இதுவரை:
ஒரு மந்திரக் கம்பளமும் அதனுடன் சேர்ந்து ஒரு மந்திர ஃபீனிக்ஸ் பறவையும் நான்கு குழந்தைகளின் கைகளில் கிடைத்தது. அதை வைத்து அவர்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்று பல சாகசங்களைச் செய்து வந்தார்கள். தங்கள் சாகசங்கள் பற்றி அவர்களது அம்மாவிடம் கூற, அவர் எதையும் நம்பவில்லை. இனி..
அத்தியாயம் 4
“அம்மா நாம சொல்றதை நம்பவே இல்லை எப்படியாவது அவங்களை நம்ப வைக்கணும்”, என்று ஆந்த்தியா மற்றவர்களிடம் கூறினாள்.
அதற்கு சிறில், “ஞாபகம் இருக்கா? அம்மா ரொம்ப நாளா இந்தியாவில் கிடைக்கக்கூடிய கலைப்பொருட்கள் வேணும்னு ஆசையாக் கேட்டிருந்தாங்க.. நாம கம்பளத்தில் பறந்துபோய் அதை எல்லாம் வாங்கிட்டு வரலாம். அப்ப நம்புவாங்க இல்ல?”, என்று கேட்டான்.
நல்ல யோசனை என்று மற்றவர்களும் ஆமோதிக்க கம்பளத்தை விரித்து அதில் அமர்ந்த நான்கு பேரும், “இந்தியக் கலைப் பொருட்கள் கிடைக்கும் இடத்துக்குப் போகணும்”, என்றார்கள்.
அவ்வளவுதான்! ஜிவ்வென்று அடுத்த நொடி வானத்தில் பறந்த அவர்கள் விரைவிலேயே ஒரு கடைத்தெருவுக்குச் சென்று இறங்கினார்கள். இவர்கள் பறந்து வந்து இறங்கியதை அனைவரும் அதிசயமாக வேடிக்கை பார்க்க, கடைத்தெருவுக்கு வந்திருந்த அந்த நாட்டு ராணி குழந்தைகளை அவளிடம் அழைத்து வரச் சொன்னார்.
“நான் தான் இந்த நாட்டோட ராணி. எனக்கு இந்த மந்திரக் கம்பளம் வேணும்!”, என்று அதிகாரமாகக் கேட்டார் ராணி.
“ஐயோ! இப்போ என்ன பண்றது?”, என்று குழந்தைகள் தவித்தனர்.
ராபர்ட்டுக்கு ஒரு யோசனை தோன்றியது. “எங்க பள்ளிக்கூடத்துல இதே மாதிரி கடைத்தெரு அமைச்சு வியாபாரம் பண்றதுக்காக ஒரு விழா ஏற்பாடு பண்ணி இருக்காங்க.. அதுல விக்கிறதுக்கு எங்களுக்கு நிறைய கலைப் பொருட்கள் தர முடியுமா? அப்படித் தந்தீங்கன்னா நாங்க உங்களுக்குக் கம்பளத்தை தர்றோம்”, என்றான்.
“சரி!”, என்று கூறிய ராணி தன் செலவில் நிறைய கலைப்பொருட்களை வாங்கி ஒரு மூட்டையாகக் கட்டி குழந்தைகளிடம் தந்தார். அப்போது வரை குழந்தைகள் கம்பளத்தின் மேல் தான் நின்றிருந்தனர். அவர்கள் இறங்கி விட்டுக் கம்பளத்தைத் தனக்குத் தருவார்கள் என்று ராணி ஆவலுடன் எதிர்பார்த்திருக்க,
“இப்ப நாங்க எங்களோட பள்ளிக்கூட விழாவுக்குப் போகணும்!”, என்று ஆந்த்தியா கம்பளத்திடம் கூறினாள்.
அடுத்த நொடியே குழந்தைகளுடனும், பரிசுப்பொருட்களுடனும் கம்பளம் மேலே பறந்து சென்றுவிட்டது. ராணியும் மற்றவர்களும் கீழே ஏமாற்றத்துடன் பார்த்தபடி நின்றிருந்தனர். பள்ளிக்குச் சென்று இறங்கிய குழந்தைகள் சரியாக இரண்டு கடைகளுக்கு நடுவில் இருந்த சிறு பகுதியில் மாட்டிக்கொண்டனர். அதிலிருந்து மெதுவே அவர்கள் வெளியே வர, அந்த இடைவெளிக்கு இடது பக்கம் இருந்த கடைக்காரர் ஆன திருமதி பிடில் என்பவர் அவர்களைக் கோபித்துக் கொண்டார்.
“ஏன் என் கடைக்குப் பின்பக்கமாய் இருந்து வர்றீங்க? எதுவும் பொருளைத் திருட வந்தீங்களா?”, என்று அவர் மிரட்ட,
“இல்லை இல்லை! இது எங்களோட பொருட்கள்”, என்று கூறினான் ராபர்ட்.
அந்த அழகிய கலைப்பொருட்களைப் பார்த்த திருமதி பிடில், அதைத் தான் அபகரிக்கலாம் என்ற எண்ணத்தில், “இதெல்லாம் என்னோட பொருட்கள்.. என் கடையில் தான் இருந்தது”, என்றாள்.
இதற்கிடையே இந்த சத்தத்தைக் கேட்டு வலதுபுற கடைக்காரரான திருமதி பி. பீஸ்மார்ஷ் அந்த இடத்திற்கு வந்தார். “என்னாச்சு?”, என்று விசாரித்த அவர்,
“இந்தப் பொருட்கள் எல்லாமே ரொம்ப அழகா இருக்கு.. நானே விலை கொடுத்து வாங்கிக்கிறேன்”, என்று குழந்தைகளிடம் அந்தப் பொருட்களுக்கு உரிய தொகையைக் கொடுத்துவிட்டு அவற்றை வாங்கிச் சென்றார்.
குழந்தைகள் கலைப்பொருட்களை திருமதி. பீஸ்மார்ஷிடம் ஒப்படைப்பதில் மும்முரமாக இருக்க, திருமதி பிடில் திருட்டுத்தனமாக மந்திரக் கம்பளத்தைச் சுருட்டி தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டாள்.
“ஐயையோ!”, என்று பதறிய குழந்தைகள் அவளைத் தொடர்ந்து சென்று அவள் வீட்டிற்குள் நுழைந்தனர். “என் வீட்டுக்குள் நுழைய உங்களுக்கு அனுமதி இல்லை.. வெளியே போங்க!”, என்று திருமதி பிடில் குழந்தைகளை விரட்டினார்.
ஜேன், அங்கு விரித்து வைக்கப்பட்டிருந்த கம்பளத்தைக் காட்டி சைகை செய்தாள். விறுவிறுவென்று அதில் ஏறிய குழந்தைகள், “திருமதி பிடில் நல்லவங்களா மாறணும்!”, என்று வரம் கேட்டனர். என்ன நடந்ததோ தெரியவில்லை, அதுவரை சிடுசிடுவென்றிருந்த திருமதி பிடில் மிகவும் அன்பாகப் பேச ஆரம்பித்து விட்டார்.
குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி, அவரே கம்பளத்தைச் சுருட்டிக் குழந்தைகளின் கையில் கொடுத்துவிட்டார். “ஹையா! இந்த கம்பளம் நமக்கு நல்லா உதவி செய்யுதே! மணல் தேவதை கொடுத்த வரங்கள் மாதிரி இல்லாம இந்த கம்பளம் கொடுக்கக்கூடிய வரங்கள் நிஜமாவே பயனுள்ளதா இருக்கு!”, என்று ராபர்ட் கூற, அனைவரும் “ஆமாம்!”, என்று அதை ஏற்றுக்கொண்டனர்.
ஆந்த்தியாவுக்கு திடீரென்று ஒரு எண்ணம் தோன்றியது. “நாம இந்தக் கம்பளத்தை வெச்சு கஷ்டத்துல இருக்கிறவங்க யாருக்காவது உதவி செஞ்சா என்ன?”, என்று கேட்டாள்.
“செய்யலாமே! ஃபீனிக்ஸ் பறவையைக் கேட்டுட்டு செய்வோம்”, என்று நான்கு பேரும் முடிவெடுத்தனர்.
-தொடரும்.
குழந்தைகள் மத்தியில் இருப்பது எப்போதும் பிடிக்கும். ‘கதை சொல்லு கதை கேளு’ என்ற பெயரில் குழு ஒன்றை நடத்தி வருகிறேன். நாவல்கள், சிறுகதைகள், மருத்துவக் கட்டுரைகள் சில வருடங்களாக எழுதி வருகிறேன்.