எங்கள் வீட்டு வாழை மரம்
எனக்கு மிகவும் பிடித்த மரம்!
அழகான பச்சை நிறம்
கண்ணைக் கவரும் நல்ல நிறம்!
ருசியான விருந்துணவும்
வாழை இலையில் சாப்பிடலாம்!
குலை குலையாய் வாழைக்காயும்
பூவும், தண்டும் தரும் மரம்!
வகை வகையாய் அம்மாவும்
சமைத்து நமக்குத் தருகிறாள்!
இனிப்பான வாழைப்பழம்
உண்டு நாமும் மகிழ்ந்திடலாம்!
வெற்றிலை, பாக்குத் தட்டிலும்
வீற்றிருக்கும் வாழைப்பழம்!
வீட்டில் நல்ல நிகழ்ச்சி என்றால்
வாழை மரம் வரவேற்கும்!
வாழை இல்லாக் கொண்டாட்டம்
ஊரில் எங்கும் நடப்பதில்லை!
வாழை நாரும் பூத் தொடுக்க
மாலை கட்ட நமக்குதவும்!
வாழை நாரில் பட்டு நெய்து
பகட்டாக உடுத்திக் கொள்வோம்!
வாழையடி வாழை என்று
வம்சம் வளர வாழ்த்துரைப்பர்!
வாழை போல வாழ்ந்திடுவோம்!
வாழ்வில் நாமும் சிறந்திடுவோம்!
வங்கி வேலை, கணித ஆசிரியை அவதாரங்களுக்குப் பிறகு இப்போது எழுத்தாளர். அதுவும் சிறுவர் கதைகள் எழுத மனதிற்குப் பிடிக்கிறது. மாயாஜாலங்கள், மந்திரவாதி கதைகள் எழுத ஆசை. பூஞ்சிட்டு இதழ் மூலமாக உங்களுடன் உரையாடத் தொடர்ந்து வரப் போகிறேன். மகிழ்ச்சியுடன் நன்றி.