வணக்கம் குழந்தைகளே,
தேர்வு முடிந்து கோடை விடுமுறை வரப்போகிறது, விடுமுறையில் என்ன செய்யலாம் என்று இங்கே பெங்களூரில் வசிக்கும் நான்கு தமிழ் நண்பர்கள் என்ன பேசி கொள்கிறார்கள்?
வாங்க பார்ப்போம்!
அஞ்சனா, “நான் எங்க பாட்டி வீட்டுக்குப் போகப் போறேன், அங்க போய் ஜாலியா விளையாடலாம், என்னோட சித்தப்பா பொண்ணு அபர்ணாவும் வருவா, நாங்க மோட்டார்ல போய்க் குளிப்போம், புளியமரத்தடியில ஓடிப் பிடிச்சி விளையாடுவோம், மாடு கண்ணுக் குட்டிக்குப் புல் அறுக்க ஆச்சி கூட வயலுக்குப் போவோம், அந்த ஊர்ப் புள்ளைங்க கூட வித்தியாசமான விளையாட்டுலாம் விளையாடலாம். பல்லாங்குழி விளையாடுவாங்க, ஐந்து கல்லுப் பிடிச்சு விளையாடுவோம், தாயம் விளையாடுவோம், கோலம் போடுவோம்”.
சம்யுக்தா, “கேட்கவே ஜாலியா இருக்கு அஞ்சு, எனக்கு எங்க தாத்தாவும், பாட்டியும் இங்கதான் இருக்காங்க, அதுனால ஊருக்கு எப்பவாது தான் போவோம், இந்த லீவுல ஸ்பேனிஷ் கத்துக்கலாம்னு எங்க அம்மா சொன்னாங்க, ஆனா எனக்கு பெருசா விருப்பமே இல்லை, சரி அப்போ வேற ஏதாவது கத்துக்க ஆசைனா சொல்லச் சொல்றாங்க”.
மித்ரா அக்கா, “ஹே சமி (சம்யுக்தா), இது ஒரு நல்ல வாய்ப்பு, நீ ஸ்பேனிஷ் கத்துக்கலாம், நம்ம பூஞ்சிட்டுப் புத்தகத்துல பிற மொழிக் கதைகள் படிச்சிருக்கோம்ல, எவ்வளவு ஆச்சரியமான கற்பனைக் கதைகள்லாம் படிச்சோம், நீ ஸ்பேனிஷ் கத்துக்கிட்டா அதுல உள்ள கதைலாம் நீ எங்களுக்குத் தமிழ்ல சொல்லலாம். அந்த மொழிக் கதைகள் மூலமா நாம அந்த நாட்டு மக்கள், இடம், அவங்க வாழ்க்கை முறை எல்லாம் தெரிஞ்சிக்கலாம் சமி. அது மட்டும் இல்ல உலகத்துலயே சைனிஸ்க்கு அப்புறம் ஸ்பானிஷ் தான் இரண்டாவது அதிக மக்கள் பேசும் மொழி, மத்த மொழிகள் படிக்க வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்திக்கலாம், நாம பெரிய வகுப்பு போயிட்டா பாடங்களைப் படிக்கவே நேரம் சரி ஆகிடப் போகுது”.
சம்யுக்தா, “சூப்பர் மித்து அக்கா, எனக்கும் இப்போ பிற மொழிகள் கத்துக்க ஆர்வம் வந்துட்டு, ஒவ்வொரு லீவுலயும் ஒவ்வொரு மொழி கத்துக்கலாம்னு தோணுது”.
மித்து, “சூப்பர் ஜாலி, நானும் இங்கதான் நிறைய நாள் இருப்பேன், ஒரு வாரம் மட்டும் ஊருக்குப் போறேன், இங்க இருக்கும்போது எங்க அம்மா கிட்டயே தையல், சமையல் கத்துக்கலாம் இருக்கேன், என்னோட சுடிதார் நானே தச்சா ஜாலியா இருக்கும்ல. அப்புறம் நானே ஸ்நாக்ஸ் செய்து உங்களுக்கு எடுத்துட்டு வரலாம்”.
சம்யுக்தாவும் அஞ்சுவும், “அக்கா எங்களுக்கும் தச்சுக் குடுங்க, நீங்க செய்யற பண்டம்லாம் சாப்புட்ற மாறி இருக்குமான்னு சொல்லிச் சிரிச்சாங்க”.
மித்து அக்கா, “கண்டிப்பா, பண்டம் சாப்பிட்டு பார்த்து நல்லா இருந்தா தான் உங்களுக்குக் குடுப்பேன், அடுத்த வருஷம் உங்களுக்கும் தையல் சொல்லித் தர்றேன், “
பிரணவ், “உங்க விடுமுறை கொண்டாட்ட திட்டம் எல்லாம் நல்லா இருக்கு, நான் ஸ்கேட்டிங்கும் கீ போர்டும் கத்துக்க போறேன். அப்படியே நிறைய சிறுவர் கதைகள் புத்தகம் அப்பா வாங்கிருக்காங்க அது படிக்கலாம்னு நினைச்சிருக்கேன், படிச்சிட்டு உங்களுக்கும் கதை சொல்றேன்”.
“ஹையா ஜாலி!” என எல்லோரும் மகிழ்ச்சியாக வீட்டுக்குச் சென்றனர்.