கையில் இரண்டு பைகளிலும் தூக்க முடியாமல் சாமான்களைத் தூக்கிக் கொண்டு லட்சுமி விரைவாக நடந்து வந்தாள். இருட்ட ஆரம்பித்திருந்தது.

வீட்டில் குழந்தைகள் பாவம் பசியுடன் காத்துக் கொண்டிருப்பார்கள். லட்சுமியின் கடாட்சம் பெயரில் மட்டுமே அவளுக்கு. லட்சுமியின்

கணவன் சில வருடங்களுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டான். ஏழைத் தாய் லட்சுமி கஷ்டப்பட்டு உழைத்துத் தன் குழந்தைகளை வளர்த்து வருகிறாள். எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் கல்வி முக்கியம் என்று கருதியதால், குழந்தைகளை அவர்களுடைய வீட்டுக்கு அருகே இருக்கும் அரசாங்கப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்கிறாள்.

இரண்டு சின்னக் குழந்தைகளை அவள் கையில் கொடுத்து விட்டுக் கணவன், இளம் வயதிலேயே மேலுலகிற்குச் சென்று விட்டான். பணம் காசு எதுவும் கையில் இல்லை. உறவினர் யாரும் அப்போது அவளுக்கு உதவ முன் வரவில்லை.

குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ஒரு பையுடன் துணிவாக டிரெயின் ஏறி சென்னை வந்து விட்டாள்.

வந்தாரை வாழ வைக்கும் சென்னை மாநகரில் தஞ்சம் புகுந்து விட்டாள். கடற்கரைப் பகுதியில் திருவான்மியூர், பெசண்ட் நகர் இரண்டுக்கும் நடுவில் மீனவர் குடியிருப்புப் பகுதி அருகே ஒண்டுக் குடித்தனம். இட்லிக்

கடை போட்டு பிழைப்பு நடத்திக் கொண்டு வாழ்கிறாள். ஏதோ வருமானம் வந்து கொண்டிருக்கிறது. நாள் முழுவதும் வேலை இருந்து கொண்டே இருக்கும்.

இரண்டு குழந்தைகளில் பெரியவள் அம்பிகா. சிறியவன் கதிர். பொறுப்பான குழந்தை. அம்மா படும் கஷ்டத்தை உணர்ந்து படிக்கும் குழந்தைகள். அம்மாவிற்கும் முடிந்த அளவு ஏதாவது உதவி செய்து கொண்டு படிப்பிலும் கவனம் செலுத்தி வரும் நல்ல குழந்தைகள். அநாவசியச் செலவு வைக்க மாட்டார்கள்.

அன்று லட்சுமி, வீட்டுக்குத் தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்கள் வாங்கிக் கொண்டு சந்தையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தாள். திடீரென ஞாபகம் வந்தது. மார்க்கெட்டிற்குப் பக்கத்தில் இருந்த கடையில் ஒரு சின்ன கார் பொம்மை கேட்டிருந்தான் கதிர். அவனுடைய நீண்ட நாள் ஆசை அது.

சாமான்களைப் பார்த்துப் பார்த்து வாங்கியதில் மறந்து போயிருந்தாள் லட்சுமி. பாவம் குழந்தை சாதாரணமாகக் கேட்க மாட்டான். ஏனோ

தெருவில் மற்ற குழந்தைகள் விளையாடியதைப் பார்த்து விட்டு ஆசைப்பட்டுக் கேட்டு விட்டான். சின்னக் குழந்தை தானே!

அம்மாவின் கஷ்டம் தெரிந்த குழந்தை தான். இன்று அதிசயமாய்க் கேட்டு விட்டான். வாங்காமல் வந்து விட்டோமே என்று வருத்தப் பட்டாள் லட்சுமி. வீட்டுக்கு அருகில் இருந்த கடைகள் எல்லாம் அன்று விடுமுறை. மார்க்கெட் பக்கத்தில் இருந்த அந்த ஒரு கடை தான் அன்று திறந்திருக்கும்.

திரும்ப அவ்வளவு தூரம் நடந்து செல்ல லட்சுமிக்கும் உடம்பில் தெம்பு இல்லை. மனதில் குமைந்து கொண்டே வீட்டில் நுழைந்தாள். குற்ற உணர்ச்சி அவளை வருத்தியது. குழந்தைகள் அவளைக் கண்டதும் ஓடி வந்தன. வழியில் வாங்கி வந்த பலாப் பழத்தைக் கொடுத்து விட்டு

கதிரைப் பார்த்துச் சொன்னாள்.

“கதிர், அம்மா மார்க்கெட்டில் கார் பொம்மை வாங்க மறந்துட்டேன். அடுத்த வாரம் வாங்கித் தரேன்”, என்றாள்.

“பரவாயில்லைம்மா. அடுத்த வாரம் வாங்கித் தாங்க, அது போதும் எனக்கு. நான் என் ஃப்ரண்ட் கூட வெளயாடப் போறேன் இப்ப. வேற பொம்மை வச்சு வெளையாடறேன்மா”, என்று பதில் சொன்னான்.

சின்னக் குழந்தையாக இருந்தாலும் கதிர் தனது ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு சொன்னான். அடுத்த நாள் காலையில் விரைவில் எழுந்து இட்லிக்கடை வேலைகளை ஆரம்பித்துக் கொண்டே குழந்தைகளை எழுப்பி விட்டாள் லட்சுமி.

அதிகாலையில் வேலைக்குப் போகும் பல தொழிலாளிகள் வசிக்கும் இடம் என்பதால் காலையில் வேலைப் பளு லட்சுமிக்கு அதிகமாகவே இருக்கும்.

குழந்தைகள் தயார் ஆனதும் கதிரைக் கூப்பிட்டு இருபது ரூபாய்ப் பணத்தை அவன் கையில் கொடுத்தாள்.

“ஸ்கூல் பக்கத்தில் ஏதாவது கடை இருந்தால் கார் பொம்மை வாங்கிக்கோ”.

கதிர் தயங்கித் தயங்கிப் பணத்தை வாங்கிக் கொண்டான்.

“கதிர், பரவாயில்லை, வாங்கிக்கோ. உனக்குப் பிடிச்சதாப் பாத்து வாங்கிக்கோ. அம்பிகா,நீயும் தம்பியோட சேந்து கடைக்குப் போய் வாங்கிக் கொடு. என்ன, சரியா? பணம் ஜாக்கிரதை”, என்று சொல்லிப் பணத்தைக் கதிரின் கைகளில் திணித்தாள் லட்சுமி.

குழந்தைகள் பையை எடுத்துக் கொண்டு ஸ்கூலுக்குக் கிளம்பினார்கள். குழந்தைகள் திரும்பி வருவதற்குள் வேலைகளை முடித்துக் கொண்டு அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள் லட்சுமி. மாலையில் ஸ்கூலில் இருந்து வரும் போதே மகிழ்ச்சியுடன் வந்தார்கள் இருவரும்.

லட்சுமியும் வேலைகளை முடித்துவிட்டுக் காத்துக் கொண்டிருந்தாள்.

“என்ன கார் பொம்மை வாங்கிட்டயா கதிர்?”.

“இல்லைம்மா. இன்னைக்கு ஸ்கூலில் தீவிரவாதத்தால் உயிரிழந்த ராணுவவீரர்களோட குடும்பத்தினருக்கு நிதியுதவி செய்ய உண்டியல் வச்சிருந்தாங்க. நாங்க இரண்டு பேரும் யோசிச்சுப் பாத்தோம். நீங்க குடுத்த இருபது ரூபாயை அந்த உண்டியலில் போட்டோம். பாவம் இல்லையாம்மா அந்தக் குடும்பத்துக் குழந்தைகள்? எனக்கு பொம்மை வேண்டாம்மா. அப்புறமா வாங்கிக்கலாம். நீங்க கவலைப் படாதீங்க. நான் கேக்க மாட்டேன்”, என்று சொன்னான் கதிர்.

First aid
படம்: அப்புசிவா

பெருமையுடன் குழந்தைகளைப் பார்த்த லட்சுமி,

“என் குழந்தைகள் வாழ்க்கையில் தோற்கவே மாட்டார்கள்”, என்று

எண்ணியபடி அவர்கள் இருவரையும் வாரி அணைத்தாள்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest
0 கருத்துகள்
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments