் கேட்க,

“நான் பெரிய போலீஸ் அதிகாரியாகி, நாட்டில் நடக்கற குற்றங்களைத் தடுக்கணும். குற்றவாளிகளைப் பிடிச்சு அவங்களைச் சட்டத்துக்கு முன்னால நிறுத்தணும்”, என்று தாமரை சொன்னாள். அவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து கைதட்டி அவளைப் பாராட்டினார்கள்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகும் கோல்டன் தமிழச்சியின் சாகசங்கள் தொடர்ந்தன.

மலை மேல் இருந்த காட்டில் மரங்களை அனுமதியில்லாமல் வெட்டி வனத்தை அழிப்பவர்கள், ஆற்று மணலைத் திருடி விற்பவர்கள், ஊரில் இருந்த வங்கியில் கொள்ளை அடித்தவர்கள், கோயில் சிலையைத் திருட வந்தவர்கள், மலைக்கு மேல் கள்ளச் சாராயம் காய்ச்சியவர்கள்,

ஊரில் கெமிக்கல் ஃபேக்டரி ஆரம்பித்துக் கழிவுநீரை ஆற்றுத்தண்ணீரில் விட்டு மாசு படுத்தத் துணிந்தவர்கள் போன்ற பல்வேறு சமூக விரோதிகளைத் தடுத்து நிறுத்தி அவர்களின் அக்கிரமங்களை நடக்க விடாமல் செய்தாள்.

கோல்டன் தமிழச்சி பற்றிய கதைகளும் பாடல்களும் அந்தப் பகுதியில் நிறைய தலையெடுத்தன.

வாழ்க தமிழச்சியின் வீரம்!

வளர்க கோல்டன் தமிழச்சியின் புகழ்!

நிறைவு.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments