குழந்தைகளே, இந்த கோடை காலத்தில், உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், வெப்பத்தில் இருந்து உங்களை காத்துக் கொள்ளவும், பல வகையான நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடுகிறீர்கள் தானே? அப்படி நீங்கள் சாப்பிடும் பழங்களில் நிறைய விதைகள் இருக்கும் அல்லவா. எடுத்துக்காட்டாக, தர்பூசணி, முலாம்பழம் போன்ற பழங்களில் நிறைய விதைகள் இருக்கிறதா? பழத்தை சாப்பிட்டு விட்டு, அந்த விதைகளை சேகரித்து, கழுவி, நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை வைத்து தான் இன்றைக்கு அழகிய கைவினை செய்யப் போகிறோம். தர்பூசணி, முலாம்பழ விதைகள் தவிர, வெள்ளரிப்பழ விதைகள், பரங்கிக்காய் விதைகள், வெண்பூசணி விதைகள் கூட பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்
தர்பூசணி / வெள்ளரிப்பழ / முலாம்பழ / பரங்கிக்காய் விதைகள்
பசை
செய்முறை
உங்களுக்கு விருப்பமான படத்தை வரைந்து கொள்ளுங்கள். நான் இங்கு ஒரு பறவை வரைந்துள்ளேன். பறவையின் உடல் மற்றும் இறக்கைகளுக்கு இருவேறு விதமான விதைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பசை கொண்டு விதைகளை ஒட்டுங்கள். இப்போது, விதைகள் கொண்டு செய்த பறவை ஓவியம் தயார். விதைகளுக்கு வேறு நிறங்கள் கொடுக்க விரும்பினாலும், வண்ணம் தீட்டிக் கொள்ளலாம்.

இதே போல், நீங்கள் வேறு பறவைகள், மரம் இப்படி நீங்கள் விரும்பியதை விதைகள் கொண்டு அலங்கரித்து மகிழலாம். செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் குழந்தைகளே.