மாதவம் செய்த மாதவர் மாண்பை
மண்ணில் மனிதர் நாளும் போற்றிட
மங்கையர் எதிலும் சிறந்து விளங்கிட
மீசைகாரன் அன்றே சொன்னது போல
மனதில் உறுதி வேண்டும் – நம்
மக்கள் மனதில் என்றும் துணிவு வேண்டும்
அடுப்படி அல்ல அம்மாவின் அறை
அவளுக்கும் தனி திறமையுண்டு
அதில் ரசித்து களைத்திட ஆசையுண்டு என்று
நம் மனதில் நாம் பதிந்திட வேண்டும்
அடக்கம் என்பது பெண்ணின சிறை
அவளுக்கும் தனி இலக்குண்டு
அதில் உயர்ந்து பறந்திட மனவுறுதியுண்டு என்று
நம் மனதில் நாம் பதிந்திட வேண்டும்
ஆடை என்பது அவரவர் வரையறை
அவளுக்கு மட்டும் தனி விதிக்கொண்டு
அதில் ஆபாசம் திணிப்பது படும்பார்வை என்று
நம் மனதில் நாம் பதிந்திட வேண்டும்
இத்தனை மணிக்குள் வீட்டுக்குள் நுழை
ஆண்டாண்டு காலமாக அம்மா சொல்வது
அண்ணனுக்கும் தம்பிக்கும் பொருந்தும் என்று
நம் மனதில் நாம் பதிந்திட வேண்டும்
ஆறும் கடலும் நதியும் மலையும்
அடிக்கும் காற்றும் பெருகும் வெள்ளமும்
தாங்கி வருவது பெண்ணின் பெயர்
என்றாலும் இன்னமும் வீட்டுப்பெண்களின்
அடுப்படி தவம் யாரின் துயர்!
பட்டது கெட்டது விட்டது கேட்டது போதும்
கற்றது பெற்றது விதைத்திட வேண்டும்
கல்வியும் கனவும் கூப்பிடும் தூரம்
விரியும் வானத்தின் யாசகம் தீரும்
வேண்டும் வேண்டும் மனதில் உறுதி வேண்டும்
மங்கையர் மாண்பை தினம் போற்றிட வேண்டும்
மீண்டும் மீண்டும் மனதில் பதிந்திட வேண்டும்
சகமனிதி அறம் போற்றும் பேரன்பு
மண்ணில் என்றும்செழித்திட வேண்டும்!