முன்பு ஒரு காலத்தில் ஒரு அரசர் இருந்தார். அவருக்கு ஏழு குழந்தைகள். முதல் மூன்றும் ஆண் குழந்தைகளாகப் பிறந்த போது, அவருக்கு மிகவும் மகிழ்ச்சி!. ஆனால் அடுத்த மூன்றும் ஆண் குழந்தைகளாகப் பிறந்த போது, அவருக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை.  ஒரு பெண் குழந்தை வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். 

“அடுத்து நமக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கும்”, என்று அரசி கூறினார். அவர் சொன்னது போலவே, ஒரு பெண் குழந்தை பிறந்தது.  அதற்கு டாஃபோடில் என்ற ஒரு பூவின் பெயரை வைத்தனர்.

இளவரசி டாஃபோடில்லுக்கு ஒரு மாதம் ஆனது. அரசரும், அரசியும் இளவரசியின் பெயர்சூட்டு விழாவுக்கு அரண்மனையில் பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்தனர். தேவதை மம்ரூஃபினையும் விருந்துக்கு அழைத்தனர்.   

“மம்ரூஃபின் மிகவும் நல்ல தேவதை. டாஃபோடில்லுக்குப் பயன்படக்கூடிய நல்ல விஷயங்களை அவள் தருவாள். அழகு அல்லது அறிவு அல்லது பணம் அல்லது…”, என்று நிறுத்தினார் அரசர்.   

“நல்ல குணம்” என்றார் அரசி.

“ஆமாம்; அதைத் தான் சொல்ல வந்தேன்”, என்றார் அரசர்.

தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த இளவரசியைத் தேவதை குனிந்து பார்த்துத் தன் மந்திரக்கோலை ஆட்டிய போது, அரசரும், அரசியும் தேவதை கொடுக்கப் போகும் வரத்தை நினைத்துப் பதற்றத்தில் இருந்தனர்.

“அவர்கள் உன்னை டாஃபோடில் என்று அழைக்கிறார்கள். நீ எங்கெல்லாம் போகிறாயோ, அங்கெல்லாம் பூக்கள் பூக்கும்”, என்று சொல்லிவிட்டுத் தேவதை தன் மந்திரக்கோலை ஆட்டினாள்.   .  

தேவதை சொன்னதைக் கேட்டு அரசர் யோசித்த போது, அங்கே ஒரு கணம் அமைதி நிலவியது.

“என்னது? தேவதை சொன்னது எனக்குப் புரியவில்லை”, என்று அரசியின் காதில் கிசுகிசுத்தார் அரசர்.

“அவள் எங்கு நடந்தாலும், அங்கெல்லாம் பூக்கள் பூக்கும் என்று தேவதை சொல்கிறாள்.  இது மிகவும் இனிமை தரும் விஷயம் என்று எனக்குத் தோன்றுகிறது”, என்றார் அரசி.

“ஓ! நல்லது! என்று சொன்ன அரசர், நன்றி சொல்வதற்குத் திரும்பினார். அதற்குள் தேவதை பறந்து போய்விட்டாள்.

ஏறக்குறைய ஓர் ஆண்டு கழித்து, இளவரசி நடக்கத் துவங்கினாள்.  அதற்குள் தேவதை சொன்னதை, எல்லோரும் மறந்து விட்டனர். . 

ஒரு நாள் அரசர் வேட்டை முடிந்து திரும்பி வந்தார். அவர் எப்போதும் வழக்கமாக நடக்கும் அரண்மனை முற்றத்தின் நடைபாதை முழுக்கப் பூக்கள் நிரம்பியிருந்தது. 

அரசர் தலைமைத் தோட்டக்காரரைக் கூப்பிட்டு, “யார் இங்கே பூக்களை வளர்த்தது?”, என்று கடுமையாகக் கேட்டார்.

“எனக்கு ஒன்றும் தெரியாது அரசே! நான் இதைச் செய்யவில்லை”, என்று அவர் தலையைச் சொறிந்தார்.

mandhiramalai

“பின் வேறு யார் இப்பிடிச் செய்தது? இன்று யார் இங்கே இருந்தார்கள்?”, என்று கேட்டார் அரசர்.

“அரசே! இளவரசி டாஃபோடில் தவிர, வேறு யாரும் இல்லை”, என்றார் அவர்.

“சரி நீங்கள் போகலாம்”, என்றார் அரசர்.

அப்போது தான் தேவதை சொல்லியிருந்த விஷயம், அவருக்கு நினைவுக்கு வந்தது.

அன்றிரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, அரசரும், அரசியும் இந்த விஷயம் குறித்துத் தீவிரமாக ஆலோசனை செய்தார்கள்.

“குழந்தை டாஃபோடிலை எல்லா இடத்திலேயும் ஓட விடக்கூடாது. அதை எப்போதும் செய்யவே கூடாது.  மலர்ப் படுக்கையின் மீது மட்டுமே, அவள் நடக்க வேண்டும். மற்ற இடங்களில் அவளைத் தூக்கிக் கொண்டு போக வேண்டும். அது ஒரு வகையில் கஷ்டம் தான்; ஆனால் அது தான் நல்லது”, என்றார் அரசர்.    

“சரி”, என்றார் அரசி.

அதனால் டாஃபோடில் பூக்களால் அமைக்கப்பட்ட மலர்ப் படுக்கையின் மீது மட்டுமே நடந்தாள். அதனால் மற்ற குழந்தைகளுக்கு அவள் மீது பொறாமை ஏற்பட்டது. ஏனெனில் அவர்கள் நடை பாதை வழியாக மட்டுமே நடக்க அனுமதிக்கப்பட்டார்கள். ஒரு முறை மலர்ப்படுக்கை மீது நடந்தால் ஜாலியாக இருக்கும் என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் டாஃபோடிலோ மற்ற குழந்தைகள் போல், நடை பாதை வழியே ஓடினால் நன்றாயிருக்கும் என்று நினைத்தாள். 

அவளுக்கு ஐந்து வயதான போது, ஒரு நாள் அரண்மனை டாக்டர் அவள் உடம்பைச் சோதிக்க வந்தார். அவளது நாக்கை நீட்டச் சொல்லிப் பார்த்த டாக்டர், “இளவரசிக்கு நல்ல உடற்பயிற்சி தேவை. இவர் அங்குமிங்கும் ஓடியாட வேண்டும். மலை மீது ஏறவும்,உருளவும் வேண்டும். தத்தித் தாவிக் குதிக்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், இவர் இளவரசியாக இருந்தாலும், மற்ற குழந்தைகள் செய்வதை இவரும் செய்ய வேண்டும்”, என்றார்.

“துரதிர்ஷ்டவசமாக இவள் மற்ற குழந்தைகள் போலக் கிடையாதே!”, என்று சொன்ன அரசி, பெருமூச்சு விட்டபடியே சன்னல் வழியே வெளியே பார்த்தார். 

அரண்மனைத் தோட்டம் முடியும் கடைக்கோடியில் ஒரு குட்டிப் பச்சைமலை தெரிந்தது. அங்குப் பூக்களே இல்லை.  அரசி உடனே டாக்டர் பக்கம் திரும்பி, “நீங்க சொன்னது மிகவும் சரி. இவளும் மற்ற குட்டிப் பெண் குழந்தைகள் போலத் தான் இருக்க வேண்டும்”, என்றார்.

அரசி அரசரிடம் சென்று விபரத்தைச் சொன்னார்.  அரசர் அந்த குட்டி மலையை, இளவரசி டாஃபோடில்லுக்கே கொடுத்துவிட்டார்.

ஒவ்வொரு நாளும் இளவரசி டாஃபோடில் அங்கு சென்று விளையாடினாள். அங்கு நிறையப் பூக்கள் பூத்தன.  ஒவ்வொரு நாள் மாலையிலும், கிராமத்துக் குழந்தைகள் வந்து, அந்தப் பூக்களைப் பறித்துச் சென்றனர்.

அந்த மலையை அவர்கள் மந்திரமலை என்று அழைத்தனர்.  அன்றிலிருந்து மந்திர மலையில் எப்போதும் பூச்செடிகள் வளர்ந்து, பூக்கள் பூத்துக் கொண்டேயிருந்தன. குட்டிப் பையன்களும், பெண்களும் அங்கு மகிழ்ச்சியுடன் விளையாடிவிட்டு, பூக்களைப் பறித்துச் சென்றனர்.

(ஆங்கிலம் – ஏ.ஏ.மில்னே)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments