இதுவரை:
ஏற்கனவே மணல் தேவதை ஒன்றுடன் அறிமுகமாகி, அது தந்த வரங்களைப் பயன்படுத்திய நான்கு குழந்தைகளுக்கு இப்போது ஒரு மந்திரக் கம்பளமும் மந்திர ஃபீனிக்ஸ் பறவையும் கிடைக்கிறது. அவற்றின் உதவியுடன் சிறிய பயணம் செய்து திரும்புகின்றனர். கம்பளம் அழுக்காகி இருப்பதைப் பார்த்த அவர்களது பெற்றோர், இனி அதை எடுக்கக்கூடாது என்று கூறி அதை சுத்தம் செய்து மடித்து வைத்து விடுகின்றனர். இனி..
அத்தியாயம் 3
மந்திரக் கம்பளம் ரொம்பவே அழுக்காகி விட்டதால் பெரியவர்கள் அதை சுத்தம் செய்து ஒரு அலமாரியில் மடித்து வைத்து விட்டனர். ஃபீனிக்ஸ் பறவையும் எங்கே சென்றது என்றே தெரியவில்லை.
ஒரு வாரம் கழிந்த நிலையில் ராபர்ட், சிறில், ஜேன் மற்றும் ஆந்த்தியா நால்வரின் இளைய தம்பியான லேம்ப்புக்கு இருமல் அதிகமாக இருந்தது. “இது கக்குவான் இருமல். ரொம்ப ஆபத்தானது. நம்ம ஊர்ல குளிர் அதிகமா இருக்குறதால இந்த நோய் வந்திருக்குது”, என்று அவர்கள் வீட்டுப் பணிப்பெண் கூறினார்.
“தரை குளிரா இருக்கே.. தம்பிக்காக அந்தக் கம்பளத்தை எடுத்து கீழே விரிப்போமா அம்மா?”, என்று ஜேன் கேட்க, கம்பளத்தை எடுத்து விரித்துக் கொள்ள அவர்களது அம்மா அனுமதி கொடுத்தார்.
குழந்தைகளின் அறையில் கம்பளத்தை விரித்து அனைவரும் அமர்ந்திருக்கையில், திடீரென்று,
“ஆமா.. இந்த ஃபீனிக்ஸ் பறவை எங்கே போச்சு?”, என்று கேட்டான் சிறில்.
“இதோ வந்துட்டேன்!”, என்று கூறியபடியே வந்து நின்றது ஃபீனிக்ஸ் பறவை.
“நீ இவ்வளவு நாளா எங்கே போயிட்டே?”, என்று குழந்தைகள் கேட்க,
“கம்பளத்தை மடிச்சு வச்சிருந்ததால நானும் மறைஞ்சு போயிட்டேன்… ‘அன்பான, அழகான, அறிவான ஃபீனிக்ஸ் பறவையே! வா எங்கள் முன்னே!’ அப்படிங்கிற மந்திர வார்த்தைகளைச் சொல்லி இருந்தீங்கன்னா நான் வந்துருப்பேன்”, என்றது ஃபீனிக்ஸ் பறவை.
“ஹை! நல்லா இருக்கே இந்த மந்திரம்!”, என்று அதைக் கேட்டவுடன் கை தட்டிக் குழந்தைகள் ஆர்ப்பரித்தனர்.
“இன்னிக்கு லேம்ப்பையும் கூட்டிக்கிட்டுக் கம்பளத்துல ஏறி எங்கேயாவது போகலாம்.. வாங்க”, என்று ராபர்ட் கூற, அனைவரும் கிளம்பினர். லேம்ப்பிற்கும் புதிய ஆடைகளை அணிவித்து அவனையும் தயாராக வைத்தனர்.
அப்போது லேம்ப்பிற்கு மருந்து கொடுப்பதற்காக பணிப்பெண் அந்த அறைக்குள் வந்தார். ஃபீனிக்ஸ் பறவையைப் பார்த்தவுடன் அவருக்கு ஆச்சரியம். “இந்தப் பறவை எப்படி உங்களுக்கு கிடைச்சுது?”, என்று அவள் கேட்க, குழந்தைகளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“எல்லாரும் எங்கே கிளம்புறீங்க? லேம்ப்பை வேற தூக்கி வச்சுருக்கீங்க? அவனுக்கு இருமல் இருக்கு.. எங்கேயும் கூட்டிட்டுப் போகக் கூடாது”, என்றார் பணிப்பெண்.
“இந்தக் கக்குவான் இருமல் இல்லாத ஊர்ல நாம இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்!”, என்று ஆந்த்தியா கூறினாள்.
“அவ்வளவுதானே! போயிட்டா போச்சு!”, என்று ஃபீனிக்ஸ் பறவை கூற, கம்பளத்தின் மேல் நின்றிருந்த பணிப்பெண் உட்பட அனைவரும் அப்படியே கம்பளத்துடன் சேர்ந்து வானில் பறந்தனர்.
பணிப்பெண்ணிற்கு மிகுந்த அதிர்ச்சி. “ஐயோ! நாமெல்லாம் எங்கே போறோம்? இது எதுவும் கனவா?”, என்று அதிர்ச்சியுடன் கேட்டார்.
“இருமல் வராத ஊருக்குப் போகணும்னு ஆந்த்தியா சொன்னாளே.. அதான் நல்ல வெயிலா இருக்கிற ஒரு தீவுக்கு இப்ப நாம போய்க்கிட்டு இருக்கோம்”, என்று ஃபீனிக்ஸ் பறவை பதில் கூறியது.
சற்று நேரத்தில் ஒரு சிறிய தீவில் சென்று மந்திரக் கம்பளம் தரையிறங்கியது. பணிப்பெண் மட்டும் கம்பளத்தில் அமர்ந்திருக்க, குழந்தைகள், “நாங்க இந்தத் தீவை சுத்திப் பார்த்துட்டு வர்றோம்”, என்று தங்கள் தம்பி லேம்ப்பைத் தூக்கிக் கொண்டு நடந்து சென்றனர்.
அது வெப்பம் மிகுந்த பகுதி என்பதால் லேம்ப்பிற்கு இருமல் வெகுவாகக் குறைந்திருந்தது. தீவைச் சுற்றிப் பார்க்கச் சென்ற குழந்தைகள், அங்கு சில ஆதிவாசிகளைக் கண்டனர். குழந்தைகளைப் பார்த்த ஆதிவாசி ஒருவன், “இங்கே பாருங்க! ஏதோ வித்தியாசமா நாலஞ்சு பேர் வந்திருக்காங்க!”, என்று மற்றவர்களிடம் கூற, நிறைய ஆதிவாசிகள் அங்கு திரண்டு விட்டனர். குழந்தைகள் என்னவோ ஏதோ என்று பயந்து அங்கிருந்து வேகமாக வேறு புறம் சென்று விட்டனர்.
இதனிடையே கம்பளத்தில் அமர்ந்திருந்த பணிப்பெண், “ரொம்ப வெயிலா இருக்கே! ஏதாவது குளிர்ச்சியான இடத்தில் இருந்தா நல்லா இருக்கும்”, என்று தனக்குத் தானே வாய்விட்டுக் கூற, மந்திரக் கம்பளம் அவரைச் சுமந்து கொண்டு அருகிலிருந்த கடலில் விட்டு விட்டது.
குழந்தைகளைத் தேடிக் கூட்டமாக ஆதிவாசிகள் வர, அவர்கள் கண்களுக்கு தண்ணீருக்குள் மிதந்துகொண்டிருந்த பணிப்பெண் தென்பட்டார். “ரொம்ப காலம் முன்னாடியே நம்ம முன்னோர்கள் நம்மளை ஆட்சி செய்றதுக்கு ஒரு ராணி கடலுக்குள்ளே இருந்து வருவாங்கன்னு சொல்லி இருக்காங்களே.. இதுதான் அவங்க!”, என்று வயதில் பெரியவரான ஒரு ஆதிவாசி கூறி மணலில் பணிப்பெண்ணின் முன் விழுந்து வணங்க, அனைத்து ஆதிவாசிகளும் அவ்வாறே விழுந்து வணங்கினர்.
பணிப்பெண்ணிடம், “வாங்க ராணி அவர்களே! கடவுள் தான் உங்களை எங்ககிட்ட அனுப்பி வச்சிருக்கார். இனிமே நீங்க தான் எங்களுக்கு ராணியா இருக்கணும்!”, என்று கேட்டுக் கொண்டனர்.
திடீரென்று கிடைத்த அதிகபட்ச கவனிப்பில் பணிப்பெண் மகிழ்ந்து போனார். “இனிமே நான் உங்க வீட்டுல வேலை செய்ய வர மாட்டேன்.. இந்த தீவிலேயே ராணியா இருக்கிறேன்.. வேலை செஞ்சு செஞ்சு எனக்கு அலுத்துப் போச்சு!”, என்று அவர் கூற, குழந்தைகள் மட்டும் ஃபீனிக்ஸ் பறவையுடன் மந்திரக் கம்பளத்தில் ஏறி தங்கள் வீடு வந்து சேர்ந்தனர்.
அடுத்த நாள், “இந்த பணிப்பெண் எங்கே தான் போனாங்க?”, என்று அவர்களது அம்மா தேடினார்.
ஏற்கனவே அப்பா அம்மாவிடம் நடந்ததை மறைக்கிறோமே என்று ஆந்த்தியாவுக்கு குற்றவுணர்ச்சி இருந்தது. கம்பளம், ஃபீனிக்ஸ் பற்றியும் தீவில் நடந்தவற்றையும் ஆந்த்தியா அம்மாவிடம் கூறினாள். ஆனால், அம்மா அதை நம்பாமல், “உனக்கு நிறைய கற்பனை வளம் இருக்கு.. நீ பேசாம கதை எழுதப் போகலாம்”, என்று கூறி விட்டார். தீவுக்குச் சென்று வந்ததில் ஒரு நன்மையாக லேம்ப்பின் இருமல் முற்றிலும் குணமாகி விட்டது.
-தொடரும்.
குழந்தைகள் மத்தியில் இருப்பது எப்போதும் பிடிக்கும். ‘கதை சொல்லு கதை கேளு’ என்ற பெயரில் குழு ஒன்றை நடத்தி வருகிறேன். நாவல்கள், சிறுகதைகள், மருத்துவக் கட்டுரைகள் சில வருடங்களாக எழுதி வருகிறேன்.