இதுவரை,
சென்னையில் கடற்கரையோரம் அமைந்திருக்கும் மாமல்லபுர பல்லவர் காலச் சிற்பங்களைப் பார்வையிட ஷங்கரும் அவரது குடும்பத்தினரும் பயணப்படுகிறார்கள். செல்லும் வழியில் சாளுவக் குப்பத்தில் அமைந்திருக்கும் புலிக் குகையை பார்த்துவிட்டு அதன் அருகே இருக்கும் பலரால் பெரும்பாலும் அறியப்படாத அதிரணசண்ட மண்டபத்திற்கு வருகிறார்கள்.
இனி..
இதுவரை அவர்கள் கண்டிராத மண்டபமான அதிரணசண்ட மண்டபத்திற்கு அனைவரும் சென்றடைந்தனர். பல்லவ மன்னனான அத்யந்த காமன் என்பவர் சிவனுக்காக கட்டிய கோவிலாக இந்த மண்டபம் இருந்தது என்பதனை இங்கு உள்ள கல்வெட்டுகளிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. இந்த மண்டபத்தில் தற்போது இருக்கும் சிவலிங்கமும் வெளியே உள்ள நந்தியும் பிற்காலத்தில் வைக்கப்பட்டவையாக இருக்கிறது. மேலும் இங்கு உள்ள அதிக வேலைப்பாடுகள் இல்லாத தடிமனான எளிய தூண்கள், பழமையான பல்லவர் காலத்தை குறிக்கிறதென்றாலும், மற்றொரு பக்கம் அழகான பொலிவான சோமாஸ்கந்த உருவங்கள் சற்றே பிற்பட்ட பல்லவ காலத்தைக் குறிப்பதாக இருக்கிறது. ஒரே இடத்தில் இரு வேறு காலகட்டத்தைச் சேர்ந்த சிற்பங்கள் இங்கு உள்ளன.
இந்த மண்டபத்தில் இரண்டு முக்கிய கல்வெட்டுகளும் இடம்பெற்றுள்ளன. கோவிலின் பக்கச் சுவரில் உள்ள இந்த கல்வெட்டுகளில் ஒரு பக்கத்தில் பல்லவ கிரந்த எழுத்துகளாலும் மற்றொரு பக்கத்தில் மிகப்பழமையான தேவநாகரி எழுத்துகளாலும் செதுக்கப்பட்டுள்ளன. இரண்டு வகையான எழுத்துகளாக இருந்தபோதிலும் அவற்றில் அடங்கியிருக்கும் சமஸ்கிருத செய்யுள்களின் வாசகங்கள் ஏறக்குறைய ஒன்றாகவே உள்ளது.
வேறு எந்த பல்லவர் கால கோவில்களின் அர்த்த மண்டபத்திலும் இல்லாத சோமாஸ்கந்தரின் இரண்டு புடைப்புச் சிற்பங்கள் இந்த கோவிலின் அர்த்த மண்டபத்தில் காணப்படுகின்றன. குகைக் கோவிலின் முன்பு தெற்குப் புறத்தில் இருக்கும் ஒரு சிறு இயற்கைப் பாறையின் மீது தேவி மகிஷாசுரனுடன் போரிடும் காட்சி சித்தரிக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி திறந்தவெளி புடைப்புச் சிற்பம் அமைந்துள்ளது. மாமல்லபுரத்துச் சிறப்பான மகிஷாசுரமர்த்தினி மண்டபத்திலுள்ள சிற்பத்தை விட இது உருவில் சிறியதெனினும், சிற்பங்கள் உயிரோட்டமாக உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அசுரனை விரட்டுவதற்குத் தயாராக, துர்க்கை சிங்க வாகனத்திலிருந்து இறங்கிக் கொண்டிருக்க, அசுரன் புறமுதுகிட்டு ஓடிக் கொண்டிருப்பதை போல சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கிறது.
தேவியானவள் தனது வலது காலைத் தாமரை மலர் மேல் ஊன்றியும், இடதுகாலை சிம்மத்தின் மீது அமர்த்தி வில் பிடித்துப் போரிடுவது போலவும், முகத்தில் வெற்றியின் அறிகுறி கொண்டு தனது ஆறு கைகளுடன் விளங்குகிறாள். அவளுக்குப் பின்னால் கணங்கள் என்று சொல்லப்படுகின்ற தேவதூதர்கள் களிப்புடனும், தப்பியோடும் அசுரப் படை வீரர்களின் முகத்தில் பயம் கலந்த சோர்வு தெளிவாகத் தெரியும் படியும் அமைந்து சிற்பங்கள் சிரஞ்சீவித் தன்மையான உயிரோட்டத்துடன் உள்ளது. வெண்குடை இழந்த அரசன் தோல்விக்கான முகத்துடனும் சிறிது பிளந்த வாயுடன் பெருமூச்சால் விரிந்திருக்கும் நாசியுடன் ஓடும் காட்சியை உயிரோட்டத்துடன் வடித்துள்ள சிற்பி, போர்க் காட்சிகளை நம் கண்முன் நிஜமாகவே நடந்து கொண்டிருப்பதைப் போல கண்களுக்கு விருந்தளித்திருக்கிறார்.
இவ்வாறான அழகு மிகுந்த சிற்பங்களை நேரில் கண்டு களித்து அவ்விடம் விட்டு நகர்ந்து, மாமல்லபுரத்து மனம் கவரும் ரதங்களான ஒற்றைக்கல் ரதங்களைக் காணப் பயணித்தார்கள்.
கற்களாலும், சுண்ணாம்பாலும் கட்டப்பட்ட கோவில்களின் நகல்களாக அமைந்துள்ள ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட சிற்ப வடிவங்கள் பல்லவர்களால் தான் முதன்முதலில் உருவாக்கப்பட்டன என்றாலும், அவர்களும் மாமல்லபுரத்தைத் தவிர வேறெங்கும் இது போன்ற முயற்சியை செய்யவுமில்லை.
இங்கு பஞ்ச பாண்டவ ரதங்கள் எனப்படும் ஐந்து முக்கியமான ரதங்களைத் தவிர கணேச ரதம் என்ற ஒன்றும் உள்ளது. இன்னும் சற்றுத் தொலைவில் இரண்டு பிடாரி ரதங்களும், வலையன் குட்டை ரதம் என்ற ஒன்றும் அமைந்துள்ளது. இவற்றைத் தவிர சில ரதங்கள் ஆரம்பிக்கப்பட்டவுடன் தொடராமல் நிறுத்தப்பட்ட நிலையில் அமைந்து புதிராக இருக்கிறது. ஒரே மாதிரி இல்லாமல் வித்தியாசமான படைப்புகளில் பல்லவர்கள் தனது திறமையைக் காட்டியுள்ள இந்த ஒற்றைக்கல் ரதங்களைப் பற்றி அங்கு சென்ற பின் அலசுவோம்.
இன்னும் செல்லும்..