“ஜீவா இன்னும் என்ன செய்யற.. ஸ்கூலுக்கு நேரம் ஆகலையா.. சீக்கிரம் புறப்பட்டு வா .எப்பப்பாரு விளையாட்டுதான். சொல் பேச்சு எதுவும் கேட்கவில்லை. இன்னும் அஞ்சு நிமிஷத்துல ஸ்கூல் வேன்  வந்திடும் இன்னும் என்ன செய்யற.. “ஜீவாவின் பாட்டி தனம் அழைத்துக் கொண்டிருந்தார்.

   ஜீவா தற்சமயம் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன். தாய் ,தந்தை இருவருக்கும் அத்தனை செல்லம்.

   “ஏன் எப்ப பார்த்தாலும் அவனை திட்டிக்கிட்டே இருக்கிறீங்க.. அவன் புறப்பட்டுட்டு தானே இருக்கிறான்..”

  “ரேணுகா..எப்போதுமே அவனுக்கு சப்போர்ட்டா பேசாத..  நேரம் என்ன ஆகுது பாரு எந்திரிச்ச நேரத்துல இருந்து அந்த மொபைல்ல தான் விளையாடிக்கிட்டு இருக்கிறான். நீயும் அவனை எதுவும்  கேட்கிறது இல்லை.”

kids on mobile

  “இருக்கிறது அவன் மட்டும் தானே.. வாலை குறுத்து போல அவனை பெத்து வச்சிருக்கிறேன். எப்பவுமே அவனைக் திட்டிக்கிட்டா இருக்க முடியும்..”

  “எப்பவும் உன்னை திட்ட சொல்லலை.. காலையில ஸ்கூலுக்கு போகணும் என்று உனக்கு தெரியும்தானே.. நீ எப்பவுமே அவனுக்கு மொபைல்ல கேம் மட்டும் தானே விளையாட விடற.. உனக்கு தப்பா  தெரியலையா..  தப்பு செஞ்சா பெத்தவங்க தான கண்டிக்கனும் . நான் எதாவது சொன்னா இந்த பாட்டிக்கு வேலையே இல்லை என்று சொல்லறான்..”

  “அவனுக்கு  இருபது  வயதா ஆகுது.  இரண்டாவது படிக்கிற சின்ன பையன் அவனுக்கு என்ன தெரியும். போக போக சரியாயிடுவான்..”

  “தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்னு சொல்லுவாங்க..என்ன சொன்னாலும் நீ உன்னோட மகனை விட்டுத்தர மாட்ட.. அவன் குழந்தைதான் இல்லன்னு சொல்லலை ஆனா எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது என்று சொல்லித் தரலாம் இல்ல. நான் இனிமே உன்கிட்ட இது சம்பந்தமா கேட்கமாட்டேன். இவன் புறப்பட்டுடானா.. ஸ்கூல் பஸ் ஹாரன் சத்தம் கேட்குது பாரு”.

  “இதோ பாட்டி வந்துட்டேன்” என்று வேகமாக ஓடி வந்தான் ஜீவா.

  “அம்மா சாயங்காலமா வீட்டுக்கு வந்ததும் என்கிட்டயே போனை தந்துடனும். நீங்க ஏற்கனவே சொல்லி இருக்கீங்க என்னை ஏமாத்த கூடாது” என்று சொல்லிவிட்டு ஸ்கூல் வேனை  நோக்கி புறப்பட்டான்.

  “நீ பிள்ளை வளர்கிறது சரியில்லை ரேணுகா..”

  “போதும் அத்தை எப்பவுமே என்னை குறை சொல்லாதீங்க..”

  “சரி உன்னுடைய இஷ்டம் பின்னாடி பிரச்சனை என்று புலம்பக் கூடாது அதற்காகத்தான் இதெல்லாம் சொல்லறேன்.”

  “அவன் சின்ன குழந்தை அவனால என்ன பெரிய பிரச்சனை வந்திட போகுது..”

   மாலை வந்த பிறகு கூட ஜீவா ஹோம் ஓர்க் என்று எதையும் எழுதவில்லை. முதலில்  தாயாரிடமிருந்து  வாங்கியவன் கேம் விளையாட ஆரம்பித்திருந்தான்.

  “இதை மறுபடியும் கையில கொடுத்தாச்சா.. சாயங்காலமா வந்தான் சரி.. கொஞ்ச நேரம் எதையாவது படிக்க சொல்லி கொடுத்துட்டு நம்ம வீட்டு பக்கத்துல இருக்கிற குழந்தைங்க கூட  கொஞ்ச நேரம் விளையாட சொல்லலாம்ல… ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்தா நல்லாவா இருக்கு..”

  “எப்ப பாரு அவனை குறை சொல்லாமல் உங்களால் இருக்க முடியாது.. எப்படி தான் உங்க பையனை பெத்து வளர்த்திங்களோ  தெரியலை..” கோபமாக சொல்லியவள் ஜீவாவை இழுத்துக் கொண்டு தங்களுடைய அறைக்குள் சென்று மறைந்தாள்.

   சில நாட்கள் அமைதியாக கழிந்தது ஜீவாவை பற்றி எந்த புகாரையும் மருமகளிடம்  சொல்லவில்லை.

அன்றைக்கு காலையில் ஜீவாவின் தந்தை சந்திரன் ரேணுகாவிடம்.. 

  “ரேணு அவசரமா பணம் தேவை இருக்குது உன்னோட அக்கவுண்ட்ல இருந்து ஒரு எட்டாயிரம் ரூபாயை கூகுல்பேயில் மாற்றி  எனக்கு அனுப்பி விடு..”

  “இருங்க” என்றபடி வேகமாக மொபைலில் இருந்து பேலன்ஸ் செக் செய்து பார்க்க.. அங்கு பணம் இருந்ததற்கான எந்த அடையாளமும் இல்லை. சற்று பதட்டத்தோடு “என்னங்க.. என் அக்கவுண்ட்ல பணம் இல்லன்னு வருது.. என்ன ஆச்சு தெரியலை.. நேத்து கூட இருந்தது..”

  “அது எப்படி பணம் காணாமல் போகும் .கொடு மொபைலை” என்று வாங்கி பார்க்கும் போது தான் ஒன்று புரிந்தது. அடுத்தடுத்து பணம் கட்டி கேம் விளையாண்டது தெரிந்தது. 

   எப்போதுமே ஜீவாவிடம் போனை கொடுக்க .. அவன்  மொபைலில் கேம் விளையாடிக் கொண்டிருந்தவன் அவனையும் அறியாமல் அக்கவுண்டில் இருந்து பணத்தை மாற்றியிருந்தான். மொத்தத்தில் அவசரத் தேவைக்காக வைத்து இருந்த பணம் மொத்தமும் முடிந்திருந்தது.. 

   ஆரம்பம் முதலே மொபைல்  ஃபோனைப் பொறுத்தவரைக்கும் ஜீவா அத்தனை விஷயத்தையும் தாயாரின் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பான். அவனுக்கு மொபைல் பாஸ்வேர்டு மட்டுமல்ல.. பணம் மாற்றி விடும் முறை கூட தெரிந்திருந்தது.

இதையெல்லாம் பெருமையாக நினைத்த ரேணுகாவிற்கு இப்போதுதான் புரிந்தது தன்னுடைய தவறு என்ன என்று..

  “கண்டிக்காத பிள்ளை கெடும்.. சும்மாவா சொல்லி வச்சாங்க.. ஏற்கனவே உன்கிட்ட பலமுறை சொல்லியிருக்கிறேன். நீ அவனை கண்டிக்காம ,கவனிக்காமல் விட்டதால் தான் இன்றைக்கு நமக்கு இந்த இழப்பு.. இனிமேலாவது கவனமாக இரு.”.சொல்லிவிட்டுப்  கோபமாக புறப்பட்டான் சந்திரன்..

   இப்போது தான் ரேணுகாவிற்கு தன்னுடைய தவறு புரிந்தது. இனி ஜீவா மொத்தமாக மாறி விடுவான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

முற்றும்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments