வணக்கம் பூஞ்சிட்டுகளே!
குழந்தைகள் அனைவரையும் நம்ம கதை கதையாம் காரணமாம் பகுதிக்கு வரவேற்கிறோம்.
ஒவ்வொரு மாதமும் நம்ம பகுதியில நம் தமிழகத்தின் பல்வேறு ஊர்களோடு பேருக்கு பின்னால இருக்கிற காரணத்தையும் அதனோடு ஒட்டியிருக்கும் அழகான கதையையும் நாம தெரிஞ்சிக்கிட்டு வரோம். அந்த வகையில் இந்த மாதம் நாம கதை கேக்க போற ஊர், திருப்பூர்.
திருப்பூர் என்ற பெயர் சொன்ன உடனே இரண்டு விஷயங்கள் நமக்கு ஞாபகம் வரும்.
ஒன்று திருப்பூர் கொடி காத்த குமரன்
மற்றொன்று திருப்பூரின் உலகப்புகழ் பெற்ற ஆடை உற்பத்தி திறன்.
திருப்பூரின் இந்த இரண்டு சிறப்புகள் பற்றியும் விரிவா தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி திருப்பூரின் பெயர் காரணம் பற்றி தெரிந்து கொள்வோமா
இந்த கதை தெரிந்து கொல்வதற்கு கிட்டத்தட்ட ஐந்தாயிரம் வருடங்களாவது பின்னாடி போக வேண்டும்.. தமிழ் மொழியோட இருபெரும் இதிகாசங்களில் ஒன்று மஹாபாரதம். ஒரு மனிதனுக்கு தேவையான வாழ்வியல் நீதிகளை பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் என்ற அண்ணன் தம்பிகளிடையே நடக்கும் அரசியல் கதைக்களம் வழியாக சொல்லும் மஹாபாரதத்தில் ஒரு சின்ன பகுதி இடம்பெறும். பாண்டவர்களோட ஊரில் இருக்கும் மாடுகள் அனைத்தையும் திருடர்களை வைத்து திருடி விடுவார்கள் கௌரவர்கள். பாண்டவர்களில் வீரனான அர்ஜுனன், அவர்களிடம் சண்டையிட்டு அந்த மாடுகள் அனைத்தையும் திருப்பி கொண்டு வந்த இடம் தான் திருப்பூர் – அதாவது இழந்ததை திருப்பி கொணர்ந்த ஊர் திருப்பூர் என்ற குறிப்பில் திருப்பூர் என்று இந்த இடம் பெயர் பெற்றதாம்.
கதை கற்பனை என்பதை தாண்டி பெயர் வந்த காரணத்தால் கூட இத்தனை தொன்மை வாய்ந்த திருப்பூருக்கு இன்னும் பல சிறப்புகள் இருக்கு..
கொங்கு மணடலமான திருப்பூர், தொடக்கக்காலகட்டங்களில் சேரர் ஆட்சியில் இருந்து பத்தாவது நூற்றாண்டு போல சோழர் ஆட்சிக்குள் சிறப்பாக செயல்பட்டு 15வது நூற்றாண்டு வாக்கில் விஜயநகர ஆட்சிக்குட்பட்டு பிறகு பாளையக்காரர்கள், மதுரை நாயக்கர்கள், மைசூர் திப்பு சுல்தான் ஆட்சிக்கு பிறகு இறுதியாக சுதந்திரம் அடைவதற்கு வரை முன்னர் ஆங்கிலேயர் ஆட்சிக்குள் வந்தது. இப்படி சேரர்களில் ஆரம்பித்து திருப்பூரின் வளமையை சொல்லிக்கொண்டே போகலாம். குறிப்பாக சோழர்கள் காலத்தில் அப்போதே ரோமானியர்கள் இடையே வர்த்தகம் இடம்பெற்ற குறிப்பும் திருப்பூரின் தொன்மையை அழகாக எடுத்துரைக்கிறது.
திருப்பூரின் வளமைக்கு இன்னொமொரு மையம் , அதன் தொழில் வளம். தமிழகத்தின் டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் அளவிற்கு உலகப்புகழ் பெற்று விளங்குகிறது திருப்பூர்.
என்ன குழந்தைகளே.. ஒரு ஊருக்கு இத்தனை சிறப்புகளான்னு வியக்க வைக்க வைக்குது இல்லையா.. இதற்கெல்லாம் இன்னும் அழகு சேர்ப்பது போல மற்றொரு சிறப்பு நொய்யல் ஆறு. தமிழக வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற நொய்யல் ஆறு, தொண்டை மண்டல பகுதிகளுக்கு வளம் சேர்க்கும் காவேரி ஆற்றின் கிளை ஆறு.
இப்படி இயற்கை வளம், தொன்மை, தொழில் வளம்ன்னு சிறப்பு வாய்ந்த திருப்பூரின் பெயர் காரணத்தையும் , ஊரின் சிறப்பம்சங்களையும் தெரிஞ்சுக்கிட்டீங்களா பூஞ்சிட்டுகளே! மீண்டும் இதே மாதிரி ஒரு கதை பகுதியோடு அடுத்த கதை கதையாம் காரணமாம் பகுதியில் உங்களை சந்திக்கறேன்.. அதுவரை உற்சாகமா ஆரோக்கியமா மகிழ்ச்சியா இருங்க செல்லங்களே!