“அப்பா, இது பாயா? கேர்ளா?” என தன் தந்தையின் காதில் ரகசியம் பேசியவன், “ம்ம் இந்த கண்ணுக்குட்டிக்கு ஷாலினின்னு பெயர் வைக்கலாம்” என்று தன் நெருக்கமான தோழியின் பெயரைச் சொன்னதும், சுற்றியுள்ள அனைவரும் கொள்ளென்று சிரிக்க,

“அட சாலினி, பேரு பிரமாதங்க தம்பி!”, என்று காளியப்பன் சொல்ல, மற்றவரின் சிரிப்பில் முகம் சிறுத்திருந்த மித்ரன் தெளிந்து நிமிர்ந்தான்.

“சார், சின்னப் பையன் அதான் அவனோட பெஸ்டு ப்ரெண்டு பெயரையே வெச்சுட்டான். சாரி நீங்க உங்களுக்குப் பிடிச்ச பெயரையே வெச்சுக்கோங்க!”, எனக் கூச்சத்துடன் சொன்னான் தீபக்.

“அட நீங்க வேற டாக்டர், அவ இனிமே ஷாலினி தான் அதுல எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எங்க அம்மா இந்த பூமியில் விட்டுட்டுப் போன உசுருல பாதி லக்ஷ்மி, அவளை கன்னுக்குட்டியோட அழகா காப்பாத்திக் குடுத்திருக்கீங்க, எவ்வளவு பெரிய விஷயம்!” எனக் கதிரவன் மகிழ்ச்சியுடன் சொல்ல, மித்ரன் அழகாய் புன்னகைத்தான்.

தீபக், “சரி சார், அப்ப நாங்க வரோம். வா மித்து போகலாம்”.

“இருங்க இருங்க, காசு தான் வேண்டாம்னு சொல்லிட்டீங்க, காபியாவது குடிச்சுட்டு போங்க!”, என அவர்களை வீட்டினுள்ளே அழைத்துச் சென்று உபசரித்தார் கதிரவன்.

கொல்லைப்புறம் இருந்த போது சற்று பயந்தாலும், சிரித்த முகத்துடன் இருந்த மித்ரன், வீட்டிற்குள்ளே வந்ததும் முகம் கசங்கிப் போய் இருந்ததைக் கண்டு கொண்டான் தீபக்.

அப்போது எதுவும் கேட்க வேண்டாம் என்று அமைதியாய் அவர்களின் உபசரிப்பை ஏற்றுக் கொண்டு, மித்ரனுக்கு ஆசையாய் அவர்கள் வழங்கிய பூனை பொம்மை போட்ட பென்சில் பாக்ஸையும் பெற்றுக் கொண்டு தன் காருக்கு விரைந்தான் தீபக்.

“ஐயா”, என வேகமாக ஓடி வந்த காளி, கார் கண்ணாடி இடுக்கின் வழியே முகம் நுழைத்து, “நாளைக்கு வூட்டுக்கு வந்த சீம்பால் தரேனுங்க! மறக்காம சாப்பிடுங்க. லட்சுமியோட வலியை நிமிசத்துல எறக்கி வெச்சுட்டீங்களே, நீங்க தெய்வமுங்க!”, என கைகூப்பி வழியனுப்பினார்.

காரை லாவகமாகச் செலுத்திக் கொண்டே, “மித்து கண்ணா இன்னிக்கு எக்ஸ்பீரியன்ஸ் எப்படி இருந்துச்சு?”, என்று கேட்கவும், சோர்ந்திருந்தவன் சுறுசுறுப்பாய் ஆனான்.

“அப்பா! லக்ஷ்மி பாவம்ல அதுக்கு ரொம்ப வலிச்சுதா அதான் அப்படி கத்துச்சா? ஆமாம் நீங்க எப்படி அதோட வலியைப் போக வெச்சீங்க? அதுக்கு எங்க வலிச்சுதுன்னு உங்களுக்கு எப்படிப் புரிஞ்சுது?”, எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டான்.

“மித்து, இப்ப நமக்கு உடம்பு சரியில்லைன்னா நம்ம டாக்டர்கிட்ட போய் எனக்கு உடம்பு சரியில்லை, இங்க வலிக்குது இப்படிப் பண்ணுது சொல்வோம்ல! அப்ப டாக்டர் என்ன பண்ணுவாங்க?”.

“மாத்திரை குடுப்பாங்க, சில சமயம் நல்ல பெரிய ஊசியா வலிக்கிறா மாதிரி பின்னாடி போடுவாங்க, அது வலியை விட இன்னும் அதிகமா வலிக்கும்பா. எனக்கு ஊசின்னா ரொம்பப் பயம்பா!”, என்றான் தன் கோலிக் குண்டு கண்களை உருட்டி,

“ஹா! ஹா! நானும் லக்ஷ்மிக்கு ஊசி தான் போட்டேன். அதான் வலி குறைஞ்சது”.

“ஆனா லக்ஷ்மி தான் எங்க வலிக்குதுன்னு சொல்லவே இல்லியேப்பா, எப்படிக் கண்டுபிடிச்சீங்க?”, எனத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ஓட்டுநர் இருக்கையில் இருந்த தன் தந்தையின் கையைப் பிடித்து உலுக்கினான்.

உடனே தக்க சமயம் வந்து விட்டதை உணர்ந்த தீபக் வண்டியை ஓரங்கட்டிவிட்டு, “லக்ஷ்மி எங்க வலிக்குதுன்னு சொல்லலைன்னாலும் அப்பாவுக்கு புரியும்பா. அப்பா அதுக்குத் தானே வெட்டினரி டாக்டர் படிப்பு படிச்சேன்”.

“அப்ப எந்த அனிமல்ஸ்க்கு வலின்னாலும் உங்களால புரிஞ்சுக்க முடியுமா?”, என விழி விரித்தான் மித்ரன்.

“ஆமாம்பா, மிருகங்களுக்குத் தான் வாய் இல்லியே! அதுக்கு வலிச்சா அழ மட்டும் தான் தெரியும், சில மிருகங்களுக்கு வலி ரொம்ப அதிகமான மதம் பிடிச்சுடும். போன வருஷம் நம்ம ஊட்டிக்குப் போயிருந்தப்ப, யானையோட கால்ல கண்ணாடி பாட்டில் ஏறியிருந்துச்சே உனக்கு ஞாபகம் இருக்கா?”.

“ஆமாம்பா நீங்க என்னையும், அம்மாவையும் மட்டும் தனியா ஹோட்டல் ரூம்ல விட்டுட்டுப் போயிட்டீங்களே!”.

“அதே தான், அந்த யானை பாட்டுக்கு அதோட வீடான காட்டுல இருக்கு, அங்க சுத்திப் பார்க்கப் போற மனுஷங்க பாட்டில், ப்ளாஸ்டிக்குனு எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சுட்டுப் போயிடறாங்க. மிருகங்களோட வீட்டுல குப்பையைப் போட்டுட்டு, நம்ம வீட்டை மட்டும் சுத்தமா வெச்சுக்குறோம் மித்து!”, என்று பேசிய தீபக்கின் பேச்சு மித்ரனுக்கு புரிந்தும் புரியாதது போல் இருந்தது.

“அப்பா அந்த யானையோட காலை சரி பண்ணிட்டீங்களா?”, என சூப்பர்மேனைப் பார்த்துக் கேள்வி கேட்பது போல் வியந்து போய்க் கேட்டான்.

“ம்ம். பாட்டில் ஏறினதால யானைக்கு ஃபீவர், இன்ஃபெக்ஷன் எல்லாம் இருந்துச்சு. அப்பா யானைக்கு வலிக்காம ஊசி போட்டு, அதோட கால்ல இருந்த உடைஞ்ச பாட்டிலை எடுத்து, மருந்து கட்டிச் சரி செஞ்சேன் மித்து”, எனத் தன் வேலையைப் பற்றி மகனின் மனதில் எழுந்திருந்த குழப்பத்தை சரி செய்வது போல் விளக்கினான்.

“அப்பா, நீங்க பொய் சொல்றீங்க!” என்று அவன் சொன்னதும், அதிர்ந்து நிமிர்ந்த தீபக், “வலிக்காம எப்புடி ஊசி போட முடியும்? பாவம் யானை அதுக்கு எவ்வளவு வலிச்சுருக்கும்!”, என்றவன் முடிக்கவும் சத்தமாகச் சிரித்து விட்டான்.

“கால் வலியை விட, ஊசி வலி குட்டி தான் மித்து. அந்த யானைக்கு இப்பக் குட்டி பொறந்திருக்காம். நம்மளை எல்லாம் அதைப் பார்க்கக் கூப்பிட்டுருக்காங்க. அடுத்த வாரம் அங்க போறோம்‌”.

“ம்ம் அப்பா, அந்த யானைக்குட்டி பாயா? கேர்ளா?”.

“பாய்னு தான் நினைக்கிறேன் ஏன் கேக்குற?”.

“இல்ல, அதுக்கு பெயர் வைக்கணும்ல இப்பவே யோசிச்சா தான், நல்ல பெயரா வைக்கமுடியும்!”, என பெயரைத் தேர்ந்தெடுக்கும் குழப்பத்தில் இருந்த மகனைக் கண்டு ரசித்தான் தீபக்.

“மித்து, இனிமே அப்பாவை யாராவது கேலி செஞ்சா, நீ ஆமாம் அப்படித்தான்னு சொல்லிட்டுப் போயிடணும் சரியா?”, என மெதுவாக காரைக் கிளப்பிக் கொண்டே பேசினான்.

“ஆமாம்பா, மனுஷங்க தான் மிருகத்தோட வீட்டுக்குப் போய் குப்பை போட்டு கெட்டது செய்யுறாங்க, மிருகங்கள் எல்லாம் ரொம்பவே குட். இனி யாராவது கேலி செஞ்சா ஆமாம் டா எங்க அப்பா, அப்பா மிருகம், நான் குட்டி மிருகம், அம்மா, அம்மா மிருகம்னு சொல்லிடறேன். சரி தானே அப்பா”, என்று கூறி சிரித்தான்.

“அதெல்லாம் சரி தான், ஆனா ஏன் நீ அவங்க வீட்டுல காபி, பூஸ்ட் ஏதாவது வேணுமான்னு கேட்டப்ப ஒண்ணுமே குடிக்கல, உனக்கு பிடிச்ச க்ரீம் பிஸ்கெட்டைக் கூட வேண்டாம்னு சொல்லிட்ட!”, எனத் தீபக் மெல்ல தன் சந்தேகத்தைக் கேட்டான்.

“அங்க…‌அங்க அவன் இருந்தான்பா, அது அவனோட வீடு தான்”, என்று சொல்லிவிட்டு ஓவென்று அழுதான் மித்ரன்.

“யாரு மித்து?” எனக் கேட்டவன் அங்கே மித்ரன் வயதில் மற்றொரு சிறுவன் இருந்ததை நினைவுபடுத்திக் கொண்டு, “யாரு செல்வமா?” என்று கேட்டதும் அழுது கொண்டே தலையை ஆட்டினான்.

“எனக்கு அவங்க அம்மா குடுத்த பூனைக்குட்டி பென்சில் பாக்ஸ் வேண்டாம்ப்பா. நாளைக்கு பிரின்ஸிபல் வேற திட்டுவாங்க!”, என அழும் மகனை ஒருவாறு சமாதானப்படுத்தி வீட்டிற்குக் கூட்டிச் சென்று மனைவியிடம் பொறுமையாக நடந்ததைச் சொல்லி, இருவரும் சேர்ந்து மகனை உறங்க வைத்தனர்.

மறுநாள் மித்ரன் பள்ளிக்குக் கிளம்பும் போதே அவனுடன் இருவரும் கிளம்ப, “அப்பா, எனக்கு பயமா இருக்குப்பா, என்ன தான் செல்வம் உங்களைத் திட்டியிருந்தாலும், நான் அவனை கீழ தள்ளியிருக்கக் கூடாதுல்ல, அந்த பாட்டில் குத்துன யானை கூட மனுஷங்களை எதுவும் பண்ணாம அமைதியாத் தானே இருந்துச்சு. நான் வேணும்னா அவங்கிட்ட சாரி கேக்குறேன், ஆனா எனக்கு அந்த பென்சில் பாக்ஸ் வேண்டாம்”, என்று செய்த தவறை உணர்ந்து கொண்டாலும், செல்வத்திடம் நட்பு பாரட்ட அவன் தயாராய் இல்லை என்பதை வீட்டிலேயே சூசகமாகத் தெரிவித்துவிட்டான்.

பள்ளி சென்றதும், பிரின்ஸிபல் மித்ரனின் பெற்றோர்களை அழைத்துப் பேசும் பொழுதே, செல்வத்தையும் அழைத்திருந்தார்.

மித்ரன் நடந்த அத்தனையையும் ஒன்றுவிடாமல் கூற, செல்வம் அமைதியாய் நின்று கொண்டிருந்தான்.

“என்ன செல்வம்? மித்ரன் சொன்னது உண்மையா?”, என்று கண்டிக்கும் தொனியில் அவர் கேட்க, “ஆமாம் மிஸ். இந்த அங்கிள் சூப்பர்மேன் டாக்டர்னு தெரியாம கிண்டல் பண்ணிட்டேன். இந்த அங்கிள் தான் நேத்து எங்க வீட்டு லக்ஷ்மியைக் காப்பாத்துனாரு. அனிமல்ஸ் வலியைப் புரிஞ்சு மருந்து தர டாக்டர் தான் சூப்பர்மேன் டாக்டர்னு எங்கப்பா சொன்னாரு, சாரி மிஸ், சாரி அங்கிள்”, என்று அழுது கொண்டே சொன்னான் செல்வம்.

“டாக்டர் தீபக், நம்ம வேலை ரொம்ப சுலபமா முடிஞ்சுப் போச்சு பாத்தீங்களா! ரெண்டு பசங்களும் அவங்க அவங்க தப்பை உணர்ந்துட்டாங்க, இனிமே நல்ல ப்ரெண்ட்ஸா இருப்பாங்க!”, என்று பிரின்ஸிபில் சொல்ல, அவர் டேபிளின் மேல் மித்ரன் தனக்கு வேண்டாம் என்று வைத்திருந்த பூனைக்குட்டி பென்சில் பாக்ஸின் மேல் பார்வையை வைத்திருந்தான் தீபக்.

friends
படம்: அப்புசிவா

“ஓகே பாய்ஸ்! நீங்க ரெண்டு பேரும் க்ளாஸ்க்கு போங்க!”, என இருவரிடமும் சொன்னவர், தன் வளர்ப்பு நாயைப் பற்றிய சந்தேகத்தினை தீபக்கிடம் மும்முரமாகக் கேட்கத் தொடங்கினார். அவரின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தவன், யதேர்ச்சையாக டேபிளைப் பார்த்தபோது அங்கே அந்த பென்சில் டப்பா இருக்கவில்லை.

மித்ரன் தான் எடுத்துக்கொண்டு போனான் என்று ரேகா தன் சிறு புன்னகையால் குறிப்பாய் உணர்த்த, இருவரும் மகிழ்வோடு அங்கிருந்து புறப்பட்டனர்.

அந்த வார இறுதியில் ஊட்டியில், யானைக்குட்டியின் தலையில் தொப்பி போல் கவிழ்ந்திருந்த தலைமுடியைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான் மித்ரன்.

“அங்கிள், இந்த யானைக்குட்டியோட அம்மா பெயர் என்ன?” என்று அருகில் இருந்த யானைப்பாகனிடம் அவன் கேட்க, “மரகதம்” என்றார் அவர்.

“அப்ப இந்த குட்டியோட பெயர் என்ன அங்கிள்?”, எனத் தன்னைப் பெயர் சூட்டச் சொல்வார்களோ என்கிற ஆவலில் மித்ரன் கேட்க, “இன்னும் வைக்கலியேப்பா!”, என்ற அவன் எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்தியைத் தந்தார் அவர்.

“அப்பா..அப்பா..நான் இந்த குட்டிக்குப் பெயர் வைக்கவா? இவன் பாய் தானே அதுனால இவனோட பெயர் செல்வம். டேய் செல்வம், ஒழுங்கா, சமத்தா அம்மா சொல்றதைக் கேளு!”, என்றபடி அதன் தலைமுடியை வருடும் மகனைக் கண்டு மனதிற்குள் பூரித்தான் தீபக்.

உயிர்களிடத்தில் அன்பு செய்ய வேண்டும் என்கிற நீதிக்கருத்து நமக்கு சிறுவயதில் இருந்து பயிற்றுவிக்கப்பட்டாலும், வளர்ந்தும் மனிதன் அல்லாத மற்ற உயிர்களை துச்சமாய் நினைக்க நம்மில் பெரும்பாலானோர் தயங்குவது இல்லை. அதற்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவர்களும் தெய்வம் தான் என்றும் பலர் உணராமல் இருக்கிறோம். உயிரில் பெரியது சிறியது என்கிற வேறுபாடு இல்லை,அனைத்தும் சமமே என்பதை வலியுறுத்த எழுதியதே இச்சிறுகதை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments