காகத்தின் கவலை

காட்டில் அழகான அடர்ந்த ஆலமரம் ஒன்று இருந்தது. அங்கே நிறையப் பறவைகள் வசித்து வந்தன. காகம், மைனா, கிளி, கொக்கு என நிறையப் பறவைகள்.. இன்னமும் நிறையப் பறவைகள் அங்கே வசித்தன.

வசந்த காலம் தொடங்கி விட்டால் அந்த இடமே மகிழ்ச்சிக் கடலில் மிதக்கும்.

ஒவ்வொரு பறவைகளும் தங்களது குழந்தைகளுக்கு உணவு ஊட்ட, பறக்கச் சொல்லித் தர, என அத்தனை மகிழ்வாக அந்த இடம் இருக்கும்.

இப்போதும் அது போலத் தான் வசந்த காலம் துவங்கி இருந்தது. ஒவ்வோரு பறவைகளும் தங்களது குழந்தைகளுக்கு உணவு எடுத்துக் கொண்டு வந்து தாய் பறவை ஊட்டியது.

ஏனோ அன்றைக்குக் காலையில் அந்த இடமே பரபரப்பாகக் காணப்பட்டது. மைனா ஒன்று ஓ… என்று அழுது கொண்டு இருந்தது.

“என்னோட குழந்தையைக் காணோம்.. யாரோ என்னவோ செய்துட்டாங்க”, இப்படி அழ.. அனைத்துப் பறவைகளும் அதைச் சுற்றிக் கூடி இருந்தனர். நான்கு குழந்தைகள் இருக்க தற்போது இரண்டு மட்டுமே இருந்தது. இன்னமும் இறக்கை கூட வளர்ந்து இருக்கவில்லை. நிச்சயமாகப் பறந்து செல்ல வாய்ப்பு இல்லை.

இத்தனை காலம் இங்கு தான் இருக்கிறோம். இது வரைக்கும் யாருக்கும் எதுவும் ஆனதில்லை. இது தான் முதல் முறை.. ஆளுக்கு ஒன்றைப் பேசினர். நிறைய சமாதானம் செய்ய ஆரம்பித்தனர்.

அடுத்த நாள் வேறு ஒரு பறவை அழுதது.. அதனுடைய முட்டையைக் காணவில்லை என்று…

இப்படி தினம் தினம் ஏதாவது ஒன்று நடந்தால் பிறகு நம்முடைய சந்ததிகள் இல்லாமல் போய்விடும் என்று கதறி அழ.. அங்கிருந்த அனைத்துப் பறவைகளுமே கூடி என்ன செய்வது என்று பேச ஆரம்பித்தனர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பதிலைக் கூற இறுதியாக அங்கிருந்து மூத்த பறவையொன்று அங்கிருந்த அனைத்துப் பறவைகளையும் மொத்தமாக அழைத்து அவர்களிடம் கேட்டது.

“உங்க எல்லாருக்கும் யார் மேலேயாவது சந்தேகம் இருக்கிறதா”, என்று கேட்க, அதற்கு யாராலும் பதில் சொல்லத் தெரியவில்லை.

அந்தக் காட்டில், அந்த மரத்தில் வசிக்கின்ற பறவைகள் அனைவருக்கும் ஒரு கட்டுப்பாடு இருந்தது. எக்காரணத்தைக் கொண்டும் பிறருடைய குழந்தைகளைத் தூக்கவோ, உணவாக உண்ணவோ கூடாது என்று..

மைனா மட்டும் தனக்கு காகத்தின் மேல் தான் சந்தேகம் இருக்கிறது.. இவன் தான் என்னுடைய குழந்தைகளை அன்றைக்கு வந்து பார்த்தான் என்று கூற, காகம் மிகவும் வருந்தியது.

உண்மையில் காகம் அது போல எந்த செயலையும் செய்திருக்கவில்லை. அனைத்துப் பறவைகளுமே காகத்தைப் பார்க்க, காகம் தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் எதனுடைய குஞ்சுகளையும் தொந்தரவு செய்யவில்லை என்று கூற..

“சந்தேகம் என்று வந்த பிறகு அதைத் தீர்க்கும் பொறுப்பு உனக்கு மட்டுமே உண்டு. அதனால் நீ தான் இதற்கான காரணத்தைக் கண்டு சொல்ல வேண்டும்”, என்று ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றினர் அங்கிருந்த பறவைகள் அனைவருமே..

மனம் மிகவும் கவலையுற விடிய விடிய அந்த மரத்திலேயே காவல் இருந்தது.

நிச்சயமாக இந்தப் பிரச்சனை முடியும் வரையிலும் எக்காரணத்தைக் கொண்டும் கண்கள் மூடக்கூடாது.

கவனமாகக் காவல் காத்து யார் இதை செய்கிறார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும் இப்படி நினைத்துக் கொண்டது.

அடுத்த நாள் காலை அனைத்துப் பறவைகளும் உணவிற்காகச் சென்று இருக்க காகம் மட்டும் உணவு உண்ணாமல் காவல் காத்தது. அப்போது தான் அதைக் கவனித்தது, பெரிய பாம்பு ஒன்று மெல்ல மரத்தில் ஏறியது.

மைனாவின் குஞ்சு காணாமல் போனது புரிய, வேகமாக அனைத்துப் பறவைகளையும் கத்தி அழைத்தது. மொத்தப் பறவைகளும் சில நிமிடத்தில் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது.

சற்றும் தாமதிக்காமல் காகம் முதலில் பாம்பைக் கொத்த, கூடவே மத்தப் பறவைகளும் அது போலச் செய்யப் பாம்பு உயிர் பிழைத்தால் போதும் என்று அந்த இடத்தை விட்டு ஓடி மறைந்தது.

உண்மை இப்போது புரிய மைனா மிகவும் வருந்தியது. தவறே செய்யாமல் தப்பாகப் பேசி விட்டோமே என்று… காகத்திடம் வந்து தன்னுடைய மன்னிப்பைக் கேட்டுக் கொண்டது.

காகத்திற்கு நிறைய வருத்தம் இருந்தாலுமே மனதார மன்னிப்பு கேட்கும்போது உடனே சரி என்று தலையாட்டியது..

இப்போது பழைய படி எல்லாமே மாறி இருந்தது. அந்த ஆலமரம் அங்கிருந்த பறவைகள் அனைவரும் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தனர்.

குழந்தைகளே! மைனா செய்தது சரி தானே.. தவறு தன் மீது எனத் தெரியும் போது தயங்காமல் மன்னிப்பு கேட்டதே.. நாமும் இந்த நல்ல பழக்கத்தைக் கடைப்பிடிக்கலாம் இல்லையா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *