கோல்டன் தமிழச்சி – 7

முதியோர் இல்லத்தில் நடந்த அந்த சாகசத்துக்குப் பிறகு வேறு எந்த சாகசத்துக்கும்  வாய்ப்பு இல்லாதபடி தாமரையின் வாழ்க்கை  இயல்பாகச் சென்று கொண்டிருந்தது.

அவளுடைய சித்தியின் வேலையும் அந்தப் பள்ளியில் நிரந்தரமாகி விட்டதால், பள்ளியின் நிர்வாகத்தினர் பள்ளியின் வளாகத்துக்கு உள்ளேயே அவர்களுக்குத் தங்குவதற்கு ஒரு சிறிய வீடும் கொடுத்து விட்டார்கள். தாமரையும், அவளுடைய தம்பி மற்றும் தங்கையும் அதே பள்ளியில் படித்து வந்தார்கள்.

தாமரையின் கல்வியில் நடுவில் இடைவெளி ஏற்பட்டு இப்போது தொடர்ந்ததால், முதலில் கொஞ்சம் அவளுக்குத் தடுமாற்றம் இருந்தது. ஆனால் அவளுடைய நல்ல குணங்களால் அனைவருக்கும் அவளைப் பிடித்திருந்தது. அவள் கூடப் படித்த மற்ற மாணவர்களும், ஆசிரியர்களும் அவளுக்கு உதவி செய்ததால் அவளுடைய கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதனுடன் அவளுக்கு இயல்பாகவே இருந்த புத்திசாலித்தனமும், உழைப்பும் அவளை சரியான பாதையில் இட்டுச் சென்றன.

தாமரை இப்போது ஆறாவது வகுப்பில் இருந்தாள். அவளுடைய வயதுக்கு இது கம்மி தான் என்றாலும் தாமரை அதைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை.

” கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்

     நிற்க அதற்குத் தக”

என்ற திருக்குறளில் சொல்லி இருந்தபடி, கசடறக் கற்க வேண்டியது மிகவும் முக்கியம் என்று தாமரையும் கருதியதால், தனது வகுப்பில் தன்னை விட வயதில் குறைந்தவர்களுடன் சேர்ந்து படிப்பதில் தாமரைக்கு எந்தவிதத் தயக்கமோ, வருத்தமோ இல்லவே இல்லை.

தாமரை, முதன்முதலில் மின்மினியைச் சந்தித்த அந்த வனப்பகுதிக்கு வாரத்துக்கு ஒரு முறையாவது போய் விட்டு வருவாள். அன்று சாயந்திர நேரத்தில் அதே போல, தாமரை சென்றிருந்தாள். வனப் பகுதிக்குள் மின்மினியைச் சந்தித்த அந்த ஆற்றங்கரைக்குப் போய் ஓடுகின்ற ஆற்று நீரை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றாள். அங்கிருந்து அப்படியே நடந்து சென்று மரங்கள் அடர்ந்திருந்த வனப்பகுதிக்குள் நுழைந்து, ஒரு பெரிய மரத்தடியில் நின்று கொண்டு பழைய நினைவுகளை மனதில் அசை போட்டாள்.

அப்போது அவளுடைய காதில் எங்கோ மரம் வெட்டும் சத்தம் கேட்டது. வனப்பகுதிக்குள் நுழைந்து சத்தம் கேட்ட திசையை நோக்கி நடந்தாள்.

வனத்திற்குள் இருக்கும் மரங்களை யாராலும் அரசாங்க அனுமதியின்றி வெட்ட முடியாது. மலையடிவாரத்தில் இருக்கும் கிராமத்தில் வசிக்கும் மக்கள் எரிபொருள் தேவைக்காக வனத்திற்குள் புகுந்து உடைந்த மரக்கிளைகளையும், காய்ந்த சுள்ளிகளையும் பொறுக்கி வரும்  வழக்கம் உண்டு. ஆனால் அவை தானாகவே மரத்தில் இருந்து உதிர்ந்தவையாகத் தான் இருக்கும். இல்லையென்றால் மழையிலோ இல்லை காற்றில் தானாகவே விழுந்த மரமாக இருக்கும். எந்த மரத்தையும் அவர்கள் வெட்ட மாட்டார்கள். அனுமதியின்றி யாராலும் அப்படி மரத்தை வெட்டவும் முடியாது என்பதால் தான் தாமரையின் மனதில் சந்தேகம் வந்தது.

சுற்று வட்டார கிராமத்து மக்கள் வனத்தை தங்களுடைய தெய்வமாகத் தான் கருதுகிறார்கள். வனதேவதையை வழிபடுபவர்கள். மரத்தை வெட்டுவது தெய்வக் குற்றம் என்று நினைப்பவர்கள்.

கொஞ்சம் உட்பகுதியை தாமரை அடைந்த போது தாமரை அங்கே அதிக ஆள் நடமாட்டத்தை உணர்ந்தாள். ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு என்ன நடக்கிறதென்று பார்த்தாள். அப்போது அவளுடைய தோளில் ஒரு கை விழுந்தது.

” என்ன பாப்பா? காட்டுக்குள்ள தப்பித் தவறி வந்துட்டா? வழி மறந்து போச்சா? நல்லா இருட்டப் போகுது. காட்டு விலங்குகள் வெளியே வர நேரம் இது. இங்கே சுத்தாம ஜாக்கிரதையா வீடு போய்ச் சேரு. இருட்டில் ஆபத்து அதிகம். வா, நான் உனக்கு வழி காட்டறேன்” என்று அவள் எதிரே நின்ற ஒரு ஆஜானுபாகுவான ஆள் சொன்னான்.

அவனைப் பார்த்தால் தாமரைக்குத் தனது கிராமத்தில் வசிப்பவனாகத் தெரியவில்லை. புதியவனாக இருந்தான். சுதாரித்துக் கொண்டு பதில் சொன்னாள் தாமரை.

” ஆமாம் அங்கிள். நான் ஆத்தங்கரையில் இருந்து ஏதோ யோசிச்சுக்கிட்டே நடந்து வந்தேனா? ரொம்ப தூரம் உள்ளே வந்துட்டேன். பயந்து போய் நின்னுட்டேன். எங்கேயோ நரி ஊளையிடற சத்தம் கேட்ட மாதிரி இருந்துச்சா? அதுனால தான் பயந்து போய் மரத்துக்குப் பின்னால ஒளிஞ்சுக்கிட்டேன்” என்று பயத்துடன் தாமரை பேசிய வார்த்தைகளை அந்தப் புதியவன் நம்பி விட்டான்.

” நல்லவேளையா என் கண்ணில பட்டே!  வா, உனக்கு வெளியே போற வழியைக் காட்டறேன். இனிமே இந்த மாதிரி ராத்திரி  நேரத்தில் காட்டுக்குள்ள தனியா வராதே பாப்பா ” என்று சொன்னதோடு, தாமரையைக் காட்டின் எல்லை வரை கொண்டு வந்து விட்டான்.

வரும் வழியில் தாமரை தன்னைச் சுற்றி இருந்த நிலவரத்தை விழிப்புணர்வுடன் கண்காணித்துக் கொண்டே நடந்து வந்தாள். பகல் நேரத்தில் இருப்பதை விட,  இரவு நேரத்தில் காட்டில் நடமாட்டம் அதிகம் இருப்பதை கவனித்து மனதில் போட்டுக் கொண்டாள். அதுவும் அவள் காட்டுப் பகுதியில் பார்த்த அனைவரும் புதியவர்களாக இருந்தார்கள். அதோடு தாமரையோடு நடந்து வந்தவனுக்குத் தெரிந்தவர்களாகவே அவர்கள் இருந்தார்கள்.

‘ இங்கே ஏதோ திருட்டுத்தனம் நடக்குது. இவங்களைப் பாத்தா ஊருக்குப் புதியவங்களாத் தெரியுது. பகல் நேரத்தில் மரங்களை வெட்டினா, கிராமத்தில் வசிக்கறவங்க நிச்சயமாய் கண்டுபிடிச்சுருவாங்கன்னு ராத்திரியில் திருட்டுத்தனம் பண்றாங்க. இதை எப்படியாவது நிறுத்தணுமே? வனத்துறை அதிகாரி இங்கே பக்கத்தில் எங்கே இருப்பார்னு கண்டுபிடிச்சு அவர் கிட்ட கம்ப்ளைன்ட் செய்யணும். இதுக்கு யார் கிட்ட உதவி கேட்கலாம்? ‘ என்று யோசித்துக் கொண்டே நடந்தவளுக்கு அந்த முதியோர் இல்லத்தில் இருந்த முதியவர்கள் நினைவிற்கு வந்தார்கள்.

ஓய்வு பெற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், கல்வித்துறை நிபுணர்கள், அரசாங்க அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், மருத்துவர்கள் என்று பலரும் சேர்ந்த சமூக ஆர்வலர்களின் கூட்டணி அது என்பதால் அவர்களிடம் போவதே சரியென்று நினைத்தாள்.

இரவு வீட்டை அடைந்த தாமரை உடனே அந்த முதியோர் இல்லத்தில் இருக்கும் ஒரு முதியவரிடம்  தனது சித்தியின் மொபைலில் பேசினாள்.

” அங்கிள், எனக்கென்னவோ அங்கே இருந்தவங்க நடவடிக்கை, பேசினதெல்லாம் பாத்தா,சந்தேகமா இருந்துச்சு. யார் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணறதுன்னு எனக்குத் தெரியலை. நீங்க தான் இந்த விஷயத்தில் ஹெல்ப் செய்யணும் ” என்றாள் தாமரை.

” கண்டிப்பா. ஆனா அவங்க ஏற்கனவே எவ்வளவு மரங்களை வெட்டிச் சாய்ச்சிருக்காங்களோ தெரியலை. காடுகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படறதுக்குள்ள நாம் தகுந்த ஆக்ஷன் எடுத்தாகணும். நான் நாளைக்கே விசாரிச்சு, வனத்துறை அதிகாரிகளை அங்கே வந்து பார்வையிடச் சொல்லறேன். இதில ஒரு பெரிய கும்பலே ஈடுபட்டிருக்கலாம். எதுக்கும் நீ ஜாக்கிரதையாக இரு. தனியாப் போய் அந்த முரடங்க கிட்ட மாட்டிக்காதே! ” என்று தாமரைக்கு அறிவுரைகள் சொன்னார் அவர். ஆனால் தாமரையில் தான் அநியாயம் நடப்பதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாதே? தான் கோல்டன் தமிழச்சியாக உருவெடுக்க வேண்டிய அடுத்த வாய்ப்பு வந்துவிட்டது என்று மட்டும் தாமரைக்கு நன்றாகப் புரிந்தது.

தாமரையின் சிந்தனைக்கேற்ற மாதிரி அடுத்த நாள் வகுப்பில் ஆசிரியர், பூமியில் தற்போது நிகழ்ந்து வரும் காலநிலை மாற்றம் பற்றியும், பூமியின் வெப்பம் கூடி வருவது பற்றியும் வகுப்பு எடுத்தார்.

” காடுகளை அழிப்பதால் பூமியின் சமநிலை பாதிக்கப் படுகிறது. மழை குறைகிறது. வெப்பம் கூடுகிறது. காடுகளை நாம் நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் ” என்று ஆரம்பித்தவர், “சிப்கோ இயக்கம்” பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

” சிப்கோ என்றால் ஒட்டிக் கொள்வது என்பது அர்த்தம். வட இந்தியாவில் மலைகளும் காடுகளும் நிறைந்த பகுதியில் மரங்களை வெட்டுவதைத் தடுக்க, அந்தக் காட்டுப் பகுதியில் வசித்த பெண்கள், மரங்களைக் கட்டிக் கொண்டு நின்றார்கள். இந்தச் செயல் தான் வரலாற்றில், ‘சிப்கோ இயக்கம் அல்லது சிப்கோ ஆந்தோலன்( போராட்டம்) என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பெண்கள், தங்களுடைய  முயற்சியால் மரங்கள் வெட்டப் படுவதை ஓரளவு தடுத்தார்கள். இந்த இயக்கத்தைத் தலைமையேற்று நடத்தியவர் நவஜீவன் ஆசிரமத்தை நடத்தி வந்த காந்தியவாதியான சுந்தர் லால் பஹூகுணா என்ற சமூக ஆர்வலர்.

படிப்பறிவு இல்லாத, 50 வயதான கவுரா தேவி (இவர் கிராம மண்டலத்தின் தலைவி) என்பவரின் தலைமையில், உத்தரப் பிரதேசத்தில் இருந்த ரேனி என்றழைக்கப் பட்ட கிராமத்துப் பெண்கள் மரங்களைத் தழுவிக்கொண்டும், பின்வரும் முழக்கங்களை முழங்கிக்கொண்டும், மரம் வெட்ட வந்தவர்களைத் தடுத்தார்கள்.

‘இந்தக் காடு எங்கள் தாயின் வீடு, இதை எப்பாடு பட்டாவது நாங்கள் காப்போம்.

மரத்தைக் கட்டித் தழுவுங்கள் வெட்டப்படுவதிலிருந்து அவற்றைக் கட்டித் தழுவுங்கள் இது நம்முடைய மலையின் சொத்து பறிக்கப்படுவதிலிருந்து அவற்றைக் காப்பாற்றுங்கள்’ என்று அவர்கள்  முழங்கியதால் ஓரளவு மரங்கள் காப்பாற்றப் பட்டன”

என்று ஆசிரியர் கூறிய தகவல்கள் தாமரையின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.

‘ நாம் கவலைப்பட்டது சரி தான். மரங்களை வெட்டிக் காடுகளை அழிக்கும் கயவர்களிடம் இருந்து இயற்கையைக் காப்பாற்ற வேண்டியது மிகவும் அவசியமான செயல். நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும்’ என்று முடிவெடுத்தாள்.

கோல்டன் தமிழச்சி மீண்டும் தான் எடுத்துக் கொண்ட பொறுப்பை எப்படி முடிக்கப் போகிறாளோ? அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

தொடரும்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *