தினு! இன்னைக்கு நீ உதை வாங்காம ஸ்கூலுக்குக் கிளம்ப மாட்டன்னு நினைக்கிறேன்..”, பார்கவியின் குரல் ஏகத்துக்கும் எரிச்சலோடு வர, பிள்ளைகளின் பள்ளிச் சீருடையை இஸ்திரி போட்டுக் கொண்டிருந்த குமரன், “ம்ப்ச்..‌ஏன் பார்கவி.. காலையிலே இவ்வளோ டென்ஷன் ஆகுறே?”, என்று கூறித் தன் பங்குக்கு தினு அம்மாவின் இரத்த அழுத்தத்தை ஏற்றினார் குமரன்.

“ம்.. எனக்கு ஆசை பாருங்க.. காலையிலேயே கத்தனும்னு.. காலையிலே இருந்து இவள் எத்தனை அட்டகாசம் பண்றா தெரியுமா?”.

மகளிடம் ஒரு பார்வை செலுத்தி மீண்டும் துணியில் கண்களைப் பதித்தவர், “என்ன தினு பண்ணின?” என்றார்.

அம்மாவிற்குத் தன் தலையை சில மணித்துளிகளுக்கு ஒப்படைத்து விட்டு அமைதியாய் முக்த்தை வைத்தபடி நின்றிருந்த தினு, “நான் ஒன்னுமே செய்யலை பா!”, என்று அப்பாவியாய் சொன்னாள்.

“ஒன்னுமே பண்ணலையா? காலையிலே எழுந்ததிலிருந்து ஒரு வேலையும் செய்யலை.. ஸ்னாக்ஸ்க்கு ஆப்பிளைக் கழுவிட்டு வா, அப்படீன்னா அதைத் திண்டிலே வைத்து ஜீ பூம் பா ங்கிறா! கேட்டா அது பறந்து கைக்கு வருமாம்..”.

“ஹாஹா.. வந்ததா?”, என்று சிரித்தபடி கேட்ட தந்தையைப் பார்த்து, “இல்லை பா!” என்றாள் தினு சோகமாக.

“ம்க்கும்.. வரும்.. வரும்.. அப்புறம் வாசலில் நின்னுகிட்டு ஜீ பூம் பா! ன்னு சொல்றா..‌ கேட்டா பறந்து வருவாளாம்!”

“வந்தாளா..?”, என்று சிரித்தபடி குமரன் கேட்க, ஹேர் பாண்ட் ஒன்று அவரை நோக்கிப் பறந்து வந்தது.

தூக்கிப் போட்ட அம்மாவைத் ‌திரும்பிப் பார்த்து சிரித்தபடி, “அம்மா.. மேஜிக் வேலை செஞ்சிடுச்சி!” என்று சிரிக்க, வந்த சிரிப்பை அடக்கி முறைத்தார் பார்கவி.

இப்படி வீட்டில் இல்லாத சேட்டை எல்லாம் செய்து தனக்கு எந்த சூப்பர் பவர் கிடைத்திருக்கிறது காதில் இருக்கும் பச்சைக் கம்மலால், என்று சோதனை செய்து பார்த்து கொண்டே இருந்தாள் தினு‌.

பள்ளிக்கு வந்தும் முடியவில்லை அவள் முயற்சிகள்.. ஜீ பூம்பா.. அத்திரி புத்திரி என்று வாய்க்கு வந்ததைச் சொல்லியபடி முயற்சித்தாள். யார் கண்ணுக்கும் தெரியாமல் மறையும் சக்தியா? பொருட்களை மறைய வைக்கும் சக்தியா.. பறக்க வைக்கும் சக்தியா.. பள்ளிக்கூடப் பேருந்தைத் தூக்க முடிகிறதா என்று கூட தூக்கிப் பார்த்தாள்.. ம்கூம்.. எதுவுமே முடியவில்லை.

ஒரு வேளை.. எல்லாமே கனவு தானோ? பச்சைக் கம்மலில் எந்த சக்தியும் இல்லையோ என்று கொஞ்சம் சந்தேகம் வரத் தொடங்கிவிட்டது. பள்ளிக் கூடம் முடிந்து விட்டது.

மாலை நேரம். சூரியனின் மெல்லிய சூடும், மாலையின் மெல்லிய காற்றும் கலந்து அந்த பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை அலுப்பில்லாமல் பார்த்துக் கொண்டன. பல விளையாட்டுப் போட்டிகளுக்கு பயிற்சி கொடுக்கிற நேரமது‌.

அண்ணாக்களும் அக்காக்களும் விளையாடுவதை வேடிக்கை பார்த்தபடி, வீட்டுக்குப் போகும் பாதையில் பிள்ளைகள் நடந்து கொண்டிருந்தார்கள்.

பையைத் தோளில் போட்டுத் தன்‌ தோழிகள் அனன்யா மற்றும் நிரஞ்சனாவோடு சலசலத்தபடி வெளியே வந்த தினு பாதையில் சேர்ந்து கொண்டாள்.

திடீரென்று எங்கிருந்தோ ஒரு கால்பந்து விளையாட்டின் பந்து பறந்து வந்தது. அது வரும் கோணத்திற்கு நிச்சயம் முன்னே நட்ந்து கொண்டிருந்த ரோசனின் தலையில் விழும்.

“ஓ.. நோ!”, ஒன்று தினு காதில் கையை வைத்தபடி கத்த அடுத்த நொடி அங்கே பயங்கர அமைதி.. பந்து ரோசனின் தலையில் விழும் சத்தம் கேட்கவில்லை. வலியில் ரோசன் கத்தும் சத்தம் கேட்கவில்லை.. ‘என்ன ஆச்சி!’, என்று புரியாமல் கண்களை மெதுவாகத் திறந்த தினுவின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன.

அந்த நொடி அங்கிருந்த அனைவரும் சிலை போல நின்றிருந்தார்கள். வானத்தில் பந்து அப்படியே நின்றிருந்தது. ஏன்.. காற்றில் பறந்து வந்த இலைகள் கூட அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. என்ன நடக்கிறது.. என்று தினுவுக்குப் புரியவில்லை. சுர்ரென்று பச்சைக் கம்மல் போட்ட போது உடலில் எழுந்த மின்னலைப் போலவே தற்போதும் வர இன்னும் கண்களை அகல விரித்தபடி, “வாவ்!” என்று துள்ளிக் குதித்தாள் தினு.. இதுதான் தன் சூப்பர் பவர்.. என்று புரிய பரபரவென்று சுற்றிப் பார்த்தாள்.

ரோசன் தலையைத் தாக்க‌க் குறி பார்த்துக் கொண்டிருந்த பந்தைப் பார்த்ததும் வேகமாக நடந்து போய் அந்தப் பந்தை ஒரு பத்து சென்டிமீட்டர் தள்ளி வைத்தாள்..

கொஞ்சம் பின்னே சென்று, ” ம்..‌இப்போ அடிபடாது!”, என்று தனக்குள்ளேயே அவள் யோசித்த நொடி வீடியோவில் பாஸ் பண்ணி வைத்து விட்டு பாஸை விடுவித்ததைப் போல அனைவரும் உயிர்த்து வந்தார்கள். பந்து பறந்து ரோசன் தலையைச் சற்று தாண்டி அருகில் விழ, “அப்பாடி!” என்று மூச்சு விட்டாள் தினு.

“ஏய்.. நில்லு தினு.. ஏன் முன்னாடி முன்னாடி போற.. சரியான அவசரக் குடுக்கை”, என்று திட்டியபடி நிரஞ்சனாவும் அனன்யாவும். வேகமாய் இரண்டு எட்டுக்கள் எடுத்து வைத்து அவளோடு சேர்ந்து கொண்டனர்.

நடந்ததை நம்ப முடியாமல் பரபர உணர்வோடு வீட்டுக்கு வந்த தினுவிற்குத் தன் சக்தியை மறுபடியும் பயன்படுத்த பயங்கர ஆவல். பந்து நிகழ்ச்சியின் போது நடந்ததை மனதில் அசை போட்டாள். எந்த சிறப்பு மந்திரமும் சொல்லவில்லை. பந்து விழாமல் ஒரு நொடி நின்றால் நன்றாக இருக்குமே என்று மனதார அந்த நொடியில் யோசித்தாள். கைகள் இரண்டையும் தன் காதுகளில் உள்ள கம்மலில் படும்படி வைத்து கண்களை இறுக மூடியிருந்தாள்.

அதே போல ஒன்றிற்காக முழு கவனத்தோடு வேண்டினால் நடக்குமோ? எப்படி பரிசோதனை செய்யலாம்; பார்கவி, எழுதச் சொன்னதை எழுதாமல் காற்றில் படம் வரைந்து கொண்டிருந்த மகளைப் பார்த்து, “படிக்காம என்ன தினு பண்ற?”, என்று கோபமாகக் கேட்டார். “கௌதமும் படிக்காம பாக்சை நோண்டிகிட்டு இருக்கான் மா!”, என்று போட்டுக் கொடுத்தாள்.

“உன்னைப் படிக்கச் சொன்னா, நீ என்ன சொல்ற?” என்றபடித் தலையில் கொட்ட கையை ஓங்க, கண்களை இறுக மூடி, காதுகளில் கை வைத்து, “நோ!” வெனக் கத்தினாள். தலையில் சுளீர்’ என்ற வலி தெரிய, ‘ஏன் சூப்பர் பவர் வேலை செய்யவில்லை..’, என்று எண்ணியபடிக் கண்களில் நீர் கோர்க்கக் கண் திறந்தாள்.

எல்லோருமே சிலையாகி நின்றிருந்தார்கள். அம்மாவின் கைகள் அந்தரத்தில் நிற்க கௌதம் வீசிய பெரிய ரப்பர் அவள் தலையில் தட்டி அங்கேயே நின்றது. வலியின் காரணம் புரிய, சிரிப்பு தான் வந்தது.. அம்மாவின் கொட்டிலிருந்து தப்பித்தவள் ஒரு நொடி தாமதத்தில் அண்ணனின் அடிக்கு மாட்டிருக்கிறாள். அடுத்த நொடி அம்மாவின் கொட்டும் விழப் போகிறது. அதிலிருந்தாவது தப்பிக்க முடியுமா என்று யோசித்தாள். சட்டென்று ஐடியா ஒன்று தோன்ற, “ஹூரே” என்று கத்தினாள்.

எதற்கும் அசையாமல் நின்ற கௌதமையும் அம்மாவையும் பார்க்கச் சிரிப்பாய் வந்தது. தலையில் தட்டிய ரப்பரை எடுத்து, அம்மா கொட்ட வரும் கைகள் தன் தலையைத் தொடும் இடத்தில் வைத்து, ஓகே!”, என்று நினைக்க அம்மாவின் கை ஆக்சனிற்கு வந்து, அவள் தலையில் இருந்த ரப்பரின் மேல் சுளீரென்று விழுந்தது.

அடுத்த சில மணித்துளிகள் பார்கவியும் கௌதமும் ஓட்டப்பந்தயம் ஓடிக் கொண்டிருக்க, உத்வேகத்தோடு வீட்டுப்பாடம் முடித்து, அபார்ட்மென்ட் மைதானத்தில் விளையாட ஆரம்பித்தாள்.

ஏழு மணிக்கு எல்லாம் திரும்பி வந்து, இரவு உணவைச் சாப்பிட்டு தூக்கம் வருதும்மா!” என்றபடி எடுத்துப் போட்டுச் சாப்பிட்டுப் படுக்கையில் படுத்தவளை ஆச்சர்யத்துடன் பாரத்தபடி அகன்றார் பார்கவி.

தினு எதிர்பார்த்தபடியே பச்சை விளக்கொளி அறையில் பரவியிருக்க பூவும், கொடியும் படர்ந்த மர இருக்கையில் அமர்ந்தபடி திகம்பர நாயகி வந்தார்.

“பாட்டி.. என் சூப்பர் பவர் கண்டுபிடிச்சிட்டேன். டைம் அப்படியே ஸ்டாப் ஆகிடுது.. சூப்பர் ல பாட்டி?”, என்று உற்சாகமாகக் கூறியவளைப் பார்த்துப் புன்னகைத்தார்.

“ம்..‌ரொம்ப சந்தோசம்.. சரி.. இந்த சூப்பர் பவர் உபயோகிக்கிறதுக்குன்னு சில விதிமுறைகள் இருக்கு.. அவற்றைச் சொல்லவா?”.

“விதிமுறைகளா? அது‌ என்ன?”.

“ம்ம்ம்.. தேவையில்லாமல் சூப்பர் பவரை பயன்படுத்தக்கூடாது;

உன் சுயநலத்துக்காக அடுத்தவருக்குத் துன்பம் தர இதைப் பயன்படுத்தக் கூடாது..”.

“புரியலையே பாட்டி!”.

“அதாவது காலத்தை நிறுத்தி உன் அண்ணனை நன்றாக அடிச்சி வைக்கக் கூடாது”.

“அச்சோ.. என்ன பாட்டி.. காலையில் எழுந்ததும் அதான் ஃபர்ஸ்ட் ப்ளானாக இருந்தது.. ஆமா.. இந்த ரூல்ஸை ஃபாலோ பண்ணலைன்னா என்ன ஆகும்?”.

“பவர் பச்சை தோடு சாதாரணமனதாக மாறிவிடும். யாருக்கு இந்த சக்திகளைப் பெறுவதற்குத் தகுதி இருக்கோ அவர்களைப் பார்க்கும் வரை காத்திருக்கும்..”

“நோ.. நோ.. பாட்டி.. நான் தப்பு செய்ய மாட்டேன்”, என்று அவசரமாய்க் கூறினாள்.

அதே நேரத்தில் பல கட்டிடங்கள் கொண்ட அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒரு கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இருந்த ஒரு வீட்டின் ஹாலில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

பவ்யமாய் ஓர் இருக்கையில் ஒருவன் அமர்ந்திருக்க, கோட் சூட் அணிந்து அவன் முன்னே ஒருவன் நின்றிருந்தான்.

பவ்ய மனிதன், “உங்க திட்டம் லாம் சக்ஸஸ் ஆகுமா சார்..”, என்று கேட்டான்.

“நிச்சயமா ஆகும். விஷ்ணு.. இப்போதைக்கு இந்த உலகத்திலேயே விலை உயர்ந்த வளம் எது தெரியுமா?”.

“வைரமா சார்?”.

“ம்ஹூம்”.

“பெட்ரோலியம்?”.

“ம்ஹூம்”, ஸ்டைலாகத் தன் முன் இருந்த கருப்பு நிற இருக்கையைச் சுழற்றியபடி அந்த மனிதன் கூறினான்.

“பின்னே?”

“மனித வளம். நாம் சொன்னதைக் கேட்கும் பல கோடி‌ மனிதர்கள் கிடைச்சா அவன்தான் உலகின் பெரிய பணக்காரன்.. நான் அந்தப் பணக்காரன்‌ ஆகப் போகிறேன். பல கோடி‌மக்களை இந்த அறிவியல் கண்டுபிடிப்பு மூலமாக என் சொல் பேச்சு கேக்க வைக்கப் போறேன்.. நான் சொன்னதை வாங்குவாங்க.. நான் சொன்ன இடத்துக்குப் போவாங்க.. நான் சொல்லும் கட்சிக்கு ஓட்டுப் போடுவாங்க.. இதெல்லாம் இப்போ எங்க காலத்திலே தடை செஞ்சாச்சி. உங்க காலத்திலே இந்த அறிவியலைப் பற்றித் தெரியாது இல்லையா..  அதற்காகத்தான் எதிர்காலத்திலே இருந்து உங்கள் காலத்துக்கு வந்திருக்கேன். இதை வைச்சி எவ்ளோ கோடி சம்பாதிக்கப்‌போறேன் தெரியுமா.. என் ஆட்டத்தை இனி தான் நீ பார்க்க போற!”, என்று சொன்ன படி இடி போல் சிரித்தான் அந்த எக்ஸ் மனிதன்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments